உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 63
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 63 · 63 / 104

பொருள் விளக்கம் :

ஆடவர்க் கடந்த = வீரர்களை வென்ற. வல்வேல் = வலிமையான வேல். பின்றை = பிறகு. மிடிமை = வறுமை.

*

மறு பிறப்பு

உண்டென்றால்

மறக்க

நேரிடுமோ?

மறுபிறப்பு மாந்தர்க்கு உண்டென நம்பிய மங்கையொருத்தியின் காதல் நினைவினை; மழைத் தமிழ்ப்புலவர் அம்மூவனார் என்பார் மாம்பழக் கதுப்பென வழங்கினார் அன்று!

நற்றிணை நானூறு தொகுப்பில் ஒரு பாடலில் கற்பினை அணியாய்ப் பூண்டவோர் அழகி; காதலன் வருகைக்குக் கடுந்தவம் இருந்து காதல் வெப்பத்தால் கண்ணீரில் குளித்தாள்!

“வருவதாய்ச் சொன்ன நாளும் முடிந்தது; வந்து தருவதாய்ச் சொன்ன இன்பமும் தொலைந்தது! மூங்கிலைப் போல் தோளென்று முத்தங்கள் தந்தார் - அது ஏங்குதல் காணாமல் அவர் எங்கு சென்றார்?

மூடுகின்ற இமைகளுக்கு வேலையின்றி விழியிரண்டும் காடு நோக்கி வழிபார்த்துக் கதிகலங்கிக் காத்திருக்கும்! சேதி அறிந்து இந்தச் செந்தாமரை மொட்டுதனைச் சேர்த்தணைத்துச் சுகம் அளிக்க வாராரோ?

அறிவும் என்னைக் கைவிட்டு அடியோடு விலகியது; அந்திமாலைப் பொழுதுவர காதல் நோயோ பெருகியது! அவரின்றி அணுப்பொழுதும் வாழ்வதிலோர் பயனில்லை; சுவரின்றி இருக்கின்ற கூரைக்கு வீடென்று பெயருண்டோ? விரலுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு இசைபொழிய வீணைக்கென்று வேறொரு வழிதான் இனி ஏது? இழுத்து, விட இருக்கின்ற மூச்சுப்பைகள் இரண்டில் ஒன்றை இழந்தாலோ கவலையில்லை!”

[Full-page illustration; no printed literary text.]

இதயத்தில் சரிபாதி வெட்டுண்டு பிரிந்து போனால் இறப்பதுதான் உயிர் இயற்கை! இதயம்போல் இருந்தோம் நாங்கள்; அவரோ உதயக் கதிர்! மேற்றிசையில் மறைந்து போனார்! இருளகற்றி என்வாழ்வில் ஒளிப்பந்தல் வேய்வதற்கு அருள் சுரந்து அவர் மீண்டும் எழாததுதான் ஏனோ?

மறப்பதற்கு முடியாது என்னால் - அதனால் இறப்பதற்குத் துணிந்துவிட்டேன்! உயிர் துறப்பதற்கு முன்னால் ஓர் அச்சம்! மறு பிறப்பு உண்டென்று கூறுகின்றார்; சரி! எப்பிறப்பு எடுத்தென்ன பயன் எனக்கு? எனை அவருக்கென ஒப்படைத்துவிட்டேன்; எனவே அப்பிறப்பும் அவரை மறக்காமல் வாழ்கின்ற இப் பெண்பிறப்பே வாய்த்திடுமா? என எண்ணி; நோவதாலே வலிமையில்லை நலிகின்றேன்; சாவதற்கும் அஞ்சுவதால் மெலிகின்றேன்!”

என்று தலைமகள் தவித்த நிகழ்ச்சியை நின்று நிலைக்கும் நற்றிணைப் பாடலில், அம்மூவனார் தொகுத்தளித்தார் - அதனைத்தமிழ் அமுதமென அருந்திக் களித்திடுவோம் நாமே!

*

“தோளும் அழியும் நாளும் சென்றென நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தெளவின என்நீத்து அறிவு மயங்கிப் பிறிதா கின்றே நோயும் பெருகும் மாலையும் வந்தன்று யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவது ஆயின் மறக்குவேன் கொல், என் காதலன் எனவே!”

*

(நற்றிணை : பாடல் : 397 பாடியவர் : அம்மூவனார்)

பொருள் விளக்கம் :

அத்தம் = காடு அல்லது பாலை. வாள் = ஒளி. தெளவுதல் = கெடுதல். என் நீத்து = எனைவிட்டு விலகி. பிறிது = வேறு. மறக்குவேன் கொல் = மறந்துவிடுவேனோ?

*

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே!

மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர்! பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை! பிணம் தின்னும் கழுகு போல நீவிர்; பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை!

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு பொருள் தேடி அலைகின்றீர்; போதுமென்ற மனமின்றி! வாழ்வில் வளம் பெருக்கல் ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டோரே; வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்! மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்? வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன் முத்துப் பவளமெனும் மணிகளினால் செய்திட்ட அரிசியையா குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக் குன்றமெனச் செல்வம் குவிக்கின்ற மனிதரிடம்; மன்றமேறி அறிஞர் அண்ணா கேட்டார் - அதனை மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம்! பொதுமை மணம் கமழவேண்டும் என்று; புவியில் நாம் முழங்குகின்றோம் இன்று! புதுமையல்ல இம் முழக்கம்; புலவர் பிரான் நக்கீரர்; புறப்பாடலொன்றில் பொதுமை முரசம் ஆர்க்கின்றார்; கேளீர் தெண் கடல் சூழ் தரணி முழுவதுமே - தன் வெண்கொற்றக் குடையின்கீழ் வரவேண்டுமெனத் தனியுரிமை நிலைநாட்டத் துடிக்கின்ற வேந்தனுக்கும், கனி சுவைக்கக் கல் எறிந்து வீழ்த்துதல் போல் காடகத்தில் விலங்குகளை வேட்டையாட

கண்ணுறக்கமின்றிப் பகலிரவு பாராமல் அலைகின்ற கல்வியறிவற்ற முரட்டு மனிதனுக்கும், மானம் காத்திட அவர்தம் உடலுக்குக் கீழும் மேலும் இரு உடைதான் வேண்டும்! - அவரை மயக்கத்தில் ஆழ்த்தாமல் பசி நீக்கக் கூழோ பொங்கலோ உண்டு களிக்க ஆழிசூழ் இவ்வுலகில் அவரவர்க்கும் ஒரு நாழித் தானியம் மட்டும் போதுமன்றோ?

இப்படி உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும் உண்மைதனை உணர்ந்த பின்னும், வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப் பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ? உலகிற் பிறந்தோர் அனைவருக்கும்; உடல், உள்ளத் தேவையெல்லாம் ஒன்றாக இருக்கும்போது - இதனை நன்றாகச் சிந்திக்காமல் வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்? பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்? தனக்கே எலாம் எனும் தனியுடைமை தகர்த்துத் தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பதுதான் வாழ்வெடுத்த பயனாகும்!

தொகுத்தளித்தார் இக்கருத்தை நக்கீரர்; அதனைத் தொடர்ந்தளித்து வருகின்றார் தொல்புவியில் நல்லோரெல்லாம்!