உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 64
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 64 · 64 / 104

*

“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;

[Full-page illustration; no printed literary text.]

செல்வத்துப் பயனே ஈதல்; துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.”

*

(புறநானூறு : பாடல் 189 பாடியவர் : நக்கீரனார்)

பொருள் விளக்கம் :

தெண்கடல் வளாகம் = தெளிந்த கடல் நீர் சூழ்ந்த உலகம். ஒருமையோர் = தனியுரிமை வேண்டுபவர். துஞ்சான் = தூங்காதவன். கடுமா = விரைந்தோடக்கூடிய விலங்கினம். துய்ப்பேமெனின் = யாமே அனுபவிப்போம் எனின். தப்புந பலவே = பல தவறுகளுக்கிடமாகும். நாழி = தானிய அளவை.

*

பரிபாடல்- பன்மலர்ப் பூங்கா!

ஓங்கு பரிபாடல் என ஒலிக்கின்ற சங்க நூலின் காலத்தைக் கணக்கிட்ட ஆய்வறிஞர் கடைச் சங்கக் காலமென்பார் - அதன் காரணத்தை அறிவதற்குக் கடுமுயற்சி தேவையில்லை!

வடமொழி ஏடுகளில் இடம் பிடித்த இதிகாச புராணமெல்லாம் - தமிழர்களின் மரபென்றும் கலையென்றும் மாண்புமிகு பண்பாட்டுச் செல்வமென்றும் பரிபாடல் வரிகளிலே மெல்ல மெல்ல பழத்தில் நுழை ஊசியென நுழைந்து பக்குவமாய் ஊடுருவிப் பழந்தமிழ் இலக்கியம் போல் காட்டிக்கொள்ளும்!

ஆயினும் ஒன்று சொல்வேன்! ஆழ்கடல் முத்தெடுத்துக் கோத்திட்ட ஆரம்போல், ஒன்பான் மணிகளையும் ஒருசேரப் பதித்துவைத்து ஒளிவீசும் பதக்கம்போல், அழகு தமிழ்ச் சொற்களை அடுக்கிவைத்து அற்புதம்தான் புரிந்துள்ளார் அந்நாள் புலவர்!

“பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்தவாய் ஆம்பல் கைபோற் பூத்த கமழ் குலைக்காந்தள்” என்று மலைவளச் சிறப்பை உயர்த்திடும் மலர்கள் குறித்துப் பாடல்கள் பல உண்டு; பரிபாடல் தொகுப்பில்!

“மல்லிகை மௌவல் மணங்கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல்லினர் நாகம் நறவஞ் சுரபுன்னை எல்லாம் கமழும் இருசார் கரை” - என சொல்லும் பாடல் வையை நதியினைப் பற்றி!

கரையின்றிப் பெருகியோடும் காட்டாறு குறித்துப் பாடும்போதோ “ஆடலறியா அரிவை போலவும் ஊடலறியா உவகையள் போலவும்” ஓடிடும் நதியென உவமை கூறிடும்!

எனவே, ஓங்கு பரிபாடல் எனும் உயர்தனிப் பொற்சுரங்கம் தன்னில் புராணமெனும் மண்ணின் துகளும் கொட்டும். பொன்னாம் தமிழ்ப் பண்ணின் சுவையும் சொட்டும்.

கரை மோதி வருகின்ற வையை வெள்ளம் கடுவேகம் காட்டி வருகின்ற ஒலியைக் கேட்டு கண்கசக்கித் திடுக்கிட்டு விழித்தவர்கள் - இந்த மண்மீது இருப்பதையே மறந்துவிட்டு தேரிற் பூட்டும் குதிரைகளை வண்டியில் பூட்டி அது தெரியாமல் மீண்டும் தேரிற் பூட்டுவர் எருதுகளை!

இப்படித் திகைத்துத் தடுமாறி ஆடியோரைப் பரிபாடல்; “திண்தேர்ப்புரவி வங்கம் பூட்டவும் வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும்” என்று தித்திக்கும் தமிழில் தீட்டிக் காட்டும்!

போராடப் போகின்ற வீரர் படைச் சிறப்பு பார்த்தலுத்துப் போயிருந்தால் நீராடப் போகின்ற பெண்கள் நடையழகு காணலாமா? பரிபாடலாம் ஒரு பலகணி வழியாக - அந்த அரிவையர்தம் அழகெல்லாம் பருகலாமா?

அன்ன நடை - மிகச் சின்ன இடை - சுவைக் கன்னல் மொழி - உடல் மின்னல் ஒளி! கட்டுக்குலையாப் பட்டுமேனியில் - வாழை மொட்டிரண்டு முளைத்துக் கொண்டு ஆடவர் இதயம் தொட்டிழுத்துத் துளைத்துப் போடும்!

“ஆயிதழ் உண்கண் அலர் முகத் தாமரை தாள் தாமரை தோள் தமனியக் கயமலர்

[Full-page illustration; no printed literary text.]

தம்கைப் பதுமம் கொங்கைக் கயமுகை செவ்வாய் ஆம்பல் செல்நீர்த் தாமரை” எனப் போற்றிப் புகழ்கின்ற பரிபாடல் - அந்தப் பொற்கொடியார் அங்கம் ஒவ்வொன்றும் மலர் என்றே பாடும்! மலர்ந்த தாமரையாம் மங்கையின் மதிமுகம்! மலராத் தாமரை மொக்காம் அவளின் மார்பகம்! கைமட்டுமல்ல; அந்தக் காரிகையின் கால்கூடத் தாமரையாம்!

கவிஞன் எழுத்தின் கற்பனைப் பெருக்கை - ஒரு கதை போல் இங்கே காணலாம் வாரீர்!

நீரணி மாடத் தருகே காலணியாம் சிலம்பு கொஞ்ச நேரிழையர் கூட்டமொன்று நீராடிக் களிப்பதற்கு நெருங்கிற்றாங்கே! நிலவொளி போல் வெண்மை உடை ஒருத்திக்கு நீலவான நிறமுள்ள உடையோ மற்றொருத்திக்கு பச்சை வண்ண ஆடை நெகிழ ஒரு பாவை பவள வண்ணச் சேலையுடன் பிறிதோர் பூவை! பாடிப் பாடிப் பாய்புனல் ஆடினர் ஆடியாடி அகமிகத் துள்ளினர்.

அப்போது

*

வையைப் புனலில் வழக்கமாய் நீராட்டும் வாலிப யானையுடன் ஒரு பாகன் வந்திட்டான். வந்த யானையின் கண்ணில் பட்டது மடப்பிடியொன்று! வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த களிறு வாயைப் பிளந்து அந்தப் பெண்யானையைப் பார்த்து, வழியை மறந்து தனியே நின்றது! பாகன் பலமாய்க் குத்தி நகர்த்தியும் யானை அசைந்திட மறுத்தே விட்டது. காதல் கொண்ட களிற்றைக் கண்டு கன்னி யானையும் காதை அசைத்தது! அசைத்தது! கண்ணொடு கண்ணினை நோக்கிய பின்னர் காதல் வாய்மொழி எதற்கெனக் கருதி களிறும் நடந்தது மெதுவாக - அதன் காதலி யானையும் மெல்லத் தொடர்ந்தது!

நிலை மறந்து காம மயக்கத்தில் சிக்குண்ட பெண்யானை கண்ணில்,