உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 53
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 53 · 53 / 104

குறித்த நாளுக்குள் வருவேன் என்றும் - குளிர் வருத்தும் வேளையில் கூடியிருப்பேன் என்றும் - நீரில் பதித்த வார்த்தைகள் நிற்காததாலே பிரிவில் கனத்தது நெஞ்சம் - தகித்தது காமம்! கருக்கொண்ட பச்சைப்பாம்பின் உடல் போன்று - பருத்த கணுக்கொண்ட கரும்பின் அரும்பு மடல் அவிழ துகில் போல வானமங்கையின் மேலாடும் முகில் கூட்ட மழைத்துளிகள் படைக்கின்ற வாடையெனும் குளிர்காற்றால் வாடுகின்றேன் என் ஆடையினை அகற்றிடினும், வெப்பம் மூளும்; - அவன்

அருகிருந்தால்!

அவ்வாறு இல்லாமல் அவன் பிரிந்திருப்பதற்கு - என் பொல்லாத கண்களே விடையளித்தன அன்று! நில்லாத அருவிபோல அழுவதேனோ இன்று? கல்லாத கண்களே! கவிழ்ந்திடுக நாணத்தால் பூமி நோக்கி!'' மொழியழகி - விழியழகி - முத்துநகைப் பேரழகி பொழிலழகை வெல்லுகின்ற புவியழகி; அழுதழுது முகம் வீங்கியதால் விழுதனைய நீர் இறங்கும் கன்னத்தில் கைவைத்துக் கண்களே! நாணம் கொள்க!'' எனக் கடுமையாய்ச் சொல் உதிர்த்த நிகழ்ச்சிக்குக் கவிதை வடித்திட்ட புலவர் நெஞ்சம் கற்பனையின் ஊற்றன்றோ!

தென்தமிழின் மணம்பரப்பும் - இளந் தென்றல் காற்றன்றோ!

பொருள் விளக்கம் :

நாண்இலமன்ற = நாணமில்லாதனவாயின. நாள் நேர்பு = குறித்த நாளில் வருவதாகக் கூறியதை ஒப்புதல். நுண்ணுறை அழிதுளி = முகிலில் இருந்து கரைந்து தூவுகின்ற மழைத்துளி. பிரிந்திசினோர்க்கு அழல் = பிரிந்து சென்ற தலைவன் பொருட்டு அழுதல். கனைத்த கரும்பு. = பருத்த கரும்பு.

வாளிங்கே-அவன்

நாக்கெங்கே?

குடிசைதான்! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; மிளிரும்! புலியின் குகையினிலே அழகில்லை புதுமையல்ல! கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம் மறவன் மாளிகை! இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்பப் பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி.

ஓடி வந்தான் ஒரு வீரன் "ஒரு சேதி பாட்டி!'' என்றான். ஆடி வந்த சிறுமி போல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண்மகனா நீ தம்பி! மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும்; பின், பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள் அந்தக் கிண்டலுக்குப் பேர் போன கிழட்டுத் தமிழச்சி! வேடிக்கை நேரம் இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு 'மடிந்தான் உன் மகன் களத்தில்'' என்றான் மனம்

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி அக்கணமே! 'தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு - களமும் அதுதான். காயம் மார்பிலா? முதுகிலா? கழறுவாய்'' என்றாள் - முதுகிலென்றான். கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள்; வாளை எடுத்தனள்; முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம்! ''கோழைக்குப் பால் கொடுத்தேன் குப்புற வீழ்ந்து கிடக்கும் மோழைக்குப் பெயர் போர் வீரனாம்! முன்பொருநாள் பாய்ந்து வந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்!

அவருக்குப் பிறந்தானா? அட்டா மானமெங்கே - குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான். இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் - இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும் அதுவும் மானம் மானமென்றே முழக்கும்! மாற்றார்க்கு மண்டியிட்டு வாழுகின்ற மானமற்ற வம்சமா நீ - ஏடா மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன் மடிமேல் வளர்த்தேன் - தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே? தினவெடுக்கவில்லையா?

அந்தோ! பகைவர் வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே - என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்! என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்கு செரு முனையில் சிதறிக் கிடந்த செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் - அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க

ஓடிற்று ரத்த வெள்ளம்! பிணக் குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்! மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை - மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு - அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! இதைக் கண்டாள் இதயங் குளிர்ந்தாள்! "எதைக் கண்டாலும் இனிக்கவலை இல்லை என் மகன் வீரனாய் இறந்தான்'" என்றாள். அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை - அடடா! கருத்தெரியப் பொய் சொன்ன கயவனெங்கே? வாளிங்கே!

