உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 35
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 35 · 35 / 104

அப்போது, மாங்குடி மருதனார் இடைமறித்து; “பாண்டி மன்னர் குலக் கொழுந்தே! இந்தப் பாவலன், மறுப்பதாக எண்ண வேண்டாம். மாற்றார் வலிமையினைக் காணும்போது தோற்றோம் இறுதியில் நாம் என்றே முடிவு வரும்! எச்சரித்தல் என் கடமையென்ற காரணத்தால், இனியும் சிந்தித்துப் போர்தவிர்த்தல் நலமாகும்” என்றார்!

மீன்கொடிப் பாண்டியனோ; மாங்குடி மருதனார் மொழி கேட்டு, அவர் முன் சென்று; “மான்குட்டி போல் இருக்கின்றேன், அதனாலே

மாற்றார் எனும் புலிப்போத்தின் வாய்க்குள்ளே இரையாக மாறிப்போவேன் என்று இரங்கலுரை இப்போதே ஆற்றுகின்றீர். அச்சம் தவிர்த்திடுக அய்யனே! இறந்தபின்னர் எச்சமெனத் தமிழன் விட்டுச் செல்வது மானமொன்றே! அந்த மானத்தைப் பகைவர் காலடியில் பூவாக்கிப் போட்டுவிட்டு, சொந்த வாழ்க்கைதனை சுகமாக ஆக்கிக் கொள்வோன் சோற்றாலடித்த பிண்டமாவான்; நூல் அறுந்தக் காற்றாடிப் பட்டமாவான்!

தமிழுக்குத் தலைவணங்கும் நெடுஞ்செழியன் நான்; தகவிலார்க்குத் தலைவணங்க ஒப்பமாட்டேன்! எழுவரென்ன எழுபது கோடிப் பேர் எட்டுத் திசையும் முரசு கொட்டி, எதிர்க்க வரினும் என்னை - இந்த இளையோன் எதற்கும் இளையான் என்ற இலக்கியத்தைப் படைக்கின்றேன் போர்க்களத்தில்! பாண்டியத்துப் பெருமண்ணில், வெறும் ஆண்டிகளோ வாழ்கின்றார்? இல்லை! இல்லை! குலமாதா பாண்டித்தாய்; கோழைகளைக் குழந்தைகளாய்ப் பெற்றெடுக்கவில்லை! இந்த இந்த நிலமகளின் பெருமைக்கு மேலும் பெருமை.

நெடுஞ்செழிய இளைஞனவன் சேர்ப்பான் என்று நம்பிடுவீர்; நாட்டோரே! நல்லோரே!” என முழக்கி; “நகுதக் கனரே, நாடு மீக்கூறுநர்” எனும் நரம்பெலாம் வீரம் மீட்டும் புறப்பாட்டை நாடாளும் இளமன்னன் இயற்றலானான்!

அப்பாட்டில்

\* அணிதேர்ப் புரவியும் ஆனைகளுடனே ஆட்பெரும்படையும் மிகக் கொண்டதால், நம்மை; இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும் இளையோன் என்றும் சிறுமொழி கூறிய எதிரிகள் எழுவரின் இடுப்பை ஒடித்து தலையாலங்கானப் போரில் வென்று - அவர் தம் அலைகடற் படையை அறவே அழித்து நிலைகுலைந்த பகைவரை முரசொடு பிடித்து மலையென நிமிர்ந்து நிற்பேன் கண்டீர்! எழுவரிடம் எதிர் நிற்க முடியாமல் நான்

விழுவதானநிலையொன்று தோன்றுமாயின் குடிமக்கள் நலம் பேணாக் கொடுங்கோல் மன்னன் எனக் குவலயம் எனைத் தூற்றட்டும்! தோல்வி என்னைத் தழுவுமாயின் தொழுதேத்தி எனை நாடி இல்லையென்று இரப்போர்க்கு எதுவும் வழங்காத பாவியென வையம் இகழுமளவுக்கு வறுமை வந்தென்னை வருத்தட்டும்! வெற்றி மாலை என் தோளை வெறுத்துவிட்டால் உற்றார் அனைய எளியோரின் துயர்போக்க உதவிட முடியா நிலை எனை வந்தடையட்டும்! மாற்றார் கை ஓங்கி நிற்க - நம் மறவர் படை தாழ்ந்து விட்டால், மாங்குடி மருதனார் தலைமை தாங்க மாங்குயிலோசைத் தமிழ் மொழியில் பாப்புனையும் பாவாணர் அனைவருமே பாண்டியத்தை இனிப்பாடுவது சிறப்பல்ல என்று இந்த நெடுஞ்செழியப் பாண்டியனை நீங்கி நெடுந்தொலைவு சென்றிடட்டும்!”

