சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 22 · 22 / 104
தையலோ தாவிப்பாய்ந்து கணவன் தலையிலே ஒரு தட்டுத்தட்டிக்
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.
கையினால் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபோது தழுவினார்; நழுவி விட்டாள்!
கலகலவென ஒலிக்கின்ற சதங்கைபோலக் காதல் முதியோர் களிப்பு மிகக் கொண்டவாறு சிரித்துவிட்டார்!
கரும்பின் அடிப்பாக இனிப்பைப்போல் மழலை கொட்டி - பிஞ்சுக் கைகளையே தட்டிக்கொண்டு பேரன் பேர்த்தி சிரிக்கலுற்றார்!
மடையுடைத்தாற்போல் பொழிந்த மகிழ்ச்சிக்குத் திடுமென தடைவிதித்தாற் போல் செவியில் விழுந்தது ஒரு செந்தழல் செய்தி!
உறையூர் வேந்தன் கோப்பெருஞ்சோழனை எதிர்த்து - அவன் உயிராய்ப் போற்றிய மைந்தர்கள் படை எடுத்தனர் என்றும்,
கிள்ளைமொழித் தமிழால் கவிபுனையும் சோழ மன்னவனோ பிள்ளைகளின் செயலால் பெருந்துயரில் ஆழ்ந்திட்டான் என்றும்
வெள்ளை மலர் உள்ளத்தான் வேறு வழியே இன்றி வீரவாளைக் கரமேந்திக் களம் காண எழுந்திட்டான் என்றும்
தந்தைக்கும் மைந்தர்க்கும் மூண்டுவிட்ட போராட்டம் குறித்த விந்தைச் செய்தியினைக் கேட்டுப் பிசிராந்தைப் புலவர்
சந்தையில் தொலைத்துவிட்ட பொருளாயிற்றே தமது மகிழ்ச்சி சிந்தை மிக நொந்து புறப்பட்டார் சோழநாடு!
எனக் கூறி
“தமிழினத்தார் தன்மானம் மிக்குடையார் - பகைவர்க்குத் தலைதாழ்த்தும் நிலை வந்தால் தயங்காமல் உயிர் துறப்பார்!
இமிழ் கடல் தாண்டியும் புகழ் மணம் பரப்பி - நல்ல அகில், மிளகு, முத்து வாணிபம் புரிவார்!
இலக்கிய மேதைகள், இனிய நற்கவிஞர்கள் இயற்கையைப் போற்றுவர், எழில் மாடம் அமைப்பர்!
இனத்தின் மேன்மை ஏட்டில் நாட்டுவர் இறைமாட்சி தவறாது இந்நிலமிசை ஆள்வர்!
கல்தோன்றி மண்தோன்றாப் பழங்காலத்தின் முன்தோன்றி மூத்த குடிமக்களும் தமிழரே ஆவர்!
எல்லாம் சரிதான்; ஆனால் ஒன்று - பொல்லா உட்பகைப் புயலில் சிக்கி
கொல்லாமற் கொல்லும் வேற்றுமையென்னும் குழியினில் வீழ்ந்திடும் குணங்கொண்ட இனமும் தமிழினமே!”
இவ்வாறு எண்ணமிட்டு நடந்திட்ட பிசிராந்தை - சோணாட்டுத் தகராறு குறித்துத் தகவலறிய நடுவழியில் முற்பட்டார்!
கோப்பெருஞ்சோழன் அமைத்திட்ட ஊர்ப் பொது மன்றமொன்றில் கூடியுள்ளனர் அவ்வூர்ச் சான்றோர் எனக் கேள்வியுற்று
வார்த்தையில் அடங்காப் பரபரப்புடனே இதயம் துடிக்கப் போர்ப்புகை, அணைந்ததா என்றறிய அங்கு சென்றார்.
பொத்தியார், பூதநாகனார், நத்தத்தனார் மற்றும் புல்லாற்றூர் எயிற்றியனார் எனும் புலவர் பெருமக்கள்
மன்றத்திலிருந்து குதித்தோடி வந்து, பிசிராந்தையாரை மார்புறத் தழுவி வருவீர் வருவீர் என வாழ்த்திக் களித்தனர்!
“அங்கம் பதறி அகம் பதறி வந்துள்ளேன் அய்யா சிங்கத்துக்கும் அதன் குட்டிகட்கும் மூண்ட போர்
என்ன ஆயிற்று?” என வினாக்குறியாய் நின்றார் புலவர்! “ஏதொன்றும் தீங்காய் முடிந்திடவில்லை கேளீர்!”
இன்னலொன்று தோன்றிற்று அதனை இந்தப் பெருமகன் மின்னலெனப் பாய்ந்து சென்று தடுத்துவிட்டார்.
