உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 57
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 57 · 57 / 104

பயங்கரத் திட்டத்தால் அப்பசுவை விரட்டியடித்துத் - தங்கள் பயற்றம் பயிர்க்காட்டில் மேயவிட்டார் சில கோசர்! பசித்திருந்த பசுவுக்குப் பயிர்க்காட்டு மேய்ச்சலென்றால் பாய்ந்து சென்று தின்னாமல் பயந்து கொண்டா ஓடிவிடும்?

பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பையெல்லாம் கூட்டாகச் சேர்த்துத் தின்று உப்புகின்ற கொடும் ஆதிக்க வர்க்கத்தின் தொப்பையைப் போல் இனியில்லை இடமென்ற அளவுக்கு உப்பியது அந்தப் பசுவின் வயிறு!

கனியில்லை என்று சொன்ன கிழவனது கண்ணில்லை என ஆக்கிவிட்டால் - பின்னர் துணையில்லை தோகைக்கு! எல்லோரும் அந்த இணையில்லாப் பேரழகைப் பகிர்ந்து கொள்வோம் இப்படித் திட்டமிட்ட இழி குணத்தார்; செப்படி வித்தை காட்டிச் செயல்புரிந்தார்.

அன்னி மிஞிலியின் அப்பனைக் கூண்டிலேற்றி அன்றந்தப் பயற்றங்காட்டில் பசுமேய்ந்த கதையைச் சொன்னார். ஊர்மன்றக் கோசர்களும் உண்மை என்ன உரைப்பீர் என்றார்! கார்கொண்ட வானம் போல் முகம் கறுத்து அக்கிழவர்;

“யார் கண்டது என் பசு மேய்ந்ததை? என நான் கேட்கமாட்டேன்; பார் எதிர்ப்பினும் பொய் சொல்லாப் பரம்பரை நான் பயற்றம் பயிரை என் பசு மேய்ந்தது உண்மையே!” என்றார்.

குற்றத்தை ஒத்துக் கொண்டான் - அதனால்

குத்திப் பெயர்த்திடுக அவன் கண்ணையென்று

கோசர்களின் மன்றத்தில் தீர்ப்புச் சொன்னார். அடுத்த கணம் அன்னி மிஞிலியின் தந்தையை இழுத்துச்

சென்றார்

பழுத்த கிழம் - பாவம்; அவர் கண் இரண்டும் பெயர்த்துச்

சென்றார்;

“பார்வையினை இழந்தீரோ அப்பா நீங்கள்! பழிவாங்காமல் விட மாட்டேன் பாவிகளை”யென்று போர் முரச ஒலியெழுப்பி மகள் அழுதாள்!

“கண்ணை அழித்துவிட்டு உன்னைக் களவாட எண்ணிவிட்டார்! கற்பெனும் வாளேந்திய என் பெண்ணை நெருங்கிட எவனுக்குத் துணிவுண்டு?” தந்தை பேசி முடிப்பதற்குள் தணலில் நின்றவள் பதில் சொன்னாள்.

“உயிர் போன்ற தந்தையினைக் குருடாக ஆக்கியவர்தம் உயிர் போகுமட்டும் - நான் உண்கலத்தில் உண்ண மாட்டேன். உடை மாற்றம் செய்ய மாட்டேன். பழிவாங்கித் தீரும்வரை பசி தூக்கம் எதுவுமில்லை! பகை முடிப்பேன்! பார்வையிழந்த தந்தைக்குப் பலி கொடுப்பேன் எதிரிகளை!”

அன்னி மிஞிலியின் சூளுரை அடுத்த நாளே அழுந்தூர்த் திதியனுக்கு எட்டியது. கன்னியவளுக்கு உற்ற துயர் கேள்விப்பட்டுக் கவலை கொண்டான். அவளைக் காணத் துடித்தான். செவியில் செய்தி நுழைந்ததைத் தொடர்ந்து செந்தீப் பிழம்பென தன்னெதிர் நின்ற “அன்னி” யைக் கண்டான்.

“கண்ணுக் கினியவளே! கருத்துக்கு ஏற்றவளே! உன் இதயப் புண்ணுக்கு மருந்திட வகையறியேன் வழியறியேன்” என்று நொந்தான்.