இவ்வண்ணம் சூளுரைத்த பாண்டி மன்னன் செவ்வண்ணம் கண்ணில் தேக்கி - படைக்குத் தலைமையேற்றுச் சென்றிட்டான்; தலையாலங்கானப் போர்முனை நோக்கி!

*

சூளுரைக் கவிதையைப் பாண்டியன் சுளைத் தமிழில் வடித்தபோதும்;

சுற்றத்தார் அனைய எளியோர் காத்தல், கொற்றவர்க்குரிய கொடையளித்தல், பற்றுக் கொளல் குடிமக்கள்பால், கற்றறிந்த புலவர் கூட்டம், நாடு போற்றிக் கவிபுனைதல் - இந்நான்கும், உயிரே போல் கருதி வாழ்ந்த உயர்தனிப் பண்பாட்டையன்றோ உறுதியாக உரைக்கின்றான்!

இதையெண்ணி மகிழும் காலை - நம் இதயம்; தமிழ் உணர்வால் மலரும் சோலை!

*

\* “நகுதக் கனரே, நாடுமீக் கூறுநர்; இளையவன் இவன் என உளையக் கூறிப், படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், படைஅமை மறவரும், உடையம் யாம் என்று உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய என்நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக், குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக! ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக, என் நிலவரை; புரப்போர் புன்கண் கூர, இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே”

*

(புறநானூறு : பாடல் : 72 பாடியவர் : தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்)

பொருள் விளக்கம் :

நகுதக்கனர் = சிரிக்கத் தக்கவர். மீக்கூறுதல் = அதிகமாகப் புகழ்தல். உளையக் கூறி = வெறுத்து வருந்துமாறு சொல்லி. பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானை = பரந்த அடியும் பெரிய காலுங் கொண்ட உயர்ந்த யானை. உறுதுப்பு அஞ்சாது = என் மிகுந்த வலிமைக்கு அஞ்சிடாமல். வரைக என் நிலவரை = என் நாட்டை விட்டு நீங்குக. புரப்போர் புன்கண் கூர = சுற்றத்தார் போல் பாதுகாக்கப்பட வேண்டியவர்களின் துயரம் மிகுந்திட.

*

குக்கூ! என்றது கோழி!

தும்பை மலர்; மாரியெனப் பொழிவதுபோல் துறவிகளின் வெண்தாடி, தரையளவு நீண்டதுபோல் தூய நல்லருவி வழிந்தோடும் - சுனையொன்றில் தோகையவள் நீராடித் துள்ளியோடி துகில் நனைந்த காரணத்தால் கட்டழகு உடல் முழுதும் கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பதுபோல் காட்சி தந்தாள்; அவ்வேளை; கண்டயர்ந்தான் ஒரு காளை! “மலர்ந்த தாமரைப் பூக்கள் இரண்டு மார்பினில் தலைகீழாய்க் கவிழ்ந்ததுவோ? அவற்றின்

தண்டுகள், அடிவரை வெட்டுண்டு வண்டுகள் போலக் குந்தியதோ? - கருங் காம்பிரண்டு கொண்டுருண்ட கனிகுலுங்க கவர்ச்சிக்கோர் கொடுமுடியாய் நிற்கின்றாளே! சிலந்திவலை இழையெடுத்து நெய்திட்ட சேலை எழில் சிந்த அவளுடுத்தி எறிகின்றாள் விழிவேலை! வாழைத் தண்டெடுத்து வடிவமைத்த தொடையினிலே தாழை மலர் நிறமெடுத்துத் தடவியது யாரோ? சந்தன வண்ணத்து மெழுகு கொண்டு - இந்தச் சுந்தரச் சிற்பத்தைப் படைத்திட்ட இயற்கைக்கு, கோடிப்பொன் பரிசாகக் கொட்டிக் கொடுத்தாலும் அப்பரிசு; மூடித்திறக்கும் அவள் இமையிரண்டின் அழகுக்கு ஈடாமோ?”

ஆடிப் போனான் காதல் வேட்கையினால் அவ்விளைஞன் - அவளோ, ஓடிப்போனாள்; ஒளிந்தொருவன் தன்னையே பார்த்தல் கண்டு! விண்மீன் வானத்தில் வீழ்கின்ற வேகத்தைக் கண்டுள்ளான்; தண்ணிலவு, தடால் எனப் பாய்ந்து மறைகின்ற காட்சியினைக் குன்றருவிப் பக்கமுள்ள பாறையின் பின்னிருந்து இன்றவன் கண்டான் நேரில்! உயிரையும் நினைவையும் அங்கு விடுத்துத் தன் உடலை மட்டும் ஏற்றிக்கொண்டான் தேரில்!

