சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 49 · 49 / 104
நீர்த்திரையால் மறைந்த விழி திறந்து பார்ப்பதற்குள்; அவன் போர்த்திசை நோக்கிப் பாய்ந்துவிட்டான் புலிப்போத்தாய்! கொடிகள் அலையெனக் காற்றில் அசைந்திடவே வானில் இடிகள் ஆயிரம் எனவே படைகள் முழங்கிடவே - வீரர், முடிகள் களத்தின் குருதியில் நனைந்து மிதந்திடவே - மறவர் குடியினர் நடத்திய போர்முனை புகுந்தான் வீரன் அவனே! எதிர்த்து வந்த பகைப்புலத்தார் தலைகளையே அறுத்தெறிந்து முன்னேறும் வேளையிலே - ஒரு களிற்றின் மீது கைவாள் வீசி வீழ்த்திப் பின்னர்; கரத்தினிலே வாளுருவிப் பார்த்தபோது, வளைந்தும் நெளிந்தும் அந்த வாள் இருத்தல் கண்டான்!
- அதன் வளைவு போக்கிப் போரைத் தொடர்வதற்கு வழியென்னவென்று திகைத்து நின்றான்!
நெளிந்த வாளை நிமிர்த்துதற்கு; அவன் நெஞ்சில் விளைந்தது ஒரு தந்திரம் - அதனை விரைந்து முடித்திட; உடனே வீழ்ந்து கிடக்கும் யானையை அணுகினான்!
வீங்கிய மலையென வீழ்ந்திறந்த யானையின் மேல்நோக்கி ஓங்கி உயர்ந்த இரு தந்தங்களிடையே; தன் கையினில் தாங்கிய வாளையே நுழைத்து அழுத்தி அவ்வீரன் - பசும் மூங்கில் ஒன்றை நிமிர்ப்பது போல் நிமிர்த்து விட்டான்!
மீண்டும் வாளேந்தி வருபவன் கையால் - இனியும் மாண்டு மடிந்திடப் படைபலம் இல்லையென்று மாற்றார் மருண்டோடிப் பிழைத்துக் கொண்டார்;
"தோற்றாரோ அத்தான்; நமைப்பிரிக்க நினைத்தோர்! தொலைந்தாரோ அத்தான்" என்று - தித்திப்பு முத்தம் தெவிட்டாமல் கொடுத்துத் திரும்பி வந்தவன் தோளில் தொத்திக் கொண்டாள்; இருவரும் ஒட்டிக்கொண்டார்;
\*
\* “வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
நூலரி மாலை சூடிக், காலின், தமியன் வந்த மூதிலாளன், அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தாத் தனக்கு இரிந்தானைப் பெயர்புறம் நகுமே."
\*
(புறநானூறு - பாடல் : 284 பாடியவர் : ஓரம்போகியார்)
பொருள் விளக்கம் :
வருகதில் வல் வருக = விரைந்தோடி வருக. தமியன் வந்த மூதிலாளன் = தனியாக வந்த மறக்குடி மறவன். அருஞ்சமம் = பெரும் போர். ஒரு கை இரும்பிணத்து எயிறு = வெட்டி வீழ்த்தப்பட்ட களிறின் தந்தம். மிறையாகத் திரிந்த = வளைந்து கோணிய. இரிந்தான் = அஞ்சி ஓடியவன். புறம் நகம் = புறங்கண்டு சிரிக்கும்.
\*
இங்கே வேண்டாம்...
தங்கை
இருக்கின்றாள்!
