உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 70
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 70 · 70 / 104

சேரனும், சோழனும், எழினியும், திதியனும் இருங்கோ வேண்மான் எனும் ஐவருடன் பொருநனும், மற்றும் எருமையூரனும் இணைந்த போர்முனையில் எழுவர்படையை மோதிடவே, இளங்காளை நெடுஞ்செழியன் புறப்பட்டான் களங்கண்டான், வென்றிட்டான் என்றும் - பகைவர் முரசு கவர்ந்து முடித்திட்ட சூளுரையால் அரசர்க்கரசனாய் ஆனான் என்றும், அகமகிழ்ந்து கூறுகின்ற செய்தி ஒன்றை அகநானூறில் பாடுகின்றார் அரும்புலவர் நக்கீரர்!

“கதிரவனும் நிலவும் சேர்ந்து மண்மீது வீழ்ந்தாற்போல் களம் பட்டார் சேர சோழ மாமன்னர்” என்று புலவர் கல்லாடனார், புறப்பாடல் ஒன்றின் மூலம் பலமிக்க பாண்டிய இளவல்தனைப் போற்றுகின்றார்!

“ஒருவரோடு ஒருவர் போரிடுதலும் - அந்த இருவரில் ஒருவர் வீழ்தலும் இயற்கை! எழுவரை ஒருவன் மடக்கி அடக்கிடப் பழுதறப் போர்புரிந்தான் என்பதும் எழுவரும் தோற்றார் இவன் ஒருவனே வென்றான் என்பதும் இவ்வுலகிலோர் புதுமை என்பேன்” என்று, இடைக்குன்றூர்க்கிழார் எனும் புலவர், எழுத்தில் வடித்தார் பாண்டிய இளவலின் வெற்றியை!

தமிழ் மன்னர்களே தங்களுக்குள் முட்டி மோதியதைத் தாங்கொணாக் கவலையுடன் குடபுலவியனார் எனும் புலவர், “தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானம்” என்றார்! தடந்தோள் பாண்டியனே இறுதியில் வென்றான் - எனவே தழுவிடத் துடித்தார் அவனை உடனே! வேட்டுவர்கள் புலி பிடிக்கும் பொறியைப் போல் விரிந்து பரந்த செழியனின் வீர மார்பை விரைந்து சென்று தழுவிட விரும்புகின்றேன் என

[Full-page illustration; no printed literary text.]

வித்தாரத் தமிழ் முழக்கும் அப்புலவர்; அவனது முத்தார மார்பைத் தழுவிக் கொண்டார்! தலையாலங்கானத்துப் போர்க்களத்தை - அத் தமிழ்ப் புலவர் வர்ணிக்கும் விதம் பாரீர்! கடும்பகை எதிர்த்துக் கணைகள் பறந்திட திடுமெனச் சாய்ந்தன எதிரியின் யானைகள்! வீழ்ந்த யானையின் துதிக்கையை அதன் வாயுடன் வீர மறவர் வாளால் வெட்டிட; அவை துண்டாகிக் களத்தினில் பரவிக் கிடந்திட்ட காட்சி; கழனியோரத்துக் கலப்பைகள் போல் விளங்கிற்றாமே!

படைத்தலைவர் பல்லோர் மாண்டு மடிந்திட - அவர் பக்கத்தே தம்புதல்வர் மரணமெய்திக் கிடந்தது கண்டு, நெற்றித் தோலும் சுருங்கிய மூதாட்டியர் பலர் சுற்றி நின்று அழுது புலம்பினர் எனினும் வெற்றி இதனினும் வேறொன்று உளதோ என வீர மைந்தரைப் பெற்றதற்குப் பெருமையுமுற்றனர்!

நெடுஞ்செழிய பாண்டியனின் அவைக்களத்துப் பெரும்புலவர் மாங்குடி மருதனார் என்பவரோ; கடும் போரிட்டுக் களவாகை சூடி வரும் காளையாம் பாண்டியனின் திறம் வியந்து களிப்புற்றார் எனினும் - அவன் களம் காணும் ஆசையிலே சுழல்வது கண்டு சலிப்புற்றார்! மாவீரன் பாண்டியனின் போர்த்தாகம் குறைக்க “மதுரைக் காஞ்சி” யெனும் நூல் செய்தார் - அந்த மாங்குடி மருதனார் பாடிய புறப்பாட்டில்; “கடலைக் கிழித்துச் செல்லும் மரக்கலம் போல் களத்தில் ஊடுருவும் யானைப்படையின் பின்னே வேல்கொண்ட வீரர் அறுத்தெடுத்த கோல் கொண்ட மன்னர்தம் தலையை அடுப்பாக்கி குருதிநீர் பொங்குகின்ற உலையில் - போரில் கொலையுண்டோர் தசையினைக் கொதிக்க வைத்து தோள்களாம் துடுப்பு கொண்டு துழாவிய உணவால் வேள்வி நடத்துகின்ற பாண்டியனே!”

என்று, பலபடப் பாராட்டிவிட்டு - அவனது பகைவரையும் புகழ்கின்றார்! மாற்றார் எனும் பெயர் பெற்று - உன்னிடம் தோற்றார் எனினும்,

விழுப்புண் பெற்று வீழ்ந்ததாலே; வீரர் உலகில் என்றும் அவர் வாழ்கின்றாரே! என எதிர்த்தோர்க்கும் ஏற்றம் தந்து உதிர்த்தார் கவி முத்துக்களை!