*

மறுநாளும் அவன் வந்தான் அருவியோரம்; மறதியினால் விட்டுச் சென்ற தன்னுயிரைத் தேடி! உயிர் மட்டுமா கிடைத்ததங்கே - அந்த உயிர் போன்றாள் தரிசனமும் கிட்டியது! முதல்நாள் அனுபவத்தால் அந்த அழகு ரோஜா, தோழியெனும் முள்ஒன்றைப் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருந்தாள்! பக்கத்தில் காவலாக நிற்கின்ற தோழிதனைப் பார்த்த வீரன் முதலில் பயந்தான் எனினும் பக்குவமாய் அந்தப் பாங்கி மூலம் பாவையினைப் பெறலாமெனக் கணக்கிட்டான்.

*

தோழி வாழும் இடமறிந்து கோழி கூவுதற்குமுன் அவள் வீடு சென்றான். “எதற்காக வந்தீர்?” எனச் சற்று இடக்காகத் தோழி கேட்க, “யாரும் பறிக்காத மலராம் உன் தலைவிதனை மறுக்காமல் அவள் பெற்றோர் எனக்களிக்க உன் துணையை வேண்டி வந்தேன் ஊண் உறக்கமின்றி அலைகின்றேன்” என்றான். “தாய்தந்தை விருப்பம் பின்னர் - முதலில் தளிர்க்கொடியாம் என் தலைவி விரும்பவில்லை உம்மை! தடம்பார்த்து நீர் திரும்பிச் செல்வதுதான் நன்மை! - வேறு இடம்பார்த்துக் கொள்வீர், காதல் வலைவீச!”

என்றாள். “ஏன் என்னை வெறுக்கின்றாள் என்று கூன்பிறையை நெற்றியாகக் கொண்டவளைக் கேட்டறிய நான் சற்று அவளருகே செல்வதற்கு அனுமதிப்பாய் தோழி! மான் விழுங்கும் புலியல்ல நான்! நீ வாழியவே வாழி!” என்றான் அவன். “தனித்தொரு பெண் நீராடுமிடத்தில் குறும்பு செய்தல் தக்கதோர் பண்பாடன்று - இது தலைவியின் கருத்து!”

என்றாள். “பனித்துளியில் குளிக்கின்ற பூ ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்து விட்டேன் இனித் தவறு செய்யமாட்டேன் இரக்கம் கொள்ளச் சொல்க!” என்றான். “என்னடி பேச்சு அவரோடு?” எனச் சீறிப் பொன்னடி சிவப்பேறப் பூமேல் நடந்து சின்ன இடை மின்னல் ஒளிப்பாவை; மன்னர் மகள் போல மமதையுடன் சென்றுவிட்டாள்!

கன்னியொருத்தியின் கடுமொழியும் காதல் வயப்பட்ட காளையர்க்குக் கற்கண்டாய் இனிக்குமன்றோ? - “என் ஆவிதனைத் திருகிக்கொண்டு போகின்றாள்; பாவியெனக்காக உருகி அருள்பாலிக்கச் செய்” என்றான்! “தலைவியொரு முடிவெடுத்தால் தலைபோக நேரிடினும் மாற்றமாட்டாள் - உமது தவம் பலிக்குமா - பார்ப்போம்” என்று தாவிப் பாய்ந்தோடித் தலைவியுடன் சேர்ந்துகொண்டாள்!

*

அந்திமாலை வருமட்டும் அங்கேயே தனியாக நின்றான்; அதன்பின்னர் தோழி இல்லம் நாடிச் சென்றான். “கொய்யாப்பழம் தின்ன வரும் அணிலே கேள்! மெய்யாகத்தான், கூறுகின்றேன், என் தலைவி மெய்தீண்டல் முயற்கொம்பே!” என முடிவுரைத்தாள். கயல்நிகர்த்த விழியாளின் காலைத்தான் பிடிக்கவில்லை அவன்; “தோழிப்பெண்ணே! தொல்புவியின் இன்பமெலாம் தொகுத்தளித்தாலும் தொடமாட்டேன்! ஆழிசூழ் உலகனைத்தும் ஆள்க என அனுமதித்தாலும் ஏற்கமாட்டேன்!

இனி அவளில்லா வாழ்வெனக்கு, இலுப்பைப்பூ! எட்டிக்காய்! அறிக” என்றான். “காலையென்றும் மாலையென்றும் காரிருள் என்றும் கடும்பகல் என்றும் பாராமல் எனை வருத்திப் ‘பாங்கி விடுதூது’ நடத்தப் பார்க்கின்றீர்! வேறுமக்கு வேலையேதும் கிடையாதோ? இறுதியாகக் கூறுகின்றேன், போய்விடுக!”

என்றாள்.