உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 48
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 48 · 48 / 104

இசையாகிவிட்டவள்!

மணம் புரிந்து இல்வாழ்வு நடத்துகின்ற - தன் மனங்கவர்ந்த தலைவியினைக் காண்பதற்கு மாலைப்பொழுதொன்றில் தோழியொருத்தி - அவள் மனைநாடி ஆவல்மிக ஓடோடி வந்தாள்! இல்லத்துக் கதவு கொஞ்சம் திறந்திருத்தல் கண்டு மெல்லத் தன் கைகளாலே மேலும் சிறிது தள்ள; அங்கு கண்ட காட்சியினால் கையது கொண்டு கண்ணது பொத்தி காந்தள் விரல் இடுக்கால் கடைவிழி போக்கித் தலைகவிழ்ந்தாள்! கூடத்தில் விரித்திருக்கும் பாய் ஒன்றில் ஆடை திருத்தல் பற்றிக் கவலையின்றி - கோயில் மாடத்துப் புறாப் போன்றாள் அவள் தலைவி படுத்திருக்க; அவள் மேடிட்ட மார்பகத்தில் முகம் புதைத்துக் கணவன்;

அதற்கு

குழந்தைபோல் குறும்புத்தனம் பல செய்ய உடந்தையாய் இருந்த தலைவி; உயிர்த்தோழி வருதல் கண்டு இலந்தைப் பழ மேனியினைத் துகிலால் மூடித் திடுமென எழுந்தனள் எனினும் அவளை அவன் விடவே இல்லை! கட்டித் தழுவிக் காமதாகம் முழுமையாய்த் தணித்துக்கொள்ள எட்டியவள் எழிலிடையைப் பற்றிக்கொண்டு - உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மிச்சம்மீதி துணியினையும் தொட்டிழுத்துத் துகிலுரியத் தொடங்கிவிட்டான். "விடுங்கள் என்னை" யென்று விழிமீன்கள் இரண்டும் துள்ள கடுங்கோபமுற்றவள் போல அவன் கையைத் தள்ளி; "தோழி; நீ எப்போது வந்தாய்!"

என்று தழுவிக்கொண்டாள்! 'வாழி; நீ பல்லாண்டு!" என உரைத்தவாறு தோழியவள்; 'தலைவனுக்குத் தலைசாய்க்கத் தலையணையில்லாக் காரணத்தால் தலைவியின் மார்பகத்தில் முகம் புதைத்துக் கிடந்தபோது வந்துவிட்டேன்" என்று வக்கணையாய்ப் பேசிக்கொண்டே 'குந்துதற்கு இங்கே அனுமதி உண்டா?"

என்றாள்.

அவசரமாய்

ஆடையுடுத்தி ஆணழகன் நிமிர்ந்து நின்று அவளைப் பார்த்து; "கோடை வெயில் காமத்தைத் தாங்காமல் - குளிர்

ஓடையில் நான் குளித்தெழ முனைந்தபோது; சாடை தெரிந்து ஒதுங்காமல் எங்கு வந்தாய்?" என்று கேலி செய்தான்! குறும்பாகப் பேசுவதில் குமரருக்கு ஈடு கொடுக்கும் கோதையாம் அத்தோழி; கொஞ்சமும் அஞ்சாமல் அவனை நோக்கி. "கரும்பனைய தலைவியைச் சந்திக்க முடியாமல் கார்த்திகைப் பிறை காண்பதுபோல் என்றோ ஒருநாள்; காணுகின்ற நிலையாலே பெருங் கவலை நீயுற்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்த காட்சியினை அன்று நாங்கள் பார்த்துப் பார்த்து பரிதாபமுற்று அந்தோ பாபம் என அடிக்கடி பேசிக் கொண்டோம்!

ஆனால் இன்றோ அயிரை மீன் அடர்ந்து நீந்தும் அழகுறு பொய்கையிலே, ஆம்பல் மலர் பறிக்க இறங்கிடுவோர் அப் பொய்கை நீரின் நடுவிலே நின்றுகொண்டு 'அப்பப்பா; தாகவிடாய் தாங்கவில்லை' என்பது போல் அணுப்போதும் பிரியாமல் தலைவி அருகிருக்க அவசரம் ஏன்; நேரம் - காலம் -தெரியாமல்" எனக் கேட்டாள்.. "தாகம் தணிப்பதற்குத் தகுந்த நேரம் எதுவென்று; உன் தலைவியிடம் குறித்துக் கூறிவிட்டுப் போ! அதனையவள் மனப்பாடம் செய்து வைத்தாலும் சரி அல்லால், மண்சுவரில் எழுதி வைத்தாலும் சரி; சொல்லுக்குச் சுவை கூட்டிப் பேசுகின்ற பாவாய்; ஓருண்மை நீ அறிக!

