சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 34 · 34 / 104
அதுவும்; அறம் பொருள் இரண்டும் கடந்த இன்பத்துப்பால் என்னும் போது; அவனைப் புறம் தள்ளி பிரிந்து வரல் எனக்கு ஆகின்ற காரியமா? காலம் இன்னும் இருக்குதடி கண்மணியே, கதிர்மலர; எனக் கூறிக் கோலம் வரைந்தான் விரல் நுனியால் என் உச்சி முதல் உள்ளங்கால் வரையில்!
விரல்பட்டால் யாழின் நரம்பு இசையோடுதானே துடிக்கும் - அவன் கரம் பட்டுச் சுகஉலகச் சுற்றுலாவில் பறந்தேன்! - இதுவரையில்; காணாத இன்பத்தில் எனைநானே மறந்தேன்! காலைக்கதிர் உதித்தபிறகுதானடி - அந்தக் கள்வனின் செயலுக்கெல்லாம் காரணத்தை அறிந்தேன்!
இமை நான்கை இதழ்போலக் கவ்விக் கொண்டு - அவனளித்த சுவை முத்தம் அத்தனையும் தேனூறிய கற்கண்டு!
இடை வளைத்துக் கொடிபோல அவன் தோள்மீது சுற்றிக் கொண்டான். “இனி அணுப்பொழுதும் எனைப்பிரியாதே” என அவனை நான் பற்றிக் கொண்டேன்!
**தோழி :** போதுமடி; பொற்கொடியே! எனக்கும் நீ போதை ஏற்றிவிடாதே! பிரிந்தென்னைப் பொருள் தேடப் போயுள்ள காதலன் வரும்வரையில் பொறுத்திருக்கும் என் மனத்தை வறுத்தெடுத்துத் தொலைக்காதே; எனை வாடவிட்டு வேடிக்கை பார்க்காதே!
**தலைவி :** களிப்பிலாடும் கானமயிலாகி - எதையும் ஒளிப்பின்றி உன்பால் உரைத்து விட்டேனடி கண்ணயர்ந்து நீ இரவெல்லாம் தூங்காததை - அவனோடு விண்ணுயர்ந்து பறந்ததாலே நான் உணர முடியவில்லை! தலைவியென்றும் தோழியென்றும் தகுதி பிரித்து நாம் பழகவில்லை! அலைகடல் போல் பரந்ததன்றோ நமது நட்பு; அதனாலே மன்னித்திடுக! விடியும்வரை நேற்றிரவு மட்டும் இன்ப விளையாட்டு ஏனென்று வினவினாயே; அதற்கு நானுந்தான் விடை கிடைக்காமல் வியப்புற்றேன் எனினும் விருந்து வலிய வலிய வரும்போது வீணில் அருந்தாமல் தட்டிக்கழிக்க மனமின்றி இடைவிடா இரவுக்கு வாழ்த்துச் சொல்லி - உறவுக்கு எனையளித்துச் சுகம் கண்டேன்.
கிழக்கினில் சூரியன் எழுந்தபின் தானே; வழக்குக்கு மாறாக இரவு நடந்த கதைக்கு; விளக்கத்தைப் புரிந்து கொண்டேன் — மனக் கலக்கத்தால் தவித்து நின்றேன்!
**தோழி :** புதிர் போட்டுக்கொண்டே இருக்கின்றாய் தலைவி; கதிர் வந்தபின்னர் கவலை ஏன் உனக்கு? எதிர் நின்று இரவெல்லாம் ஈடுகொடுத்த நீ; இப்போது அதிர்கின்ற அளவுக்குக் கண்ட காரணம்தான் என்ன?
