சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 46 · 46 / 104
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
வஞ்சியெங்கள் குலமகளை வாஞ்சைமிகு வடிவழகை
அன்றாடம்
கஞ்சிக்குப் பாடுபடும் குடும்பத்தில் கண்ணீரில் மிதக்கவிட ஒப்பமாட்டோம்! அடி தோழி; இங்கேவா! அழகுமயில், சோலையிலே
இருக்கின்றாள்!
முடிவிதுதான் பெற்றோரும் உற்றாரும் எடுத்ததென அவளிடத்தே கூறிவிடு!'' என்றுரைத்த செல்வச் செருக்குப் பெற்றோரின் ஆணைதனைச் சென்றுரைத்து மனம் மாற்றக் கிளம்பிவிட்டாள் அவள் தோழி ! மலர்கூடித் தென்றலிசையில் மகிழ்ந்தாடும் வனந்தனிலே அலர் தூற்றல் பற்றிக் கவலையின்றி வீற்றிருந்த அணங்கின்பால் முகம் கோணிக்கொண்டு தோழி; முழுக் கதையும் கூறிவிட்டாள்!
தலைவிக்கு ;
அகம் நெருப்பாய்த் தகித்திடவே சூளுரைத்துப் பதில்
சொன்னாள்!
"இரவெல்லாம் பெய்த பெருமழையில் வயல் ஈரங்கண்டு உரமேறிய பனைமரத்து நுகத்தடியைக் கொண்டு ஆனைகளை ஏரில் பூட்டி ஆழமாய் உழுதுழுது பானைகளில் அள்ளிவந்த வெள்ளிவிதை விதைத்துப் பொன்னையே விளைச்சலாக என் பெற்றோர் குவித்திடினும் என்னையொருவர்க்கு நானே தந்தபின்னர்; வெள்ளியென்ன பொன்என்ன வைரமணி மாடமென்ன கூடமென்ன துள்ளியோடும் அருவிநிறைத் தோட்டமென்ன துரவென்ன; வேண்டேன் எதுவும் நான் இந்தப் பிறந்தகத்தில் தீண்டேன் ஒரு பொருளும் என்னிரு கரத்தாலே! கோடிப் பொன் கொண்டுவருவேன் என்றெண்ணிக் கொடியென்னைப் படரவிட அவரும் தோள் தந்தாரில்லை!
செங்கேழ்வரகின் பசுங்கதிர் கொய்து காத்து செங்குன்றந்தனிலே நன்கு உலர்த்தி எடுத்து ஊடுபதர் போக்கி, உதவினோர்க்குத் தவறாது உதவி காடுதனில் வீழுகின்ற விறகுகளை பொறுக்கி வந்து - உப்பின்றி வெந்த குப்பைக்கீரையுடன்; உண்ணும் தட்டும் இரவலாய்ப் பெற்று - வரகுச்சோறு
ஒன்றுவிட்டு ஒருநாள் தின்று கிடக்கவும்; உடுத்துதற்கு மாற்றுத்துணியுமின்றி கிழிந்த சேலையே அணிந்திடக் கிடைக்கவும் இழிந்ததோர் நிலையே எனக்கு வந்திடுமாயினும் ; அழிந்திடாது எமது காதல் என்றுரைத்திடுக தோழி; ஆளனிருக்குமிடமே எனக்கு அரண்மனை எனக் கூறிடுக ஓடி! பிறந்த வீட்டில் செல்வப்பெருக்கம் இருக்கலாம் - எனினும் புகுந்த வீட்டுக் கூழ்தான் அமுதமென விளக்கிடுக தோழி! கணவனென ஒருத்தி வரித்தவருடன் வாழ்வதுதான் கற்புநெறி வாழ்வென்றும் கண்ணியமிகு வாழ்வென்றும் கணமும் இங்கு நின்றிடாமல் என் பெற்றோரிடம் சென்று கழறிடுக தோழி!
காற்றெனவே கிளம்பிடுக தோழி ! என்றவுடன்; 'இதற்குமேல் இங்கு எனக்கென்ன வேலை!" என்று இறகு கட்டாமலே பறந்து போனாள் தோழி! மகள் சொன்ன பதிலுரையில் தவறொன்றுமில்லையதனால்; மறுப்பொன்றும் கூறாமல் பெற்றோரும் மணநாளைக் குறித்துவிட்டார்!
\*
\* “இராமழை பெய்த ஈர ஈரத்துள் பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி வெள்ளி விரைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே செங்கேழ் வரகுப் பசுங்கதிர் கொய்து கன்று காத்துக் குன்றில் உணக்கி ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க் குதவிக் காடுகழி இந்தனம் பாடுபார்த் தெடுத்துக் குப்பைக் கீரை உப்பின்றி வெந்ததை இரவல் தாலம் பரிவுடன் வாங்கிச் சோறது கொண்டு பீறல் அடைத்தே ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும் நன்றே தோழிநம் கணவன் வாழ்வே.”
\*
பொருள் விளக்கம் :
நுகம் = நுகத்தடி. ஈண்டிய = செல்வ மிகுந்த. உணக்கி = காயவைத்து. இந்தனம்=விறகு. பாடு = விழுதல். தாலம் = உண்கலம். பரிவு = வருத்தம். பீறல் = சேலைக்கிழிவு.