சொல்லிவிட்டு வருவதல்ல இன்ப உணர்வு " என்றுரைத்தான் தலைவன். "இன்று நீ தவிக்கின்ற தன்மையினைப் பார்க்குங்கால் அன்று களவொழுக்கத்தில் தலைவிதனைக் காண முடியாமல்

உனைக்

கொன்று குவித்த இன்ப உணர்வுத் தூண்டுதலை எப்படித்தான் மென்று விழுங்கி வாழ்ந்தாயோ என எண்ணி வருந்துகின்றேன்" என உரைத்து; அவன் பதிலுக்குக் காத்திராமல் அந்தப் பைங்கிளியாள் பறந்தே விட்டாள்! மூடாமல் இருந்த கதவுதனை மூடித் தாழிட்டு பாடாமல் குறையிருந்த முழுப் பாட்டை முடிப்பதற்கு முனைந்தான் தலைவன்! இசையாமல் ஊடல் கொண்டாள் தலைவி எனினும்

பின்னர்

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

இசையாமல் என்ன செய்வாள்? இசையாகிவிட்டாள்!

\*

\* “அயிரைபரந்த அம்தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு, இவள் இடைமுலைக் கிடந்து, நடுங்கல் ஆனீர்; தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனிர்: நோகோ யானே”

\*

(குறுந்தொகை - பாடல் : 178 பாடியவர் : நெடும்பல்லியத்தை (பெண்பாற்புலவர்)

பொருள் விளக்கம் :

தண் பழனம் =குளிர்ந்த பொய்கை.குறுநர்= பறிப்பவர்கள். நீர்வேட்டாங்கு = தாகவிடாய் கொண்டது போல. நடுங்கல் = (விரகதாப) தடுமாற்றம்.தொழுது காண்பிறை = கார்த்திகைப் பிறை. அரியமாகிய காலை = காண்பதற்கரிய களவுக் காலம். பெரிய நோன்றனிர் = பெரும் துன்பத்தை அடைந்திருப்பாய். நோகோ யானே = (யான் நோகு) அதனை எண்ணி வருந்துகிறேன்.

\*

போர்த்திசை

நோக்கிய

புலிப்போத்து!

விரைந்து வருவீர் வீரர்காள் எனவே இரைந்தது முரசம்! பறந்து வந்து படையினிற் குவிந்தனர்; உயிர் துறந்து நாட்டைக் காத்திடும் மறவர்! மறந்தும் இனிப் பிரிவதேயில்லை மலரே மணியே என்று பிறந்தமேனியாய்ப் பிணைந்து கிடந்த காதலர் செவியைக் கொட்டிய முரசின் சத்தம் தொட்டிட; காதலன் விட்டுப் பிரிந்திடுவானே யென்று

அவனைக்

கெட்டியாய் அணைத்துக் கொண்டாள் கோதை! முட்டிய மார்பகச் சுகத்தை ஒதுக்கி; எழுந்தான் காளை! சிங்க ஏறென நிமிர்ந்து நோக்கி எடுத்தான் வாளை! பகைவர் உயிர் பறிக்கப் போகுமுன்னர் - இந்தப் பாவை உயிர் பறித்துப் போகின்றீரே; நியாயந்தானா? பாளைச் சிரிப்பெல்லாம் பயந்தோடிப் போக - அவன் தாளைப் பற்றியவள் தழுதழுத்த குரலில் கேட்டாள்! பூவிதழ்கள் பனித்துளியைத் தாங்காமல் பூமியிலே சிந்துவதைப் போல் பொன்னிமைகள் நீர்கொட்டத் துவண்டுவிட்ட தோகையினைத் தழுவிக்கொண்டு ''உயிரும் உடலுமாய் ஒன்றாகி உறவு பூண்டோமெனினும் உயிர் கொடுக்க வருக எனப் போர் முரசு ஒலித்துவிட்டால் மண்ணைக் காத்து நமது மானம் காப்பதல்லால் - ஒரு பெண்ணைக் காத்துக் கொண்டிருத்தல் சரியா; கண்ணே!

விண்ணைப் பார்த்துக்கொண்டே யிருந்திடுக; நமது வெற்றிக்கொடி, உன் கண்ணைப் பறிக்குமளவுக்கு உயர்ந்து பறப்பது கண்டு களித்திடுக! களத்தில் நான்,

சாகாமல் இருந்தால் நம் சந்திப்பு மீண்டும் உண்டு; இல்லையேல்

- மனம்

நோகாமல் முத்தங்கள் என் சவத்திற்கு ஈந்து வீரத்தை வாழ்த்திடுக'' என்றான்!