சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 65 · 65 / 104
நீரணி மாடத்து வேங்கையின் ஓவியம் ஒன்று பட்டிடவே உண்மை வேங்கை போல் ஓவியத்திறன் அமைந்ததாலும் உளத்தில் பெண் யானைக்கும் இன்ப மயக்கம் இருந்ததாலும் உயிர் வேங்கைதான் உடன் பாய்ந்து வந்து - தன் உயிர் குடிக்கப் போகுதென்று அஞ்சியோடி நீராடிக் கொண்டிருந்த பெண்களையும் கலங்கச் செய்து, அவர்கள் நிர்வாணக் கோலத்தில் நீருக்குள்ளிருந்து துள்ளி நிலைகுலைய எழுந்தோட முயன்று பின்னர் நிலையறிந்து நாணமுற்று நீருக்குள் சிதறலானார்!
காதலி யானைக்கு விளைந்த துன்பம் யாதோ என்று களிற்று யானை முழக்கம் செய்து துதிக்கை தூக்கி போருக்கு வாள் தூக்கிப் புறப்பட்ட தளபதி போல் யாருக்கும் அடங்காமல் பிளிறிற்றங்கே! பெரும்பாடுபட்டுப் பாகன் அங்குசத்தால் அடக்கப் பார்த்து - அது வெறும் பாடாய்ப் போனதினால் வேறு வழியின்றி - அதன் அருங்காதல் நிறைவேற்றப் பெண்யானையினை அருகழைத்துக் கொண்டு வந்து அமைதி செய்து விரிசல் கண்ட மரக்கலத்தின் பகுதியொன்றை விரைவாகப் பிசின் வைத்துப் பழுது பார்த்த மாலுமியின் திறமைக்கீடாய் - அந்த மாவுத்தன் யானைகளின் அமளிதனை அடக்கிவிட்டு மகளிர் கூட்ட நடுக்கத்தையும் போக்கினான் என்று மாகவிஞர் “கரும்பிள்ளைப் பூதனார்”, பரிபாடலிலே கூறுகின்றார்.
“மருத்துவன் நல்லச்சுதனார்” என்பவர்தான் - இந்த மாம்பழப் பாடலுக்கு பாலையாழ்ப்பண் வகுத்துப் பாடிய பாவலராம்!
*
“ஆங்க, அணிநிலை மாடத்து அணிநின்ற பாங்காம் மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று நடத்த நடவாது நிற்ப; மடப்பிடி அன்னம் அனையாரோ டாயா நடைக்கரிமேல் செல்மனம் மாலுறுப்பச் சென்றெழின் மாடத்துக்
கைபுனை விளர்வேங்கை காணிய வெருவுற்று மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புறச் செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதரக் கங்கை மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச் சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் திசையறி நீகானும் போன்ம்”
*
(பரிபாடல் : பாடல் : 10 பாடியவர் : கரும்பிள்ளைப் பூதனார் பண் வகுத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார்)
பொருள் விளக்கம் :
பசும்பிடி = பசுமையான இலை. இளமுகிழ் = இளம் அரும்பு. மௌவல் = முல்லை. கழுநீர் = நீலோற்பலமலர். அரவிந்தம் = தாமரை. குல்லை = வெட்சி; துளசி. வகுளம் = மகிழம்பூ. நறவம் = நறுமணம். வங்கம் = வண்டி. பாண்டி = எருது. உண்கண் = மை எழுதிய கண். ஆயிதழ் = அழகிய இதழ். தமனியம் = பொன். மாலுற்று = காதல்கொண்டு. சிதைதர = சிதறிடுதல். தோட்டி = அங்குசம். இதை = கப்பலின் பாய். இரிய = பழுதுபட. பயின் = ஒட்டப்பயன்படும் பிசின். நீகான் = மாலுமி.
மடப்பிடி = பெண்யானை. வயக்கரி = ஆண்யானை.
*
முரசு கட்டிலில்
மோசுகீரனார்!
தும்பை மலர் எடுத்துச் சரம் தொடுத்துத் தொங்க விட்ட நீர்வீழ்ச்சித் தாடி! கம்பஞ் சோறுண்ணும் பழக்கத்தால் கடுகளவும் கட்டுக் குலையாத நெடுநல் மேனி! அம்பின் முனையும் தோற்றுவிடும்படியாக அழகான கூர் விழிகள்!
அதோ வருகின்றார், அமுதத் தமிழ்மொழியே அரும்புலவர் உருவெடுத்து வருவது போல்! மோசுகீரனார் என்பது அவர் பெயர்; அவருடல் தழுவி வீசுகின்ற தென்றல் கூடத் தமிழாய் மணக்கும்; மூவேந்தராம் சேர சோழ பாண்டியர்க்கு - இந்தப் பாவேந்தர் மீது தனி மதிப்பே உண்டென்பர்! முடியேறியிருக்கும் மும்மன்னர் தலையினிலே - தமிழ்க் குடியேறியிருக்கும் வரலாறு பல உண்டு இலக்கியத்தில்! தமிழ் காக்கும் மூவரில் ஒருவன் தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறையாம்!
