உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 32
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 32 · 32 / 104

காம்புதலை மணந்த = மூங்கில்கள் நெருங்கிய. கல்அதர்ச் சிறுநெறி = கற்பாறை மிகுந்த சிறியவழி. உறுபகை = (இந்த இடத்தில் வேங்கையின் பகையெனப் பொருள்படும்). பொறி = அழகிய தேமல். ஆகம் = மார்பு. அறுகாற்பறவை = வண்டு. கண்கோளாக நோக்கி = கொல்வது போலப் பார்த்து. இனையையோ = இன்ன காரணமோ. அல்லாந்து = வருந்தி. சாந்தம் = சந்தனம். ஞெகிழி = எரியும் விறகு.

*

வலவன் ஏவா வான ஊர்தி!

விஞ்ஞானம் வளர்ந்ததாலே விண்ணூர்ந்து; இற்றைநாளில் வியத்தகு புதுமைகளை விளைக்கின்றார் அறிவுடையார்! - முற்றிலும்

அஞ்ஞானம் நிறைந்த காலமல்ல பழங்காலம்; அன்றைக்கும் வானத்துக் கோள்களை ஆராய்ந்து

காலமாறுதலைக் கணக்கிட்டு, கோள்களின் சுழற்சிக் கோலமதைத் தீட்டிக்காட்டி; குமிழ் மின்னல் சிரிப்புக்

கொட்டுகின்ற விண்மீன்கள்; தாங்களிருக்குமிடம் விட்டுப் பெயர்கின்ற நிலையறிந்து நாழிபார்த்துக் கூறி;

கதிரவனைச் சந்திரனைப் பூமியின் நிழல் சூழ்ந்து - நம் கண்ணுக்கு ஒருநாள் மறைக்கின்ற “கிரகணம்” வருகின்ற

நாளைக்கூட நமது முன்னோர் வானநூல் இயற்றித்தந்து வேளைதவறாமல் விரித்துரைத்தார் எனல் வேடிக்கையல்ல!

ஒளிபெற்று வாழ்ந்த நாமோ; திடுமென இருட்டில் வீழ்ந்தோம்! வெளிநாட்டு விஞ்ஞான வளமோ; விரிந்தது வான் முகட்டில்!

தேய்ந்து வளரும் திங்களை நாம் தெய்வமென்றோம் தினம் வந்து கடமையாற்றும் சூரியனை தேவனென்றோம்

ஓய்ந்திருக்கும் வேளையிலே உப்பில்லாக் கற்பனையில் சாய்ந்து சயனித்துக் கிடந்தோமன்றி - முன்னோர்

ஆய்ந்தறிந்து வகுத்திட்ட வான நூற்புதுமைகளை; வறட்சியினால் காய்ந்த பயிர் ஆக்கிவிட்டும் மடமைக் கதைகளிலே மாய்ந்துபோனோம்!

இலக்கியத் தமிழ் இன்பம் பருகுதற்கு முற்பட்டு இனிய சங்கப் பாடல் ஒன்றில் கண்புதைத்தபோது;

இதயத்தைப் பூரிப்பால் நனைக்கின்ற ஒரு செய்தி! அதனை எடுத்தெழுதி உம்மையெலாம், “நான் பெற்ற இன்பம்; பெருக நீவிர்!” என உவகையுடன் அழைக்கின்றேன். பெருமை மிகு தமிழகத்தின் பழஞ்சிறப்பு காண வாரீர்!

முடியுடைச் சோழன் நலங்கிள்ளியின் கீர்த்திபாடும் முதுகண்ணன் சாத்தனார் எனும் உறையூர்ப்புலவர்;

வளர்தலும், தேய்தலும், பிறத்தலும், இறத்தலும் வாடிக்கையாய்க் கொண்டதிவ் வுலகமென்றும்,

வருந்தி வந்தோர்க்கு வழங்கிடும் வள்ளலாய் வாழ்வதே மண்ணாளும் அரசுக்கு மாண்பென்றும்

போற்றுதற்கிடையே பொன்மொழி புகன்று ஊற்றுப் பெருக்காய் உதவிடுக வறியோர்க்கென்றார்!

மற்றும்

வழிவழியாக இவ்வையகம் தனிலே வாழ்ந்து மறைந்தோர்; எண்ணிலடங்கார்!

சேற்றில் முளைத்திடும் செந்தாமரையின் செழிப்புறு இதழ்கள் பலவே ஆயினும்

வேற்றுமை காண இயலா அளவில் விளங்கும் எழிலைக் காணுதல் எளிது!

சாற்றுவேன் ஒன்று, சரியெனத் தோன்றியதை; இந்த செகத்தினில் உதித்தோர் பலரில் சிலரே - உண்மைப்

புலவர் பாடிடும் புகழுக்குரியோர் - மற்றும் பலரோ தாமரையிலை எனப் பொலிவிழந்து போயினர்!

இதழின் அழகுக்கும் இலையின் பயனிலாத் தன்மைக்கும் இப்படியோர் உவமையைப் பொருத்திய புலவர்;

பாவலர் ஏத்திடும் பாராட்டுக்குரிய மன்னர் - இந்தப் பாரில் எய்திடும் புகழின் உயர்வைக் காட்டுவார்; கவிதையில்!

அதாவது,

வலவன் எனும் ஓட்டுபவன் இல்லாமலே வானில் பறந்திடும் ஊர்தியில் செல்லும்