உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 58
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 58 · 58 / 104

இறையனார் அகப்பொருள் உரையுள் நக்கீரனார் “இளந்திரையம்” எனும் நூல் இவன் இயற்றியது என்பார்! அதியமான் நெடுமானஞ்சிக்காகத் தூதாக வந்து ஒளவை வாதாடியதும் இத்தொண்டைமானிடம்தான் என்பர்! நன்னூலுக்கு உரைகண்ட மயிலைநாதர்; நல்லூராம் “திரையனதூர்” இவன்பேரால் அமைந்ததென்பார்! நற்றிணையில் மூன்றுபாடல் இளந்திரையனின் கற்றறி நெஞ்சக் கற்பனைக்கு எடுத்துக்காட்டாம்!

நாடாளும் மன்னர் பலர் இவன்பால் நட்புக்கொண்டு நாடியிவன் மாளிகைக்கு விருந்தாக வந்திடுவர்; இவனோ

அவரையெல்லாம் வரவேற்று அவர்க்கு வேண்டுவன வழங்கி -, அரசுதனை நடத்துகின்ற அறவழி பலவும் அன்பாய் விளக்கிடுவான்!

அவ்வாறு ஒருமுறை அவன் தந்த அரசியல் அறிவுரைதான்; சவ்வாது மணங்கமழும் சங்கப்பாட்டாய் சாகாது வாழுதென்பேன்!

“வண்டிக்காலாம் உருளையையும் - அதன் அச்சுத் தண்டில்; பாரையும் கோத்தமைத்துப் புவியில் செல்லும் வழி தெளிந்து செம்மை நெறி உணர்ந்து ஒல்லும் வகையெல்லாம் ஒழுங்கான பாதையிலே செலுத்திடும் வண்டியைப்போல் செங்கோலும் சிறப்பெய்தி மாண்பு தரும்; செழுமை வரும்! அல்லால்; வண்டியைச் செலுத்துகின்ற மனிதன் - அதனைக் கண்டவழி செலுத்தினாலோ ஆரக்கால் பதியும் ஆழ்பகைச் சேற்றினிலே! மனம் போன போக்கெல்லாம் மண்ணாள்வோர் சென்று குணம் கெட்டுத் திரிவரேல் குட்டிச்சுவராகும் நாடு!

நலிவுற்ற மக்கள் வலிவற்ற ஆட்சி; நாள்தோறும் பொலிவற்றுப்போகும் தொழில்கள் எனப் புதைந்துவிடும்; எல்லாமே!”

இளந்திரையத் தொண்டைமான் மன்னன் அன்றைக்கு எடுத்தாண்ட உவமையது என்றைக்கும் பொருந்துமன்றோ? வளமிகு நாடு கண்டு மக்கள் வாழ்விலே புதுமை செய்ய உளமது பக்குவப்படுதல் வேண்டும்; அந்த உண்மையை உரைக்கும் பாடல் இஃதே!

“கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும், பகைக் கூழ் அள்ளற்பட்டு, மிகப்பல தீநோய் தலைத்தலைத் தருமே.”

Full-page colour illustration associated with **நாடு வாழவும் நலிவு தீரவும்...**

(புறநானூறு : பாடல் : 185 பாடியவர் : தொண்டைமான் இளந்திரையன்)

பொருள் விளக்கம் :

கால்பார் = வண்டிச் சக்கரமும் பாரும். சாகாடு = வண்டி. உகைப்போன் மாணின் = செலுத்துவோன் செம்மையாக இருப்பின். ஆறு = வழியானது. உய்த்தல் தேற்றான் = செலுத்தும் வகை அறியாதவன். பகைக்கூழ் அள்ளல் = ஆழ்ந்த பகைச் சேறு. வைகல் = நாள்தோறும். தலைத்தலை = மென்மேலும்.

*

அன்றைக்கே ஒரு கண்ணகி!

சிலப்பதிகாரமெனும் செந்தமிழ்க் காப்பியத்தை சேர இளவல் இளங்கோவடிகள் எழுதிடும் முன்பே; செவிவழிக் கதையாய்ப் பழங்காலத்தில் பரவி; சிறப்புற்றுலவிய கண்ணகியின் கதைக்கு, சங்கத்தமிழில் சில புலவர்கள் படைத்துள செய்யுள் மலர்களே தக்க சான்றாம்!