**தலைவி :** அதோ பாரடி; அவனை! வேல் முனையைத் துடைத்துக் கூரேற்றியவாறு
வீரர்களை அழைத்து விரைவுபடுத்துகின்றான்! மயிற்பீலி சூட்டி மணியும் அணிவித்து மலையொத்த தோளிரண்டைக் குலுக்கிக்கொண்டே ஆடவர்க்கிடையே ஓர் அடலேறு போல கேடயத்தைத் தாங்கி எனை நோக்கி வருகின்றான்! இச்சையில்லை உயிர்மீது என்ற துணிவுடனே கச்சை கட்டிக் கவசம் பூண்ட அந்தக் காளையினைக் காண்க! இரவெல்லாம் துயில் கொள்ளாத உன் கண்ணால் பாரடி! இனி எந்தன் கண்களுக்குத் தூக்கமுண்டோ கூறடி! பரந்து பட்ட தீயினால் காடழியப் பாலையாய் மாறிவிட்ட நிலங்கடந்து இறந்துபடினும் இந்நாடு காப்போம் எனும் உறுதியுடன் துறந்து செல்லும் படை வீரர் பல்லாயிரத்தோர் நடந்து செல்கின்றார்; போர்க்களம் நாடி!
அவனும் விரைந்து வருகின்றான் விடைகேட்க எனைத் தேடி! புரிந்ததா உனக்கு இப்போது - இரவு அவன்; புரிந்திட்ட செயலுக்கெல்லாம் பொருள் விளக்கம்? இன்பவெள்ளத்தில் மிதந்ததாக எனைக்கடிந்து எரிந்து விழுந்தாயே; எனைப் பார் தோழி!
இமையிரண்டில் வெள்ளம் கரைபுரண்டு - என் இருவிழியின் பாவைகளும் மறைந்துருண்டு இரவு கண்ட இன்பமெலாம் செலவுக்கணக்காகி; வரவுக்கணக்கில் துன்பம்; தொகை தொகையாய் இப்போதே வரப்போகும் காட்சியினைப்பார்! தப்பாது நடந்ததடி நான் கணித்த குறிப்பு!
உற்றாரைத் நாடகத்தை நன்றாக நடத்தியுள்ளான் விடியுமட்டும்; என் ஆடகப் பொன்மேனியினை ஆரத்தழுவி அமுதமூட்டியபின் இடர்விளைத்துப் பிரிந்து சென்று என் நெஞ்சத்தைப் பிழிந்தெடுக்க சுடர் முகம் தூக்கியவன்; சூழ்ந்து வரும் பகை எதிர்க்கக் படை நடத்தப்போகின்றேன் கண்ணே பகைவர்களின் சூழ்ச்சியினைச் சுக்குநூறாய் உடைத்தெறிந்து வாகைசூடி உனைவந்து காணுகின்றேன் பெண்ணே; விடைகொடுப்பாய் மானே என்பான்! கிளம்பிவிட்டான்!
அவன் பேச்சென்னவோ தேனாகத்தான் சொட்டும்; ஆனால் என் இதயத்தில் அது தேளாகவன்றோ கொட்டும்!
*
\* “பரந்துபடு கூர்எரி கானம் நைப்ப மரந்தீயுற்ற மகிழ்தலை அம் காட்டு ஒதுக்கு அரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர் குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட வேலும் இலங்குஇலை துடைப்பப் பலகையும் பீலி சூட்டி மணி அணி பவ்வே பண்டினும் நனிபல அளிப்ப இனியே வந்தன்று போலும் தோழி நொந்து நொந்து எழுது எழில் உன் கண்பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே”
*
(நற்றிணை : பாடல் 177 பாடியவர் : (பெயர் தெரியவில்லை))
பொருள் விளக்கம் :
கூர்எரி = மிகுந்த தீ. கானம் = காடு. நைப்ப = அழிந்துபட. ஒதுக்கு அரும் வெஞ்சுரம் = ஒதுங்குதற்கு நிழலுமில்லாத வெம்மையான நிலப்பகுதி. இறந்தனர் = சென்றனர். பலகை = கேடகம் அல்லது கேடயம். பண்டினும் நனிபல அளிப்ப = முன் போலன்றி என்னிடம் அளவிலா அன்புகாட்டி.
*
இளையோன் எதற்கும் இளையான்!
