உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 55
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 55 · 55 / 104

தூண்டி விட்டுப் போர்புரியச் செய்திடவும் - எல்லை தாண்டுமிடம் இரண்டு சேவல் விலக்கிடவும் இடையிலே ஆட்கள் சிலர் இருப்பதுபோல் மடை திறந்த என் துயரம் தீர்ப்பதற்கு யார் உளர்?

குப்பையிலே மேய்கின்ற கோழிகட்குள் போர் மூளும்! கொக்கரித்து ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும்! அந்தக் கோழிகளைத் தூண்டிவிட்டோர் யாருமில்லை; அங்கே வந்துவிட்ட சண்டைதனை விலக்கிடவும் நாதியில்லை!

அதுபோல “காதலால் துடித்திடுக” என்றென்னை எவருமே தூண்டவில்லை;

அக்

காதற் கனலென்னைத் தகிக்கும்போதும் யாரும் வந்து

தணிக்கவில்லை!

குப்பைக் கோழிகள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொத்திக்கொண்டு தாமே அழிவது போல் அனுமதியின்றி என்னிதயம் புகுந்து அணுஅணுவாய் எனைச் சீர்குலைக்கும் அடங்காக் காதல் நோய் அகற்றி எந்தன் அழிவைத் தடுத்திட எவருமிலையே” என்று புலம்பினாள்!

அந்தக் குமரிப் பெண்ணின் குமுறும் நெஞ்சுக்குக் குப்பைக் கோழிச் சண்டையினை உவமையாக்கிய குறுந்தொகைப் புலவரின் பெயர் தெரியாக் காரணத்தால் “குப்பைக் கோழியார்” என்றே அவரை அழைத்தனர்! இப்படித் தமிழ் நிலத்தில் இனிய சுவை இலக்கியங்கள் படைத்தோர் பெயர்கள் சில எப்படியோ மறைந்தும் ஒழிந்தும் போயினுங் கூட தப்பியதே தமிழ் இலக்கியம் பல எனக் களித்திடுவோம்! களிப்பில் கூத்திடுவோம்

*

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

“கண்தர வந்த காம ஒள்எரி என்புஉற நலியினும், அவரொடு பேணிச் சென்று, நாம் முயங்கற்கு அருங்காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; உய்த்தனர் விடாஅர் பிரித்துஇடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல, விளிவாங்கு விளியின் அல்லது, களைவோர் இலையான் உற்ற நோயே.”

*

(குறுந்தொகை பாடல் : 305 பாடியவர் : குப்பைக்கோழியார்)

பொருள் விளக்கம் :

காம ஒள்எரி = காமமெனும் ஒளிபொருந்திய தீ. முயங்கல் = அளவளாவுதல். அருங்காட்சியம் = காண்பதற்கு முடியாதவளானேன். வந்துஅஞர் களைதல் = நாமிருக்குமிடம் அவர் வந்து துயரம் களைவது. விளிவாங்கு விளியின் அல்லது = தானே அழிந்துபோதலன்றி.

*

பஞ்சணையில் அரசி; பாசறையில் மன்னன்!

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை அழகாக வகுத்துக்கொண்டு அன்றுதொட்டு வாழ்ந்து வருகின்ற இனம் அருமைமிகு நம் தமிழ் இனம்தான் என்று ஆயிரங்காலத்துப் பயிராக நமக்கு வாய்த்த ஆன்றோர் செய் இலக்கியங்கள் சான்று கூறும்!

அதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டெனினும், ஆரம் போல் கோத்தளித்தார் நக்கீரனார்; பத்துப் பாட்டுள் - ஒரு முத்துப் பாட்டாய்த் திகழ்கின்ற “நெடுநல்வாடை” எனும் தமிழ் அமுதம்! அது; நெடுஞ்செழிய பாண்டியனின் வீரம் சொல்லி, நீண்ட நாள் அவன் பிரிவால் ஏங்குகின்ற நேரிழையாள் கோப்பெருந்தேவி மனம்; நெருப்பாகச் சுடுகின்ற நிகழ்வைக் கூறி, அகம், புறம் எனும் வாழ்க்கை அந்நாள் தமிழகத்தில் இகம், பரம் என்ற கூற்றுக்கே எதிரிடையாய் இருந்த நிலை எடுத்தியம்பும் நூலாகும்!