குறிப்பு : சங்க இலக்கியத் தொகுப்புக்களில் இணைக்கப்படாமல் விடுபட்டுப்போன பாடல் இதுவென்றும்; தமிழறிஞர் தேவநேயப்பாவாணர் தேடியெடுத்துத் தந்ததென்றும்; இந்தப் பாடலை என்னிடம் மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்க்குடிமகன் தந்து "சங்கத்தமிழ்" எழுதிடச் சொன்னார். அவருக்கு என் நன்றி. மு.க.
\*
காவிரிநாடன்
கரிகாலன்!
காவிரியாம் குமரிப் பெண்ணின் நுனிநாக்கைக் கடலழகன் தன் அலைநாக்கால் தொட்டுத் தொட்டுச் சுவைபார்த்துச் சுகம் பெற்றுக் குதித்தாடும் பூவிரி சோலைப் பூம்புகார் மண்ணின் புகழ்மலிச் சோழன் கரிகால் பெரும் பெயர் திருமாவளவன் கருவில் தாயின் வயிற்றில் இருந்தபோதே காலம்; அவன் தந்தையின் உயிரைப் பறித்துக் கொண்டதாம்! கயவராம் அவன் தாயத்தார் சோழ பூமியைச் சுருட்டப் பார்த்தார்! வயிற்றில் துள்ளும் சிங்கக்குட்டியைப் பெற்று வளர்த்திட வழியொன்று கண்டு சோழ மாதேவி, மாளிகை நீங்கி; வைரநெஞ்சக் கிழவர் ஒருவரின் துணையைப் பெற்று வஞ்சகர் காணா இடம் தேடி வாழ்ந்தனள் சிலநாள்!
நிறைமாதம் முடிவுற்று நிலவு நிகர்ப் பெண்ணரசி பிறைமதி போல் பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தாள் குறையிலாக் கொள்ளையழகுக் குழந்தைத் தங்கம் உறையிடாக் கத்திபோல ஒளிவிட்ட தமிழச் சிங்கம்! திருமாவளவன் எனத் திகழட்டும் அவன் பெயர் என்று தெவிட்டாத முத்தங்கள் சுளையாய்த் தந்து - தன் கணவன் உருவாக வந்துதித்த குலவிளக்கைத் தழுவி; மகனே நீ உலகாளப் போவதுறுதியென வாழ்த்துரைத்தாள் அன்னை! ஒளிந்திருந்த பேரரசி ஒரு மகனை ஈன்ற செய்தி ஒதியமிலார் உள்ளத்துத் தாயத்தார் அறிந்திட்டார்!
அவனை ஒழிப்பதன்றி வேறு பணி இல்லையெனத் திட்டமிட்டு ஓநாய்கள் முயல் கவ்வச் சூழ்வதுபோல் வட்டமிட்டார்! உறையூர் அருகே சிற்றூர் ஒன்றில்; தங்களின் உறுபகை வளர்வதை மோப்பம் கண்டு ஓடினார் ஆங்கே!
ஒரு நொடியில் வளவனையும் அவன் வாஞ்சைமிகு அன்னையையும் தருநிழலாய் இருந்திட்ட கிழவனையும் தீர்த்துக் கட்டத் தீயிட்டார் வீட்டுக்கே!
வீரப்பால் குடித்துத் தொட்டிலிலே விழி மூடித் தூங்கும்
பிள்ளை
வெற்றிவேல் பிடித்துப் பகைவர்களை வீழ்த்துவதை
எண்ணியெண்ணி
விழிமூடிச் சற்றயர்ந்து உறங்கினாள் கிள்ளை ; அப்போது வெறி கொண்டோர் இட்ட தீ வான்முட்ட எழுந்ததுவாம்!
கண்ணே என்றலறிக் கயல்விழி பிதுங்க - தமிழ் மண்ணின் வழித்தோன்றல் உறங்கும் தொட்டிலிலே கணப்பொழுதும் தயங்காமல் கைநீட்டிப் பாய்ந்திட்டாள்... கடுவேகம் காட்டி ஓர் ஈட்டி வந்ததை நெஞ்சிலேந்தி சாய்ந்திட்டாள்!.... வாழ்வதற்கு இடந்தந்த வயதான கிழப் பெரியோன்; சோழ மண் தாழ்வதற்கு இடமளிக்க மாட்டேன் எனச் சூளுரைத்து; வாரியெடுத்துத் திருமாவளவனை வாகாய்த் தோளில் போட்டு வாள் சுழற்றிப் பகை எதிர்த்து வாகை சூடிக் குழந்தையுடன் தப்பிவிட்டான்!
கிழ வேங்கைப் போன திசை கிழக்கா மேற்கா எனத் திகைத்து கிட்டியதை விட்டு விட்டோமே என்ற கவலையுடன் கீழ்மைக் குணத் தாயத்தார் நாடு காடெல்லாம் அந்தக் கிழவனிருக்குமிடம் அறிவதற்கு ஆளம்பு விடுத்திட்டார்! தணலில் தங்கமாய் தாய் ஆனபோதிலும் - இவனைத் தமிழர் தங்கமாய் ஆளாக்க வேண்டுமென்று தள்ளாத வயதிலும் அந்த இனமானப் பெருங்கிழவன்; தளராத உறுதி பூண்டு தடந்தோள் குலுக்கிக் கொண்டான்! நெருப்பிடை நீந்தித் திருமாவளவனைத் தூக்கி வெறுப்புறு பகைவர் சிலர் உயிரையும் போக்கி பொறுப்புடை பணியினைக் கிழவன் ஆற்றியபோது - தீப் பொறித் துகள் பட்டுக் குழந்தை வளவன் கால் சற்றுக்
