உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 23
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 23 · 23 / 104

குஞ்சுகள் மிதிப்பதாலே கோழியும் பதைக்கலாமோ எனக்கேட்டு கொஞ்சுதமிழ்க் கவிதையாலே கோப்பெருஞ்சோழனையே குளிர்வித்துப்

போர் நிறுத்தம் செய்வதற்குக் காரணமான புல்லாற்றூர் எயிற்றியனார் இவர்தான்” என்று

பொத்தியார் அறிமுகம் செய்துவைத்தார்! பூரிப்பால் பிசிராந்தை துள்ளலானார் - பின்னர்;

நாத் திறம் கொண்ட நற்புலவர் கூட்டமதில் பாத் திறம் காட்டிப் பலரும் கருத்துக்கனி உதிர்த்திட்டார்.

ஒரு கவிஞர் பிசிராந்தையாரை நோக்கி “புலவீர்! கருமை நிறம் மாறாத தலைமுடியும் தாடியும்; உமக்கு

அகவை அறுபதுக்கு மேலாகியும் கூட அப்படியே அணுக்கூட நரைக்காமல் இருப்பது எப்படியோ?” எனக்கேட்டார்!

\* “விளக்குகிறேன் காரணத்தைக் கேட்பீர் அய்யா! - குடும்ப விளக்காக வாய்த்துள்ளார் மனைவி எனக்கு!

விளைவுதனைக் கழனியிலே பெருக்குகின்ற மகனோ ஒருசிறிதும் வளைவுதனைக் கொள்கையாகக் கொள்ளாத காளை!

அளவறிந்து அவன் பெற்றான் இருபிள்ளை; இரண்டுமே அறிவார்ந்த அழகு தமிழ் மழலைக்கிள்ளை!

வளமான நெஞ்சுக்குள் வாஞ்சை நிறைத்து - எனது உளமறிந்து செயல்புரியும் ஊழியரும் உண்டெனக்கு!

சிலந்தி வலை நூலினும் மெல்லிய சிறு தவறுகூட செங்கோலின் மீது படரக்கூடாதெனச் சூளுரைத்துச்

சீலமுடன் நடக்கின்ற ஆட்சியினைப் பெற்றுள்ள சிறப்பும் உண்டு எந்நாட்டு மக்களுக்கு!

அடியேன் பிறந்த அழகுமிகு சிற்றூர் பிசிர் எனும்

பதியில்

ஆன்றோரும் சான்றோரும் பெரும்பாலும்

நிறைந்துள்ளார்!

இத்தனை பெருமையும் ஒருசேரப் பெற்ற மகிழ்வால் முத்தனைய நிறங்காட்டி என் முடியினிலே நரைதிரை எதுவும்

முற்றுகையிடுவதற்கு முனையவில்லை - முடியவில்லை! கற்றறிவாளரே! கவலையில்லா வாழ்க்கையினால்

கிடைத்திட்ட பலன் இது” வென்று பகன்றிட்ட பாவலரின் இதயம் உடைத்திட்ட செய்தியொன்று அப்போது வந்ததங்கே!

கிழக்குதித்த சூரியன்போல் நாடாண்ட சோழ மன்னன்; தனக்குதித்த பிள்ளைகளின் எதிர்ப்பாலே மனமுடைந்து

வடக்கிருந்து உயிர் விடுவதற்குச் சென்றான் என்று மடல்கத்தி போல ஓலையொன்றைக் கண்டார் கவிஞர்!

“இக்கணமே புறப்பட்டு இல்லம் சென்று விடைபெற்றுத் திரும்புகின்றேன். இலக்கணமாய் நட்புக்கு வாழ்ந்த நாங்கள் இறப்புலகில் பிரிவதில்லை!

வடக்கிருக்கச் சென்றுள்ள சோழனிடம் கூறிடுவீர்! - அவன் அருகிருக்கப் பிசிராந்தை விரைவில் வருவானென்று!”

இதைச் சொல்லிப் புலவர்ஏறு இலையினின்றுதிர் பனிநீர்போல இமை இரண்டில் விழிநீர் ததும்பப்

பதைப்புடனே பாண்டிநாடு பயணமானார்; பாசமிகு மனைவிமக்கள் பேரன் பேர்த்தியிடம் விடைபெறுவதற்கே!

*

\* “யாண்டு பலவாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்; யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.”

*

(புறநானூறு : பாடல் : 191 பாடியவர் : பிசிராந்தையார்)