மலைத்தோள் படைத்தவனாம், மாளாது அள்ளி வழங்குவானாம் மயிலுக்குப் பொன்னாடை பரிசாகத் தந்தவனாம் பேரறிவுப் பெருமக்கள் பாராட்டிப் புகழ்ந்துரைத்த “பேகன்” எனும் பெயர்படைத்த மன்னவனாம்! அவன், “கண்ணகி” என்கின்ற கட்டழகுப் பெட்டகத்தைக் கற்பின் திருவுருவை - கண்ணியத்துக் களஞ்சியத்தைக் கரம்பிடித்து இல்வாழ்வில் களிப்புற்றிருந்து பின்னர் மரம் விட்டு மரம் தாவும் குரங்குமனம் கொண்டுவிட்டான்!

பிற்றைநாளில் “பழனி” யென்று ஆகிவிட்ட ஊர்தான் அற்றைநாளில் “பொதினி” என அழைக்கப்பட்டு; ஆங்கே ஆவியர் குடியிற்பிறந்த குறுநில மன்னர் பலரில் காவியத்தில் ஏறும் தலைவனாகும் பேறு பெற்றவன்தான் வையாவிக் கோப்பெரும் பேகன் எனும் வள்ளலாவான்; பகைவர்க்கு வளையாத வீரனாவான்!

வளமிகு பகுதியிலும் வீணாய்ப் பொழிந்து வழிந்து களர்நிலப் பகுதியிலும் பெருகிப் பெய்திடும் மழையின் தன்மைபோல் பாகுபாடின்றிக் கொடையளிக்கும் மனங்கொண்ட மன்னன் பேகனைக் குறித்து,

1.

“கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்” என்று

பரணராம் பெரும்புலவர் பாடிமகிழ்ந்தார் பார்புகழ் பெருமை!

இல்லாதார்க்கு மட்டுமன்றி இருப்போர்க்கும் இனிய பரிசில் பல வழங்குவான் என்பதால்; கொடைமடம் படுதல் என அதனைக் குறைத்துக் கூறினும் படைமடம் படாமல் பகைவர் தகுதியறிந்து போரிடுவான் தடைபடாத் தமிழருவித் தமிழால் பரணர் கொடைமகன் சிறப்பைக் குன்றம் ஏற்றினார்!

என்று; வல்லூறை எதிர்த்து வண்ணக்கிளி வென்றதுபோல் நல்லூர்ப் பரத்தையெனும் ஒருத்தி பேகனை வீழ்த்திவிட்டாள்! விழியிரண்டைக் கணைகளாக்கி அவன் நெஞ்சில் தாக்கி; மொழியினிலே தேன்கலந்து தன் மடியடிமை ஆக்கி; பன்னீரால் குளிப்பாட்டிப் பக்கத்தில் கிடத்திவைத்தாள்;

கண்ணகியோ, கண்ணீரால் நனைந்திட்டாள்; கவலையே ஒரு வடிவானாள்! மாளிகையின் நல்விளக்கு மதிப்பற்றுக் கிடக்கும் நிலை மன்னவனை நினைத்தழுது ஒளிமங்கிப்போன நிலை எடுத்துரைத்துக் கபிலர் எனும் தமிழ்க் கிழவர்; தடுத்துரைத்தார் - பரத்தையின் தழுவல் விடுத்து; விரைந்திடுக கண்ணகியாள் வீட்டுக்கென்று வரைந்தளித்தார் சங்கப்பாடல் ஒன்று!

2.

அந்தப் “இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்வாள்” பொன்மானின் துயர்துடைக்கப் புறப்படுக மன்னா; என்றார்!

3.

“அருளா யாகலோ கொடிதே” என்று அவளுக்காக அன்பு காட்டாவிடில் அது மிகக்கொடிது என்றார் பரணர்!

அரிசில் கிழார் எனும் கவிஞரோ அவனைப் பார்த்து; பரிசில் பெற வந்தாராயினும் அதனை விடுத்து, கலாபத்தின் தோகையெனும் கண்ணகியின் கூந்தலிலே கமழ் மணப் புகையேற்றி களிப்பு துள்ள; அவள், கழுத்தினிலே மாலைசூடிக் கலந்து மகிழ ஒரு கணத்தினிலே புரவிகளைத் தேரில் பூட்டிடுக என்றார்!

Full-page colour illustration associated with **அன்றைக்கே ஒரு கண்ணகி!**