“வேந்தன் இனிப் போர் விடுத்து வாள்வீரர் வாழ்த்த வாழ்க!” என்றார்! “வள்ளலாய் நின்று இல்லாதார்க்கு வாழ்வளித்திடுக!” என்றார்! “வளையல் அணி மகளிர் தரும் தேறல் உண்டு; வாழ்வெலாம் இன்பமும் அமைதியும் கொண்டு, வையம் போற்றிடத் திகழ்க!” என்றார்!

“ஒழுக்கம் காப்பவரே உயர்ந்து வாழ்வோர் என்றும், அஃதிலார்; உலகில் வாழ்வோர் எனப்படார் என்றும் அறிக!” என்றார்!

தமிழ்ப் புலவர் கூட்டம் புகழ, தமிழ் எழுத்து ஒவ்வொன்றும் போற்ற தலையாலங்கானத்தான் வாழ்ந்தான்! மருதனார் இயற்றித் தந்த “மதுரைக்காஞ்சி” பெற்று - அந்த மாமன்னன் வாழ்ந்தான்! “நெடுநல்வாடை”தனை நக்கீரர் பாடி வழங்க நெடுஞ்செழிய இளவல் நெடிதுநாள் வாழ்ந்து நீள்புகழைத் தமிழ் நிலத்தில் நட்டானே!

குறிப்பு:

- அகநானூறு பாடல் 36 — நக்கீரர் பாடியது. - புறநானூறு பாடல் 25 — கல்லாடனார் பாடியது. - புறநானூறு பாடல் 76 — இடைக்குன்றூர்க் கிழார் பாடியது. - புறநானூறு பாடல் 19 — குடபுலவியனார் பாடியது. - புறநானூறு பாடல்கள் 24, 26 — மாங்குடி மருதனார் பாடியது.

(இப்புலவர் பெருமக்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறித்து இயற்றிய பாடல்களில் அடங்கியுள்ள கருத்துத் தொகுப்பே இது.)

*

சென்று வா மகனே; செருமுனை நோக்கி!

காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்துச் சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று, போர்தொடுத்துக் கொண்டிருந்த காலமது!

அந்நாளில் ஓர் களத்தில், தாய்நாடு காக்கத் தாவிப் பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதிகேட்டுத் தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்துக் கிளியொருத்தி! அனல் போலும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த அவள் கணவனும் வந்திட்டான்! புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்!

“தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்தாய்” என்றான். “இல்லை அன்பே! முல்லைசூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால், நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனித் தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன்; அடைபட்ட கண்ணீர், அணை உடைத்ததத்தான்” என்றாள்.

அவன், குகைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென, பகைவிட்டுக் கிளம்பும் எரிமலையென, பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்; சூளுரைத்தான்; சுடர்முகம் தூக்கினான்; “சுக்குநூறுதான் சூழ்ந்துவரும், பகை!” என்றான், “நாடு மீட்காமல், வீடு திரும்பேன்” என்றான்!

[Full-page illustration; no printed literary text.]

நங்கையோ, நகைமுழக்கம் செய்து “நடந்திடுக கண்ணே” என்றாள்! “திரும்பி வருவேனோ இல்லையோ எதற்கும் இப்போது ஒரு முத்தம் இந்தா - திரும்பு” என்றான்! கொடுத்தான் - பின் தொடுத்தான் பகைவர் மீது பாணம்! போர்! போர்! போர்! என முழங்கிற்று முரச ஒலி!

*

பார்! பார்! பார்; அந்தப் பைங்கிளியின் உரிமையாளன் - பகைவர் மீது பாய்ந்து கொல்லும் வீரம் பார்! என்று பட்டாளத்துத் தோழரெல்லாம் வியந்துரைத்தார்! அந்தக் கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள், களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய்க் குவிந்து வரும் வெற்றிகளைக் கேட்டுவிட்டு!

*

கோட்டைகள் விடுபட்டன! எதிரியின் குதிரைக்கால்கள் உடைபட்டன! வேழப்படை முறிபட்டது! வேல்கள் பொடிபட்டன! எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது! கேட்குது! எனக் குதித்திட்டாள் - புதுப்பண் அமைத்திட்டாள்!

*

வீரர்கள் வந்தனர் - வெற்றி உன் கணவனுக்கே என்றனர்! வேந்தனின் தூதுவர் வந்தனர்! வாழ்த்துக்கள் வழங்கினார்! வீட்டோரத்துத் தோழிகள் வந்தனர் - வெற்றி நீட்டோலை வாசித்து மகிழ்ந்தனர்! அந்த அழகி, ஆனந்தக் கண்ணீர் பொழிந்தாள் - அப்போது, ஏனந்த மனிதன் வந்தானோ? இழவுச் சேதி சொல்வதற்கு! - “என்னருமைப் பெண்பாவாய்! கண்ணல்ல - கலங்காதே! களச்சேதி, கடைசிச் சேதி கேள்” என்றான் - அந்தோ! மாவிலைத் தோரணங்கட்டி, மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன கண்ணாளன் மார்பிலே வேல்தாங்கி நல்ல