“குதிரைப் படையுண்டு உன் கோட்டையில் மன்னா! குன்றனையத் தோளுண்டு உனக்கு என் கண்ணா! அன்னி மிஞிலியாம் என்னை நீ காதலிப்பது உண்மையெனில் அட்டியின்றிப் புறப்படுக போருக்குக் கோசர் மீது! அந்தகராய் ஆக்கிவிட்டார் தந்தையினை - அந்த அநியாயக்காரர்களை வீழ்த்த வேண்டும். கண்குத்திப் பாம்புகளைத் துண்டாடும் கீரியென்று திண்தோள் திதியனைத் தேடி வந்தேன்” என உரைத்தாள்.

“வாளுறை விட்டு எழுந்தது பார்! என் சூளுரை யொன்றும் அறிக அன்பே! உன் தந்தையாம் - என் மாமனுக்கு ஊனம் விளைத்தோர் உயிர் போக்கித் திரும்பிய பிறகே உனைத் தீண்டும் என் கரங்கள்;” ஆர்ப்பரித்தான் அழுந்தூரான்!

போர்ப்படை கிளம்பிற்று! பொல்லாக் கோசர் உடல் நொறுங்கிற்று நில்லா நெடுஞ்சுவர் போல் வீழ்ந்திறந்தார். விரும்பிய வாறு சூளுரை முடித்தாள் திரும்பிய திதியனின் தோளில் சாய்ந்தாள்! அரும்பிய காதல் அன்றே மலர்ந்தது! அகநூல் பாடல் இதற்கு அடிப்படையானது.

*

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப், பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய், இடுமுறை நிரம்பி, ஆகுவினைக் கலித்துப், பாசிலை அமன்ற பயறுஆ புக்கென, வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது, ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், சினத்தின் கொண்ட படிவம் மாறாள், மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன், செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து, அவர் இன்உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி.”

*

(அகநானூறு : பாடல் : 262 பாடியவர் : பரணர்)

பொருள் விளக்கம் :

முதைபடு பசுங்காடு = பழைமையான பசுமையுள்ள காடு. அரில்பவர் மயக்கி = பின்னிக் கிடக்கும் கொடிகளை அழித்து. பகடு பல பூண்ட = எருது பூட்டிய. இடுமுறை = எருவிடுதல். பாசிலை அமன்ற பயறுஆ புக்கு = பச்சைப் பயற்றங் கொடியில் பசு மேய்ந்திட. நவைத்த = கொடுமை புரிந்த. வாலிது = தூய உடை.

*

நாடு வாழவும் நலிவு தீரவும்...

காஞ்சியினை ஆண்டமன்னன் தொண்டைமான் இளந்திரையன்; கவிதைபுனையும் ஆற்றலுடன் கடமையுணர்வு மிகவுடையோன்! கடல்வழிவந்தவர் இக்காவலனின் முன்னோர் எனக் கதையுண்டு! காதலில் தோய்ந்த சோழன்கிள்ளியும் நாகமகள் பீலிவளையும்; பெற்றெடுத்த பிள்ளைக்கனியமுதாம் இளந்திரையன் பிழைத்தெழுந்தான் கலம் மூழ்கிக் கடலில் என்றும் - அந்த மாவீரனே காஞ்சியினைத் தலைநகராய்க்கொண்டு தொண்டைநாட்டு மகுடம் புனைந்தானென்றும் “மணிமேகலை” இலக்கியம் கூறும்!

தொண்டைக்கொடியொன்று பற்றிக் கடலோரம் சேர்ந்ததனால் தொண்டைமான் என்கின்ற அடைமொழி சார்ந்ததென்றும்; திரையென்றால் அலையன்றோ; அத்திரைமீது மிதந்துவந்து தரையாளும் இளம் மன்னனாய் வாய்த்ததாலே, இளந்திரையன் எனும் சிறப்புப் பெயர் பெற்றானென்றும் இனியதமிழ்க் காப்பியமாம் மணிமேகலை; மேலும் இயம்பும்!