உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 59
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 59 · 59 / 104

4.

“கலிமயிற் கலாவங் கால் குவித்தன்ன ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீ இத் தண் கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே”

அரிசில் கிழாரை அடுத்து பெருங்குன்றூர் கிழார் எனும் அன்னைத் தமிழ் ஈன்ற அரும்புலவர் ஒருவர்; “ஆவியர் கோவே! உன் ஆருயிர்க் கண்ணகியின் அல்லல்போக்கி அகமலர முகமலர அவளை அழைத்து; வாழ்க்கை அளித்திட உடன் முன்வருவாயானால் - நீ வழங்கும் பெரிய பரிசில் எமக்கு அதுவேயாகும்;

5.

“அதுமனெம் பரிசில் ஆவியர்கோவே”

என்று, அவன்முன் நின்று கருணைகேட்டார் கண்ணகிக்காக! புலவர்கள் உரைத்த மொழியால் தனது பொல்லாங்குணர்ந்து பூட்டினான் தேரினை! பறந்தான் புயலாய்! புதுவாழ்வு மீண்டும் பூத்தது என்று மதுமலர்மங்கை, தென்றலாய் மாறினாள்!

குறிப்பு : 1, 2, 3, 4, 5 - புறநானூறுப் பாடல்களில் உள்ளவை. (முறையே - பரணர், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் - ஆகிய நால்வர் பாடியவை) பாடல்கள் - 142, 143, 144, 146, 147.

*

எமக்குத் தென்றல்; எதிரிக்கோ புயல்!

மேகத்தைப் பிழிந்து நீரெடுத்து - மலைகளின் தாகத்தைத் தீர்க்கின்ற குளிர்காற்று; மெல்ல நடைபயிலும் மேன்மைமிகு தகடூர் நாட்டில் வெல்லத் தமிழ் சுவைக்கும் அதியமான் நெடுமானஞ்சி வேந்தன்;

அத்தாணிமண்டபத்தில் வழக்கம்போல் ஆன்றோர் சான்றோர் கொத்தான மீசைகொண்ட தளபதிகள் அமைச்சர் பெருமக்கள், அமர்ந்திருந்து நாட்டுவளம் பெருக்க அரிய கருத்துரைகள் அள்ளிப்பொழிந்தபோது; அகமகிழ்ந்து பாராட்டிப் புகழ்ந்தேத்தி அதியமான் நெடுமான் மன்னன் அனைவரையும் வாழ்த்திநின்றான்!

அதுகண்டு ஒளவைப்பிராட்டியார் ஆனந்தக்கண்ணீர் ததும்ப; முடிமன்னன் முகம்பார்த்து முறுவலித்துக் கவிதையொன்றை முல்லைப்பூச்சரம்போலத் தொடுத்தெடுத்து என்றும் அழியாத முத்தாரமாய்ப் பதியவைத்தாள் புறப்பாட்டில்! அந்தச் சத்தான செய்யுள் தரும் உவமைநயம் உணர்ந்துமகிழ்க!

பற்றும் பாசமும் பரிவும் கொண்டு தன்னைச் சுற்றியிருப்போர் யாவரேயாயினும் அவர்பால் அதியமான் காட்டும் அன்பும் பண்பும், அத்துடன் எளிமையாய்ப் பழகிடும் இனிமைத்தன்மையும் ஒரு தலைவனுக்குரிய தகுதியாமன்றோ! இந்தத் தமிழ்நிலம் பெற்ற பெருமையாமன்றோ!

நினைத்துப் பார்த்தாள் நெடுமானஞ்சியின் இனிய இயல்பை;

தேனில்

நனைத்துக் கோத்தாள் தமிழ்க்கனிகளைக் கவிதையாய்!

“இமைபோலும் இந்த நாடு காக்கும் காவல் அரணே! எமையறிந்து எளிமையுடன் பழகும் தலைவா! உனையெண்ணும் போதெனக்கு நான் கண்ட யானையொன்றின் நினைவே மிகும்! உவமையாக அதன் செயலை ஒப்பிடுதலே உனக்குத்தகும்!

நீர்த்துறையில் இளைஞர்கூட்டம் நிறைந்து நின்று

தனது

நீண்ட தந்தத்தைக் கழுவிக் குளிப்பாட்டும் போழ்து; பிஞ்சுப்பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள்போல

- அவர்கள்

அஞ்சுவதற்கெதுவுமின்றி எளிதாய்த்தோன்றும் அந்த யானை!

அதன் எளிய தன்மைபோல எமை அணுகிப் பழகும்

நீயும்;

மதம் கொண்டால் அந்த யானை மருண்டெழுந்து

கிளம்புதல் போல்

மாற்றாரின் படைகண்டால் மண்ணதிர விண்ணதிரப்

புயற்