உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 33
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 33 · 33 / 104

வாய்ப்பினை எய்திடும் வகை கிடைத்தோர்க்கு; வாழ்வின் உயர்வு - அந்த வானின் உயர்வாம்!

Full-page illustration. No visible printed page number and no literary text on this scan.

வைரமென ஒளிபொழியும் இப்புறப்பாட்டில்; “வலவன் ஏவா வான ஊர்தி” என வருதலாலே

வலவன் ஏவுகின்ற வான ஊர்தியும் அக்காலம் வழக்கத்தில் இருந்ததெனக் கொள்ளலாம் அன்றோ?

ஆதியிலே அறிவியலில் அக்கறை காட்டியதால்; வான வீதியிலே வலவரென்போர் ஊர்தியினைச் செலுத்தியிருக்கவும் கூடும்!

பாதியிலே படையெடுத்த பத்தாம்பசலி எண்ணத்தினால் பகுத்தறிவுக்கு வேலையின்றிப் பாழ்பட்டுப் போனதம்மா இந்த நாடு!

பாவாணர் முதுகண்ணன் சாத்தனார்; சோழனைப் பாராட்டி எடுத்து வைத்த அறிவுரையில் - என்

பார்வையினை இந்தச் செய்தி ஈர்த்ததினால் - நீவிரும் படித்தாய்ந்து உரைத்திடுக எனப் படைத்திட்டேன்; பிழையெனில் திருத்திடுவீர்! ஏற்றுக்கொள்வேன்!

*

\* “சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற்றிதழ் அலரின் நிறைகண் டன்ன, வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந் தோரை எண்ணுங் காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே; மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே; புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து” எனக் கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியா தோரையும், அறியக் காட்டித், திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி; அருளிலர் கொடா அமை வல்லர் ஆகுக; கெடா அத் துப்பின்நின் பகை எதிர்ந் தோரே.”

பொருள் விளக்கம் :

(புறநானூறு : பாடல் : 27 பாடியவர் : உறையூர் முதுக்கண்ணன் சாத்தனார்)

பயந்த = பூத்த. ஒண்கேழ் = ஒளிபொருந்திய நிறம். விழுத்திணை = உயர்குடி. மரையிலை = தாமரையிலை. விசும்பு = ஆகாயம். வலவன் = செலுத்துபவன், ஓட்டுபவன், பாகன். திங்கள் புத்தேள் திரிதரும் உலகம் = திங்களெனும் புதுமை இயங்குகின்ற உலகம்.

*

தேனாகச் சொட்டும் : தேளாகக் கொட்டும்!

தோழி :

என்னடி நேற்று விடியுமட்டும் வளையல் சத்தம்? எத்தனை கொடுத்தான்? நூறா, ஆயிரமா; நீ பெற்ற முத்தம்? இமை மூட முடியாமல் நான் பட்டபாடு கொஞ்சமா? இடி முழக்கம் எழுப்பியதே; அதுவும் ஒரு மஞ்சமா? சத்தம் போடாதவொரு கட்டில் வாங்க உன் வீட்டில் என்ன பஞ்சமா?

சத்தியமாய்ச் சொல்லடி தலைவி; என்மீது உனக்கேதும் வஞ்சமா?

திண்ணையில் ஒருத்தி படுத்திருக்கிறாள் என்பதும் தெரியாதா? திருமணமாகாத பருவமங்கை அவள் என்பதும் புரியாதா? ஒரு நாள் மட்டுமே இந்த உலகம் இருக்குமெனக் கணக்கிட்டு இன்பத் திருநாள் முழுவதையும் நடத்தி முடித்துவிட்டீர்; வாழ்க! வாழ்க!

இருந்தாலும் என்னுயிர்ப்பாவாய் ஒன்று கேட்பாயா? - இரவு, விருந்துண்ட மகிழ்ச்சியிலே எனக்கும் சிறிது செவி கொடுப்பாயா?

மாம்பழம் இனிக்குதென்று மரத்தோடு பிடுங்கலாமா? மலர் மணம் இனிமையென்று கொடியோடு பெயர்க்கலாமா? அள்ளிப் பருகி நீரைத் தாகம் தணித்தலன்றி - ஆற்றின் வெள்ளத்தோடு வீழ்ந்தழுந்தி அறிவுடையோர் மிதப்பதுண்டோ?

“இன்பத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” - என்று என்னை எடுத்தெறிந்து பேசாமல் எதுவும் அளவு மீறினால் எழுகின்ற துன்பத்தைப் பற்றித் தொலைநோக்கில் சிந்தித்திடுக! தோழியுங்கள் இருவர் நன்மைக்கே சொல்லுகின்றாள்; எனக் கொண்டிடுக!

Full-page illustration. No visible printed page number and no literary text on this scan.

இரும்பினால் வார்த்ததல்ல மாந்தர் மேனி; எனவே கரும்புதான் காம இன்பம் எனினும் அதனை; விரும்பும்போதெல்லாம் கண்டபடி சுவைத்துத் திளைத்தால் துரும்பு போல் இளைத்துப் போகும் ஆண் பெண் வடிவிரண்டும் வளைந்து கூனி!

உடற்கூறு வல்லுநர் என் பாட்டியம்மை; அவள் பிறர்க்கு உரைக்கின்ற வாழ்க்கை முறையை ஒளிந்திருந்து தினமும் கேட்டு

உணர்ந்துகொண்ட உண்மையைத்தான் - என் உற்ற தோழியாம் தலைவி உனக்குச் சொன்னேன்!

ஆறு திங்களுக்கு மேலாக உனை விடுத்து அகலாமல் - உன் ஆளன் அருகில்தானே இருக்கின்றான்; அப்படியென்னடி வந்தது நேற்று மட்டும் தோழி? உங்களிருவரையும் அணைபோட்டுத் தடுக்கத்தான் அவசரமாய்க் கூவியதோ கோழி?

தலைவி :

கூவியது நிச்சயமாய்க் கோழியல்ல என்பதை - ஆவிநிகர்க் கண்ணாளன் நன்றாகப் புரிந்துகொண்டு “குரல் மாற்றி உன் தோழிதான் இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றாள்” எனக் கூறிவிட்டான்! அந்தத் திறல் மறவன் பிடிக்குள்ளே சிக்கிவிட்டால் குறள் பாட்டின் ஈரடிபோல் இணைந்துதான் கிடக்கத் தோன்றும்!