அவன் நாக்கெங்கே?" *

\*

“நரம்பெழுந் துலறிய நிரம்ப மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்றுபலர் கூற ‘மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவென், யானெ’ னச் சினைஇக் கொண்ட வாளொடு படு பிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.”

\*

(புறநானூறு : பாடல் : 278 பாடியவர் : காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்)

பொருள் விளக்கம் :

நரம்பு எழுந்து உலறிய =நரம்புகள் தோன்றிட வற்றிய. முளரிமருங்கின் முதியோள் = தாமரைபோல் ஒட்டிய வயிறுடைய கிழவி. படையழிந்து மாறினன் = படைகண்டு அஞ்சிப் புறங்கொண்டு மாண்டான். மண்டமர் = களப்போர். சினைஇ =சினந்து. சிதைந்து வேறாகிய படுமகன் = விழுப்புண் பெற்றுக் கிடக்கும் மகன்.

\*

குறளனுக்கோர்

கூனியுண்டு!

குதிகாலைத் தொடுகின்ற கூந்தல் கொண்ட குமரிப் பெண் ஒருத்திக்கும் அதிகாலைச் சூரியன் போல் ஒளிவீசும் ஆணழகன் ஒருவனுக்கும் காதல் முடிச்சொன்றைக் கச்சிதமாய்ப் போட்டு கவியரசர், புவிமீது கவிதைகளைப் பொழிந்திடுவர்! அன்னநடை, மின்னலிடைப் பூம்பாவை அரும்பு மீசை, இரும்புத்தோள் இளங்காளை கன்னல் நிகர் இதழ் பதித்துக் கட்டிலிலே கலைபயிலும் காட்சியென்ன காணீர் எனக் கற்பனையை மடையுடைத்த வெள்ளமாக்கிக் கவிப்புலவர் காதற்கதை மொழிந்திடுவர்!

தங்கத்தை உருக்கி வார்த்த தகத்தகாய நங்கை அவளும் சிங்கத்தின் பீடுநடை கற்றுலவும் நம்பி அவனும் பொங்குற்ற காதலினால் ஒருயிராய் ஆகும் நிலையை சங்கத்துக் காலந்தொட்டு சாற்றுகின்றார் தமிழ்ப் புலவர்! இதற்கெல்லாம் மாறாக இளநாகனார் எனும் புலவர், இரு உருவங்களை இழுத்து நம் எதிரே நிறுத்தி அழகென்றால் என்ன விலை? அது எங்கே விற்கும்? அளந்து கொடுப்பார்களா? அல்லது நிறுத்துத் தருவார்களா? எனக் கேட்கும் அவ்விருவர் இதயத்தில் எழுந்த காதல்தனை விவரிக்கின்றார்!

குறளன் எனிலோ குள்ளன் என்றும் கூனி எனிலோ மேனிவளைந்தவள் என்றும் கோயில் எனிலோ மன்னன் மாளிகை என்றும் கூறுவர் பொருளைத் தமிழில் அறிவீர்! கோயிலொன்றில் கூனியும் குறளனும் கொடுத்த பணிகள் முடித்துவிட்டு அவரவர் இல்லம் திரும்பும் பொருட்டு அரண்மனை வாயிலைக் கடந்து நடந்தனர்! கூனியைக் கண்ட குறளன் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரிந்தது காதல்! அதனை

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

அணைக்கத் தவித்த ஆழாக்கு மனிதன்; கூனியின் அருகே நெருங்கிட நினைத்தான்! கோலமிகு புறாக்கள் மட்டுமே காதல் கொள்ளுமா? கொஞ்சு மொழிக் கிளிகளுக்கே இன்பம் சொந்தமா? கோட்டான்கள் கூட உடலுறவு கொண்டு - தங்கள் குலம் பெருக்கி வாழ்கின்ற வையமன்றோ இஃது!

அதனாலே, குறளன் மனத்தில் கூனியின் நினைவும் கூனியின் மனத்தில் குறளன் நினைவும் கூடுகட்டி வாழ்ந்தன என்பது - இந்தக் குவலயத்துக்கோர் அதிசயமல்ல! குரங்கினமும் கோவேறு கழுதையினமும் கொஞ்சி மகிழும் இன்ப பூமியிலே குறளனும் கூனியுமட்டும் - உடலின்பம் கொள்வதற்குத் தடை ஏதும் உளதோ?

உடலால் குள்ளமாயிருப்பதாலே - அவன் உள்ளமும் வெறும் பள்ளமாய் இருந்திடுமோ! வளைந்தவளாயிருக்கலாம் கூனி - நெஞ்சிற் காதல், நிறைந்தவளாயிருப்பதென்ன தீதா?

இதையெல்லாம் சிந்தித்துத்தானோ என்னவோ இளநாகனாராம் இனிய சங்கப்புலவர்; எடுத்தார் ஓலையினை - எழுதி முடித்தார் “கூனி - குறளன்” காதல் உரையினை!