பதிற்றுப்பத்தில் எட்டாம்பத்துப் பாடி - அவனைப் பாராட்டி மகிழ்வித்த செயலுக்காக - அவன் ஆண்டிருந்த நில முழுதும் கொடையாக அரிசில் கிழார் எனும் புலவருக்குப் பரிசெனவே அறிவித்து அதனைப் பெற அவர் மறுத்திடவே அவரையே தனக்கு அறவுரை கூறும் அமைச்சராக ஆக்கிக்கொண்டான்!
செந்தமிழ்ப்பால் வைத்திருந்த பாசத்தாலே செங்கோல் பிடித்திருந்த அவன் கையில் சிலவேளை எழுதுகோலும் ஏறிக்கொண்டு சிறப்புமிகு இலக்கியங்கள் படைத்ததுவாம்! முதுகவிஞர் மோசுகீரனார்; மலர்க்குடத்தில் மதுவருந்த வருகின்ற வண்டே போல் மதிமன்னன் சேரமானைச் சந்திக்க அதி தொலைவு நடந்து வந்து, அரசனது மாளிகையை அடைந்து விட்டார்.
அயர்வுடனே மன்னன் உறங்குவது கேள்வியுற்று அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார். அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு; அதனாலே சுற்றுமுற்றும் பார்க்கலானார் ஆங்கோர் இடம் படுப்பதற்குக் கிடைக்குமா என்று!
வீர முரசம் வைக்கின்ற கட்டிலொன்று வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக் கண்டார்! குருதி வழியும் போர் முகத்தில் கொட்டுகின்ற முரசு வைக்கும் கட்டிலென்று அறியாத புலவர் ஏறு கண்ணுறங்க வசதியெனப் படுத்துக்கொண்டார்! வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே வெட்டி வீழ்த்தும் காலம் அது!
நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் - அந்தப் போராட்டக் கள முரசை அகற்றியதால் விபரம் தெரியா வித்தகப்புலவர் - அதில் விழிகளை மூடி உறங்கலுற்றார்!
வெகு தொலைவு நடந்த களைப்பில் வியர்வை முத்து உடலில் விளைய மிகு உறக்கம் கொண்டு விட்டார்; மெய் மறந்து குறட்டை விட்டார்! மயில் அணைத்து மஞ்சத்தில் கிடந்த மன்னன், துயில் களைந்து எழுந்து விட்டான்! மாளிகையின் முன்புறத்தில் உலவுதற்கு மாமன்னன் வந்தபோது வியப்புற்று முரசு கட்டிலருகே விரைந்தான் - ஆங்கு மோசுகீரனார் உறங்குதல் கண்டான்!
“வாள் எடுத்து வந்திடவோ அரசே?”யென்று ஆள் ஒருவன் வணங்கி நின்றான்... போர் முரசம் வைக்கின்ற கட்டில் மீது யார் ஒருவர் படுத்தாலும் அவரைத் துண்டித்து உயிர் பறித்தல் - ஒரு கண்டிப்பு ஆணையென இருப்பதாலே மண்டியிட்ட வீரன், மன்னனது கண்ணசைவை மரியாதையுடனே எதிர்நோக்கிக் கொண்டிருந்தான்!
[Full-page illustration; no printed literary text.]
அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்; அவனது மொழியில் ஆத்திரம் வழியும்; என்றந்த வீரன் நினைத்ததற்கு மாறாக “எடுத்துவா விசிறியை!” என்றான் வேந்தன்! காவலனோடிக் கொண்டுவந்த கவரியினைக் கைகளில் ஏந்திக் கவிஞர் மீது கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான் நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன்!
களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில் கவரி வீசுதலை மன்னன் நிறுத்திடவில்லை... நெடுநேரம் கழிந்தபின்னர் எழுந்த புலவர்; திடுமெனக் குதித்தார், கட்டிலில் இருந்து! “மன்னவனே என்ன இது?” எனத் துடித்தார்! — “இந்தச் சின்னவன் பெற்ற பேறு” என்றான், சேரன்!
“அரசு ஆணையை அறிவேன் எனினும் முரசு கட்டிலென அறியாது படுத்தேன். ஆவி போக்கிடும் தண்டனையிருந்தும் — எனைக் கூவியெழுப்பிக் கொல்லுதல் விடுத்து கொற்றவனே தன் கையால் எனக்குக் குளிர் சாமரம் வீசுகின்ற காட்சி என்னே?” என்றயர்ந்தார் புலவர்!
“தமிழுக்குத் தொண்டு செய்தால் - அந்தத் தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்ற தன்னலத்தால்; தமிழேவடிவாக என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு நான் செய்த தொண்டு இஃதெ” என்றான் சேரன்! தேன் பெய்த பழச்சாறாய்ப் பாட்டொன்றைப் பரிசாய்த்தந்தார் புலவர்!
*
“மாசற விசித்த வார்புஉறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார், பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக், குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத், தெறுவர,
