சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 56 · 56 / 104
கொடுமுடியன்ன உயர்ந்த கோபுரம் - அதில் கொடிகளோ வானவில்லென வண்ணங் காட்டும்! திண்ணிய நீலமணி நிறம்படர்ந்த தூண்களிலே வெள்ளியைத்தான் வெண்சாந்தாய்ப் பூசினரோ? செம்பினால் படைத்திட்ட மதில் சுவரோ எனும் படி செப்பரிய வலிவுடனே அமைத்திட்ட செழியனது அரண்மனையைச் செந்தமிழால் சித்தரிக்கும் நக்கீரர்; சிந்தையெலாம் அவன் நினைவால் துவளுகின்ற செம்பருத்தி இதழ்ப் பெண்ணாள் பாண்டிராணி; படுத்திருக்கும் மஞ்சத்தைப் பாட்டாலே காட்டுகின்றார் பார்த்திடுவீர்!
முரசுபோல் கால்கள் கொண்ட முரட்டுப் போர் யானையொன்று முற்றாக நாற்பது வயது சென்று போர்த்தொழில் புரியுங்கால் இறந்துவிட - அதன் கூர்த் தந்தம் இரண்டெடுத்து கோலச் சீர் தந்து அழகூட்டி அமைத்த கட்டில் - அதில்,
சூல் கொண்ட மகளிர் கொங்கை பால் கொண்டு வீங்கியது போல் நாற்புறமும் திரண்டுருண்ட நல்லழகுக் கலசங்களாம்! முத்து மணிமாலைத் தொங்கல்களாம்! முல்லை மல்லிகை மலர் ஓவியமாம்! அரிமா வேட்டையினைச் சித்தரிக்கும் அரிய கலை நுட்பம் திகழ்கின்ற போர்வையுடன், அன்னத்தின் இறகெடுத்து செய்திட்ட அணை, தலையணை, சாயணை அனைத்தும் கொண்ட பஞ்சணை!
ஆனால் அங்கு; “அணை” என்று சொல்லத்தான் அவனில்லை; அதனாலே அணையுடைத்துப் பெருகிற்று அரசியாரின் துன்ப வெள்ளம்! அடி வருடினர் செவிலியர்கள் “அம்மையே உறங்குக” எனக் கூறி! “அடி போடி வேலையில்லை உங்களுக்கு” அலறினாள் அரசியவள் மிகச் சீறி!
அங்கிருந்த வானவெளிச் சித்திரத்தில் அருகருகே சந்திரனும் ரோகிணியும் அகலாமல் இருத்தல் கண்டு அப்படி நான் நற்பேறு பெற்றேனில்லை இப்படி ஏன் நலிகின்றேன் வீணேயென்று; நீள் இமைகளிலே எட்டிப் பார்க்கும் நீர்த்துளியை விரல் கொண்டே அவள் வழிந்தெறிந்தாள் எனினும்; கவலைதனை அழித்தெழுத முடியாமல் அல்லற்பட்டாள்!
இவ்விதம், மதுரையின் மாளிகையில் அரசியார் மது சுமந்து வண்டுக்கெனக் காத்திருக்கும் மலர்க்கொடியாய்த் தவிக்கும்போது; நெடுஞ்செழிய பாண்டியனின் நிலை என்ன? “நெடுநல் வாடை”யிலே காணவாரீர்! காதலொன்றும் பாண்டியனின் கடமை உணர்வுக்குத் தடையாயில்லை!
கோப்பெருந்தேவியின் நினைவாலே - அவன் கொண்ட குறிக்கோள் தவறவில்லை! வாடைக்காற்று அவன் பாசறைக்கும் வந்ததுண்டு! அதனாலே அவன்; வாளேந்தும் போர் முகத்தை மறந்துவிட்டு,
வளையலேந்தும் கரம் நாடி ஓடவில்லை! இங்கு; பாண்டியன் நள்ளிரவில் புறப்பட்டான்; எதற்காக? பஞ்சணையில் பரதவிக்கும் பத்தினியைப் பார்ப்பதற்கா? குன்றும் நடுங்குகின்ற கூதிர்காலத்தில் வடக்கிருந்து வீசுகின்ற குளிர் காற்றால் தெற்கு நோக்கிச் சுடர் சாயும் தீவட்டி எனினும் வடக்கிலோர் பாசறையில் இருக்கும் மன்னன் இல்லை! இல்லை! வாஞ்சைமிகு பாண்டிமாதேவிக்காகத் தெற்குத் திசை வாடிக்கைப் பணியினை ஆற்றுதற்கு திரும்பவில்லை!
வாளேந்தும் மறவர் சுடரேந்தி சூழ்ந்து வர இடத்தோளில் இருந்து நழுவி விழும் மேலாடைதனை இடப்புறக் கையால் தூக்கி அணைத்தவாறு, வலியதோர் வாள்வீரன் தோளில் - தன் வலக்கையினைத் தோழமையுடன் போட்டுக்கொண்டு, மழைத்துளிகள் வீழ்கின்ற நள்ளிரவில் மாவீரர் பலர், காயமுற்றுப் படுத்திருக்கும் பகுதியெலாம் சென்று பார்த்தான் - அவரைப் பரிவுடனே நலம் கேட்டு நன்றி கூறி அரவணைத்தான்!
பகல் போரில் பகைவர்களின் படையழித்து விரட்டும்போது பழுதுபட்ட கால், கை, உடல்களுடன் படுகின்ற துயரமெலாம் பறந்தனவாம்; தம் தலைவன் பனிப்பார்வை பட்டதாலே! காதலனைத் தேடிப் பேரரசி கலங்குகின்றாள்; அவனோ, கடமையினை ஆற்றுதற்குக் கால்கடுக்கச் சுற்றுகின்றான்;
பாசறையை!
அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை அழகாக வகுத்துக்கொண்டு அன்று தொட்டு வாழ்ந்து வரும் இனம் அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்பதற்கு ஆதாரம் வேண்டுமெனில் அட்டாவோ! “நெடுநல்வாடை” ஒன்று போதாதா?
(தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச் சிறப்பித்து சங்கப்புலவர் நக்கீரர் இயற்றிய “நெடுநல்வாடை” எனும் இலக்கியத்தை அடிப்படையாகக்கொண்டு எளிய நடையில் எழுதப்பட்டது, இது!)
பழி தீர்த்துப் பகை முடித்தாள்!
துள்ளி வரும் வேல் கொண்டும் - ஆவேசத்தை அள்ளி வரும் வாள் கொண்டும் பள்ளி செல்லாப் பருவத்து இளங்கொழுந்தும் கிள்ளி எறிவேன் பகையை என்று கிளர்ந்தெழுந்த காலம் அது - தமிழர்க்குத் தங்கமென வாய்த்த காலம் - புலவர் பலர் சங்கம் வளர்த்த காலம்! வீரர் பொங்கும் புலியெனப் போர்க்களம் சென்றனர் மங்கல மங்கையர் அவரை வாழ்த்தியே நின்றனர்.
காற்றடிக்கும் போதும் - அதில் தமிழ் வீரம் வந்து மோதும்! கடலின் அலை உயர்ந்து கிளம்பும் - அதில் தமிழன் நிலை உயர்ந்து விளங்கும்! அகிலின் புகை மணக்கும் - அதிலும் தமிழின் புகழ் மணக்கும்! முகிலிடை எழில் மதி தோன்றும் - அதில் முத்தமிழ்க் காவிய நிதி தோன்றும்!
அவனிபுகழ் பெருநிலத்தை ஆண்டிருந்த அசோக மன்னன் கூட தன் ஆட்சிக்கு உட்படாதோர் ஆற்றல் மிகு தென்புலத்தார் என்று சொன்ன; தென்னகத்துத் திண்தோள் இனத்தாரில் தீரம் நிறை கோசர் எனும் ஒரு பிரிவு! வீரம் விளைக்கின்ற திறன் படைத்தோர். தூய்மை சேர் வாய்மைக்குப் பேர் பெற்றோர். துளுநாடு நீங்கிக் கீழ்க் கடல் வரையில் அலைந்து திரிந்த போக்கினை நிறுத்தி “நியமம்” “செல்லூர்”ப் பகுதியிலே நிலைத்ததாய் வரலாறு!
*
“செல்லூர்க் குணாஅது பெருங்கடல் முழக்கிற்றாகி, யாணர்
இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்”
*
அகநானூறு இலக்கியம் அறிவிக்கும் செய்தி இது. “அன்னி”யென்றும் “மிஞிலி”யென்றும் அகப்பாட்டு; அடலேறுத் தமிழ் வீரர் இருவரை அறிமுகம் செய்யும். இருவீரர் பெயர் இணைத்து இளையவள் ஒரு தமிழ் மகள் புருவத்தை விழியைப் போர்க் கருவியாக்கிக் காளையரை
வீழ்த்துகின்ற
பருவத்தாள் எனினும், பண்புடைய திருக்குமரி!
தழுவத்தான் பலர் துடித்தார் - கோசர் சிலர் அவர் தந்தையிடம் பெண் கேட்டார். மறுத்துவிட்டார். “அன்னிமிஞிலி” எனும் அழகு நங்கை அமர்க்களத்தில் உயிர்நீத்த அன்னி யெனும் வீரன்போல் அனல் உமிழும் கற்புடையாள்! “ஆய் எயினன்” எனும் வீரனை வென்று வீழ்த்தி நன்னனது ஊரினையும் தனதாக்கிக் கொண்ட “மிஞிலி” எனும் வீரனைப் போல் உறுதி மிக்காள்!
நிலவுச் சித்திரம் போல் - நீரில் உலவு நீள்விழிக் கெண்டை போல் குலவிடும் கிள்ளைப் பெண்ணாள் - நற் கலவிக்கு ஏற்ற கண்ணாள் என நினைத்து இளித்து வந்த சில கோசர்களை என்ன நினைத்தாய் என் மகளை எனக்கேட்டு கன்னலடா என் செல்வி அதைக் கடுங்குரங்கின் கையில் தரச் சம்மதியேன்! அவள் எண்ணமெலாம் அழுந்தூரான் மீது அறியீரோ? திதியன் எனும் அவ்வூர்க் காவலனே அவளுக்கும் காவலனாம்! அடுத்தொருமுறை வருவது கூடாது - நான் எடுத்துச் சொன்னதைப் புரிந்து கொண்டு நடந்திடுக உடனே என்றார்!
வாய்மை நிறைக் கோசரிலும் வன்னெஞ்சம் கொண்டோர் சிலர் வாழ்ந்திட்டார் என்பதுதான் வரலாறு! அவர் வகுத்திட்டார் ஒரு திட்டம் வஞ்சியினைக் கைப்பற்ற! பயற்றம் பயிர் விளையும் பாங்கான நிலங்கள் பல நியமத்தில் நிலைத்திட்ட கோசர்க்கு உரிமைச் சொத்து! பசுவொன்றே அன்னி மிஞிலியின் அன்பான குடும்பச் சொத்து!
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