தலையாலங்கானத்துப் போர்க்களத்தில் தனிமையில் ஓர் இளைஞன் சிக்கினான் என்று தவறாகக் கணக்கிட்ட ஏழு மன்னர் தடந்தோள் புழுதிபடத் தோற்றே போனார்! அதன் பின்னர் நெடுஞ்செழியன் அன்றிலென வாழ்வோமென்று

அழகு மணிப்புறாவொன்றை அரசியென ஏற்றுக்கொண்டான்..... இளவயதில் போர்முனையில் எழுவர்படை வீசிய வேல்வாள் பட்ட விழுப்புண்கள் ஆறிப்போய் வடுக்களாய் மாறிப்போயிருப்பினும் - அவை; பாண்டியன் மார்பகத்தில் - தங்கப் பதக்கம் போல் மின்னுவதாய் எண்ணிக்கொண்டு எழிலரசி; எண்ணாமலே கொடுத்திட்டாள் முத்தம்; நித்தம்!

மணமுடித்து மஞ்சத்தில் மனங்கவர் அஞ்சுகத்தை கணநேரம் பிரியாமல் இரவெல்லாம் கட்டிய கட்டுக் குலையாமல் இருப்பதற்கு காலம் இடம் தரவில்லை... போர்க் களங்களின் அழைப்போ பெரும் தொல்லை!

தலையாலங்கானப் போருக்குப் பின்னும் - அவன் தலைமையேற்று வென்றிட்டான்; “வேள் எவ்வி”யெனும் மன்னவனின் மிழலைக் கோட்டம்! வாள்வீரர் முத்துவேளிர்க்குரிய முடியினைப் பறித்து - அவர்தம் முத்துக் கூற்றமும் கவர்ந்திட்டான்! “சேரமான் யானைக்கட்சேய் இரும்பொறை” என்னும் வீரமா மன்னன் படையழித்து, அவனைச் சிறைதனில் அடைத்துப் போட்டு விட்டான்!

இவ்வாறு மலைமலையாய் வெற்றி மாலை குவித்திடவே அலைஅலையாய்ப் படைகொண்டு ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் குலைகுலையாய்ப் பழமிருந்தும் உண்ண முடியாமல் நிலைகுலைந்து துடிக்கின்ற பறவையைப் போல பாண்டிமாதேவியவள் பதைத்திட்டாள்..... பகல் இரவுப் பொழுதுகளை நகர்த்த முடியாமல் கண்ணீர் வடித்திட்டாள்!

வாடையெனில் குளிர் காற்று தாக்குமன்றோ! ஆடை போர்த்தாவிடினும் ஆண்மகனின் மேனி போர்த்தி ஆரணங்கும்; ஆரணங்கின் மேனி போர்த்தி ஆடவனும்; அக்குளிர் காற்றை வெல்வாரன்றோ!

இங்கென்ன நிலையென்றால் பாண்டி மன்னன் பொங்குற்றே சென்றுவிட்டான் போர்முனைக்கு! வீரம் விளைக்கின்ற வெம்மையிலே வாடைக்காற்றின் வீண்மிரட்டல் பலிக்கவில்லை வேந்தனிடம்!

ஆனால் அரசியின் நிலையோ; அந்தோ! பரிதாபம்! பாட்டுப் புலவர் நக்கீரனார் பாடுகின்றார்; வாடைக் காற்றின் குளிர் தாங்க மாட்டாமல் வீட்டுக் கோழிகள் படும் பாட்டைப் பாரீர் என்று! பெட்டையும் சேவலும் பெருவெளியில் திரிந்து இட்டமுடன் இரைதேடித் தின்று மகிழ்ந்து இன்பமாய்க் கழித்த நாளெல்லாம் சென்று; இன்று இரவெது பகலெது எனத் தெரியாது திகைத்து அடைத்திருக்கும் பலகைக் கூண்டுகளுக்குள்ளே அடுத்தடுத்துக் கடுக்கும் கால்களை மாறி மாறி வைக்குமாம்!

இவ்வண்ணம் கொல்லுகின்ற வாடையிலே - நெஞ்சில் துள்ளுகின்ற காதலுடன் புள்ளிமயில் புரளுகின்றாள்; படுக்கையிலே! - யாரும் வெல்லவொண்ணா தமிழ் எடுத்து - “நெடு நல் வாடை” தீட்டுகின்றார் நக்கீரனார்!