கலகலவெனக் காலில் ஒலித்த சதங்கையைக் கழற்றி; வீரக் கழலினை அணிந்த இளங்கன்று அவன்! பின்னிச் சடையிட்ட நீள்குடுமி களைந்து மின்னிடும் வாளேந்தி நிற்கின்ற சிறுவன் அவன்! மெல்லிய கரங்களில் எழில் வளையல் நீக்கி வில்லினைத் தோளில் தாங்கிய இளைஞன் அவன்! ஐம்படைத் தாலியினை இன்னும் மார்பில் பூண்ட அறியாப் பருவத்தினன் அவன்!
பாண்டிய மரபில் வந்த அந்தப் பாலகனோ பலமுண்டு பகையழிக்கத் தன் தோளுக்கென்று படை நடத்தத் தலைமை ஏற்றான்; பார் அதிர முரசொலித்தான்! கடும் எதிர்ப்பின் தலை மிதிக்கப் புறப்பட்டுக் களம் சென்று வெல்வேன் என்று சூளுரைத்தான்! நெடுஞ்செழியன் என்கின்ற பெயருடையான்; நிமிர்ந்த தலை வளையாத புகழுடையான்! உடைவாள் ஓங்கி உறுமுகின்ற அச்சிங்கக் குட்டிதனை இடைக்குன்றூர் கிழார் எனும் புலவர், இவ்வாறு பலபடப் பாராட்டி வாழ்த்துப் பாடி பால்மணமும் மாறாத பச்சிளம்பசலை என்றார்.
அந்தப் பாண்டிய இளவலைப் பாடி மகிழ்ந்த செந்தமிழ்ப் பாவலர் பல்லோர் ஆவர்!
குன்றூர் கிழார் மற்றும் குறுங்கோழியூர்க் கிழார், குடபுலவியனார், கல்லாடனார் - மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் - அவன் கொலுமண்டபத்துப் புலவர் ஏறு மதுரைக் காஞ்சி பாடிய மருதனார் என்னும் மாங்குடிக் கிழார்; இத்தனைச் சான்றோர் தமிழ்க்கவி கேட்டு
Illustration
Full-page colour illustration. No source-visible literary text is present on this scan, so there is no body transcription.
பத்தரை மாற்றுப் பசும்பொன் பாண்டியன் சித்திரத் தமிழால் கவிதை யாத்திடும் சிறப்பினைப் பெற்று செருக்களம் புகுந்தவன்!
வயதில் இளையோன் பாண்டியன் என்று, வலியோர் ஐந்து வேளிர் துணையுடன்; சேர சோழ முடிமன்னர் இருவர், போரில் குதித்து ஓலை அனுப்பினர்! வேளிர் வேந்தர் ஐவர் படையும் வில், புலி பொறித்த கொடியுடை மன்னர் இருவர் படையும் இணைந்து மோதிட; எழுவரை எதிர்க்க இயலுமோ என்று இளைஞன் பாண்டியன் கலங்கவே இல்லை!
“ஒடுங்கி அடங்கிடுக! அல்லால்; உயிர் ஒழிந்து போக நேரிடும்!” என்ற ஓலை கண்டு உரக்கச் சிரித்தான்! ஒளிந்திடும் மரபல்ல போருக்கென்றான்!
“இளவயது எனக்கென்று ஏளனம் புரிகின்றார் எதிர்ப்போர் வயதும் படையும் என் முன்னே எப்பாடு படப் போகின்றதென்று இக்கணமே தெரிவிக்கின்றேன்! ஓலை கொண்டு வந்தவனே! உடன் ஓடு நீ; உன் ஏழு மன்னரிடம்! வீர வேலை கரம் ஏந்திவிட்டான்; இந்த விடலையாம் செழியன் என்று நான் விடை தந்ததாக அறிவித்திடுக!”
என்றான்! “தலையாலங்கானத்துப் போர்க்களம் புகத் தயாராகட்டும் தென்பாண்டிப் படை”, என்றான்!
