உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 47
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 47 · 47 / 104

கருகியதாம்!

கருகிய காலின் கறுப்புத் தழும்பும் - கிழவன் கண்ணுக்கோர் அழகாய்த் தோன்றியதால்

Illustration

Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.

திருமாவளவன் கரிகால் பெருவளத்தான் என்று திருத்தி அமைத்தான் சோழப்பிள்ளையின் பெயரை! வழிவழி வந்த தோன்றல் வளர்கின்றான் என்று கேட்டு விழிதனில் கனலை மறைத்து மொழிதனில் தேனைக் குழைத்து வஞ்சகத் தாயத்தார் வரந்தரு முனிவர் போலே நெஞ்சாரப் பொய்யுரைத்து நேர் எதிர் வந்து நின்றார். ''பட்டத்து யானையிது நரியைப் போல் பதுங்கி இங்கே பாட்டனே! உந்தன் பொறுப்பில் பலநாள் இருத்தல் தீது பரம்பொருள் அருளைப் பெற்று பகர்கின்றோம் பயமே

வேண்டாம்

படையேதும் தேவையில்லை; எம்பால் பக்தி செலுத்தி, நம்பியாம் கரிகால் வளவனை எம்மை நம்பியே அனுப்பிடுக! அவன் நாடாளும் நாளொன்றும் தொலைவில் இல்லை' என நயம்பட நடிக்கலானார் நச்சுமனத் தாயத்தார்!

வீரரையும் விவேகமிழக்கச் செய்யும் முனிவர் வேடம்!- விஷப்பேச்சில் ஒளிந்திருந்த விபரீதத் திட்டந்தன்னை விளங்கிக்கொள்ள வழியின்றி முதுகிழவன்

அதனாலே

விடைகொடுத்து அனுப்பி வைத்தான் வாழ்த்துக் கூறி! கால் தொட்டு வணக்கம் செய்து கண்ணீரை மலராய்க் கொட்டி கரிகாலன் விடைபெற்றுக் கிழவனிடம் முத்தம் பெற்று காவியுடைக் கயவர்களாம் முனிவர்பின்னால் கையில் வாள் பிடித்துத் தலை நிமிர்ந்து புறப்பட்டான்! வழி நெடுகக் கடவுள் பற்றிப் பல கதைகள் வகைவகையாய் உபதேச அறநெறிகள்; சோழ வழித்தோன்றல் கரிகாலன், வன்மனத்தோர் உரையினிலே வசமிழந்து போய்விட்டான் அவர் வலையினிலே வீழ்ந்துவிட்டான்!

''களைப்புற்றிருக்கின்றோம் அனைவருமே ; அதனாலே கரிகால் வளவ; சற்றுக் கண்ணயர்வோம் " என்றவுடன் களத்து மேடொன்றில் அவன் படுத்துறங்கிடவே ஒரு கணத்தில் அவனை மயக்கமுறச் செய்து கடத்திவிட்டார்! மூலிகையின் மயக்கச் சோர்வு நீங்கியவன் முனிவர்கள் எங்கே எனத் திகைத்துத் தேட;

"மூளி பெற்ற மகனே! உன்னை மூடியிருப்பது

சிறைச்சாலையடா

மூச்சு விடாதே இனி உனக்கு முடியில்லை; உன் முடிவே

இங்கேதான்!"

முழங்கிற்று இவ்வாறு தாயத்தார் கூட்டம் முனிவர் வேடம்

கலைத்து!

மூடிற்று சிறைக்கதவை; ஆடிற்று மகிழ்ச்சியினால்!

முழுமதியும் முகில் கிழித்து வெளிவரும் என்பதறியா மூடர்களே போய் வருக!' என உள்ளுக்குள் முணுமுணுத்தான் கரிகாலன்! அடைபட்ட கரிகாலன் அணையுடைத்த வெள்ளம்போல் சிறையுடைத்துத் தப்பியதை எவ்வாறு செப்புகிறார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் கவிஞர் என்பதையும் படித்தேனாய் அருந்திடலாம் பட்டினப்பாலையெனும் பாட்டினிலே! காட்டுக்குள் சுதந்திரமாய்த் திரிந்த புலி; இருப்புக் கூட்டுக்குள் சிக்கிக்கொண்டது போல் கோட்டைச் சிறைக்குள்ளே சிக்கிக்கொண்ட கரிகாலன் ஆட்டைப்போல் அடங்கிக் கிடக்கவில்லை!

ஆழ்குழியில் விழுந்துவிட்ட யானையொன்று அக்குழியைத் தந்தத்தால் மண்தள்ளித் தூர்த்துவிட்டு அஞ்சாமல் வெளியேறித் தன் இணையைத் தேடிக் கொஞ்சாமல் கொஞ்சுகின்ற காட்சியினைக் கவிஞர்;

ஒரு

கரிகாலன் சிறை மீண்ட நிகழ்ச்சிக்குக் கச்சிதமாய் உவமையாக்கிக் காட்டுகின்றார்! களிறுபோல் திறமையுடன் வெளிவந்த காளை கல்நெஞ்சத் தாயத்தாரை நோக்கி ஓங்கினான் வாளை! புகார் நகரில்; உறையூரில் பறக்கின்ற புலிக் கொடிக்குச் சொந்தக்காரன் கட்டிளங் காளைக் கரிகால் சோழன் தானென்று ; பட்டினப்பாலை பல கதை சொல்லும்! காதலியைப் பிரிந்து காட்டுவழி செல்பவனோ கரிகாலன் வேலினும் கொடியது அவ்வழி என்பானாம்! காதலியின் தோளினைப் பற்றி கற்பனை செய்பவனோ கரிகாலன் செங்கோலினும் குளிர்ந்தது எனக் கூறுவானாம்!

போர் மறவன் - புலிப்போத்து தமிழ்ப் புவியாண்ட பெருமகனாம் கரிகால் பெருவளத்தான் புகழ்பாடி வாழ்ந்திடுவோம் இனமானம் போற்றி யென்றும் வென்றிடுவோம்!

\*

(1) “........ கூருகிர்க் கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் பிறர், பிணியகத் திருந்து பீடு காழ் முற்றி அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று பெருங்கை யானை பிடிபுக் காங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவுடைத் திண்காப் பேறிவாள் வாள் கழித்து உருகெழு தாயம் ஊழின் எய்தி...''

(2) “................. திருமாவளவன் தெவ்வர்க் கோக்கிய வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே."

\*

(பட்டினப்பாலை பாடியவர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்)

பொருள் விளக்கம் :

கூர் உகிர் = கூரிய நகம். குருளை = புலிக்குட்டி. பிறர்பிணி = பகைவரது கட்டுக்காவல். பீடுகாழ் = பெருமைக் குரிய மன உரம். குழிகொன்று = குழியைத் தூர்த்து. பிடி = பெண் யானை. நண்ணார் = பகைவர். தாயம் ஊழின் எய்தி = தனது அரசுரிமையை முறையாகப் பெற்று. தாயத்தார் = சொத்துரிமை கொண்டாடுவோர். தெவ்வர் = பகைவர். ஓக்கிய = பாய்ச்சிய.வெய்ய = கடுமையானது.

\*