சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 54 · 54 / 104
இதோ அது :-
**குறளன் :-**
கரைதனில் நிற்கின்ற மரத்தின் நிழல் - நீரின் அலைதனில் வீழ்ந்து நெளிவது போல தரைதனை நோக்கும் கூனுடல் கொண்டவளே! தட்டாதே என் சொல்லை! சற்றே நின்றிடுக!
**கூனி :-**
“ஆண்டலைப்புள்” எனும் மனிதத் தலை கொண்ட அதிசயக் கோழி ஈன்ற அற்புதக் குஞ்சே! ஆள் பிடித்தால் பிடி ஒன்றிருக்கும் குறளன் உனக்கு; அழகியென்னை நெருங்குதற்குத் தகுதியுண்டோ?
**குறளன் :**
கொழு பூட்டிய கலப்பையைப் போல் கூன் விழுந்தும் மேலெழுந்தும் திகழ்கின்ற பழுதற்ற உன்னழகு மயக்குதடி என்னை! ஏன் மௌனம் காட்டுகின்றாய்? உன் எண்ணத்தைக் கூறிவிடு! அல்லால் எனை நீயே கொன்று விடு!
**கூனி :-**
கலப்பையைப் போலிருக்கின்றேனா? - என்ன காலம் பார்த்தாயா - என்னை நீ கேலி செய்ய? தூக்கி நிறுத்திய சூதாடும் சதுரங்கப் பலகை உயரம் இருக்கின்ற நீயா வாதாடுவது என்னுடைய அழகு பற்றி? ஆண்பிள்ளை நீ அறிந்திருக்க வேண்டாமா; ஓர் ஆரணங்கைக் கூடலுக்கு அழைக்கும் விதம் இதுதானா? காளை நீ திமிர் கொண்டு விட்டதாலே வேளை நேரம் கூடப் பார்க்கத் தேவையில்லை என்கின்றாயா?
**குறளன் :**
உரித்த கொக்கு போல் உடலழகு கொண்டவளே! உனை மார்புறத் தழுவினாலோ உன் கூனல் நெஞ்சில் குத்தும்! இச்சையுடன் பின்புறமாய்த் தழுவிடிலோ “கிச்சு கிச்சு” மூட்டுமடி உன் முதுகுக் கூனல்! பரவாயில்லையெனில் ஒன்று செய்வோம்; பக்கம் பக்கம் நின்று பசியாறத் தழுவிக் கொள்வோம்!
**கூனி :-**
அரை மனிதன் நீ என்பதறியாமல் - என்ன உரை நிகழ்த்தி விட்டாய் என்னிடத்தில்! மரம் தழுவும் கொடி போல எனைத் தழுவப் பலர் வரம் கேட்டு வருவது தெரியாமல் என்ன குறை என்னிடத்தில் கண்டுவிட்டாய் - அதனால் இன்னல் தரும் வார்த்தைகளைக் கூறிவிட்டாய்! ஆமையொன்று எழுந்து நிற்பது போல் ஆகாயமளாவ உயர்ந்து நிற்பவனே... ஆகாகா!... காமன் போல் நடை வேறா? நல்ல அழகுதான் போ போ!...
**குறளன் :**
இனி உன்னை இகழ மாட்டேன்... இழிமொழிகள் உதிர்க்க மாட்டேன் - இதை ஆணையிட்டுச் சொல்கின்றேன்; ஆருயிரே! அரண்மனைக்குள் வந்திடுக; நாமிருவர் தழுவிடவே தகுந்த இடம் பார்த்துள்ளேன்; என தங்க மயிலே! தயங்காமல் வந்திடுக!
**கூனி :-**
நானும் உன்னை இனி ஏளனம் புரியமாட்டேன்... தேனும் பாலும் போலத் தழுவி மகிழ்வோம் அன்பே! அரண்மனையாம் அரசனது கோயிலுக்குள் அணைத்து நாம் இன்பமுற்றால் - அதைக் காண்போர்; பேய்களிரண்டு கட்டிப் புரண்டு பிணைந்து கலவி செய்வதாகப் பேசிடுவர்! அதனாலே அடுத்திருக்கும் சோலைக்குள் போய்விடுவோம். அங்கு நாமிருவர்; ஓலைநறுக்கினை எழுதிச் சுருளாக்கி கெட்டியாய் அரக்கு முத்திரையிட்டாற்போல் ஒட்டிக் கிடப்போம் வந்திடுக!