வெள்ளரிக்காய் விதைபோலச் சிரிக்கும் பல்லழகும் - பூவின் கள் இனிக்கும் விதம் போல மழலைச் சொல்லழகும் கொண்டு வெண்மணற் பரப்பில் ஒரு செந்தமிழ்ச் செல்வி கண் மலர் மூடிக் கைமலர் கொண்டு, புன்னைக் காய்களைப் புதைத்து விளையாடி; அவற்றில் ஒன்றை மறந்து ஆங்கு விட்டுச் சென்றிட
அது
கன்றாய் வளர்ந்து இள மரமாய்ச் செழித்தது! நெய்யும் பாலும் அப்புன்னையின் வேரில் பெய்து வளர்த்தாள் பேரழகுப் பதுமை! அன்னை வளர்த்ததோ, அழகு மகளை! மகளோ ; புன்னை வளர்த்துப் பூரிப்பு கொண்டாள். ஒரு நாள் அன்னை; ஓவிய மகளை அன்புடன் நோக்கி; 'திருநாள் போலத் தினமும் புன்னையைச் சீராட்டும் புதல்வியே! உன்னுடன் சேர்ந்து வளர்ந்து உயர்ந்து நிழல்தரு புன்னை; உந்தன் இளைய உடன்பிறப்புப் போன்றதாம்! உரைத்தேன் இதனை உவப்புடன்'' என்றாள்.
சுவைத்தேன் அருந்திய இன்பம் பெற்று, செந்தமிழ்ச் செல்வி சிந்தை அணு ஒவ்வொன்றும் சிலிர்த்திடக் குதித்து; அன்புப் புன்னையை ஆரத் தழுவி தங்கை இனிமேல் நீதான் எனக்கு -
என்
தாயே இதனைச் சொன்னாள்'' என்றாள்! சொக்கி நின்றாள்! மங்கை இவ்விதம் மலராய் விரிந்த முகத்துடன் நிற்க; அங்கேயொரு கை அவள் கண்களைப் பொத்தித் திடுக்கிட வைக்க வலம்புரிச் சங்கம் இசையொலி எழுப்பும் வளமிகு நெய்தல் நிலத்தின் தலைவனே ; குலக்கொடி இமைகளை மூடித் தழுவினான் என்று, அந்த விளக்கொளி விழியாள் ஒரு விநாடியில் உணர்ந்தாள்!
"வந்தாயோ கண்ணா" என்றாள்; "வரவில்லையென நொந்தாயோ கண்ணே" என்றான்! தந்தானே முத்தங்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக இரு பந்தாடும் மார்பகத்தை; பாவை, அவன் மீது சாய்த்து, ''இங்கு வேறெதுவும் நடத்த வேண்டாம் அத்தான்; என் தங்கையொருத்தி பார்த்துக்கொண்டிருக்கிறாள்'' - என்றாள்! "எங்கு ஒளிந்துள்ளாள் உன் தங்கை? என்னேடி இது வியப்பு எப்போது அவள் பிறந்தாள்? எனக் கேட்டான் தலைவன்! புன்னையிளம் மரமிதனை நான் வளர்த்ததாலே ; என்னோடு சேர்ந்து வளர்ந்த இந்தப் புன்னையினை - என் தங்கையைப் போல் நினைக்குமாறு - என் தாய் எனக்குக் கூறியுள்ளாள்; அதனாலே, தட்டாதீர் என் பேச்சை - தழுவாதீர் இங்கென்னை!
கட்டாணி முத்தேயென்று கற்கண்டுப் பொடி தூவாதீர்! கன்னத்தைப் பழமாகச் சுவைப்பதற்கும் - இன்னும் என்னத்தை நான் சொல்ல; அவை அனைத்துக்கும் நான் வளர்த்த இத்தங்கையின் முன்னே
எனை
நாணம் வந்து தடுப்பதாலே, வான் பொழியும் ஒளி மழையில் - இன்பத் தேன் பொழியும் திருவிழா நாம் நடத்துதற்கு வேறு மரநிழலொன்றைத் தேடிச் செல்லலா"மென ஏறு போன்றான் தோளைப்பற்றி வீணையிசைப் பேச்சுக்காரி இழுத்துச் சென்றாள் - 'உன் ஆணையதுவானால் அட்டியுண்டோ எனக்கு?"
என்று கொஞ்சிக் குலவியவள் கொடி இடை பற்றித் தன் நெஞ்சகத்தில் அவள் முகத்தை அழுத்திக் கொண்டான்!
\*
\* “வினையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ்முளை அகைய ஐநெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம! நாணுதும், நும்மொடு நகையே விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