கூனியின் அழைப்பு கேட்டுக் குறளன் என்ன ஆனான்? குதித்தோடி அவளைத் தூக்கிக் கொண்டான்! கொத்து மலர்ச் சோலைக்குள் கொள்ளை இன்பம் மொண்டுவிட்டார்! “குறளன் - கூனி” என்பதெல்லாம் உடலில்தான்! குலவி மகிழும் உள்ளமிரண்டுக்குள் குள்ளமில்லை - நல்ல உயரம்! கூனல் இல்லை - வானம் பார்த்த நோக்கு!
*
“என் நோற்றனை கொல்லோ? - நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல் ................ ................ ................ ................ துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்து விட்டாங்கு”
*
(கலித்தொகை : பாடல் : 94 பாடியவர் : மருதன் இளநாகனார்)
(குறிப்பு : உரையாடல் போன்ற முழுப்பாடலும் 43 வரிகள் கொண்டு அமைந்ததாகும்)
குப்பைக் கோழியார்!
காவலுக்கு நிற்கின்ற வீரனைப் போல் கழுத்துயர்த்திக் கம்பீரம் காட்டுகின்ற சேவலுக்குச் சினமூட்டிக் களத்திலிறக்கி - ஊரார்; சிரித்து மகிழ்ந்து சேவல் போர் கண்டிடுவர். சிற்றூர் முதல் பேரூர் நகரங்கள் வரை - இந்தச் சேவற் சண்டை காணும் வழக்கம், இன்று நேற்றல்ல; கற்றோர் ஏத்தும் கலியும் அகமும் புறமும் பிறந்த கடைச் சங்க காலத்துக்கு முன்பே தொடக்கம்!
ஆதாரங்களில் ஒன்று அழகு குறுந்தொகையிலுண்டு - அது; அகத்துறைப் பாடலொன்றில் காணும் அடிக் கரும்பின் துண்டு! பாதார விந்தம் வரை பருவத்தின் எழில் கொழிக்கும் பாவை; படையெடுத்த காதல் நோயால் படுந்துயரம் பாரீர்!
“அன்றந்த முல்லைப் புதரிடையே ஆணழகன்; இரு குன்றம் போல் தோளுடையான்; அரிமா நடை பயின்றான்! சென்றங்குச் சேர்ந்து தழுவ முடியாமல் எனைக் கொன்றிங்குச் சிறைப்படுத்திப் போட்டாளே; தாய்! கண்களால் கண்டவுடன் என் கண்ணுக்கு மணியானான்! ‘கண்மணீ!’
என்றழைத்துக் கட்டித் தழுவிடவே கருணை மனம் கொண்டு அவன்தான் வந்திருக்கலாகாதோ? - என் கவலையெனும் நெருப்பாறு அவன் கைபட்டால் நீர்வீழ்ச்சியாகாதோ? என் செய்வேன்; என் நோய் தீர்க்கும் மருந்தாக அவனிருக்க எதை நினைத்து நான் அழுவேன்? காதலெனும் வன்செயலால் கடுந்தொல்லைக் காளானேன்! மென்காற்றாம் என்னுள்ளம் புயலாக மாறியதே! யார் தந்தும் வந்ததில்லை இத்துயரம் எனக்கு - இதனை யார் வந்தும் தடுத்தென்னை வாழவிடப் போவதில்லை!”
தானாக வந்து தவிக்கவிடும் இத்துயரம்; அதுவே தானாகப் போவதன்றி வேறு தடம் தெரியவில்லை!
சேவலைத் தயாரித்து சண்டைக்கு விடுவோர் ஆவலாய் அதனை ஒன்றோடொன்று மோதவிடுவர்! ஏவியவரே பின்னர் சண்டையை விலக்கி; தாவிடும் சேவல்கள் தணற்சினம் தணிப்பர்!
