சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 21 · 21 / 104
மன்னவன் பெருங்கோ கிள்ளியெனும் கோப்பெருஞ்சோழன் இன்னமும் காணும் வாய்ப்பினைப் பெறவில்லையே யென்ற
மனப்புயல் ஒருபுறம், அடக்கிக்கொண்டு - அவன் மாப்புகழ்பற்றி எடுத்துரைத்தார்!
கோக்காமல் முத்துக்கள் மாலையாவதில்லை - ஆனால் பார்க்காமலே சோழனும் புலவரும் நட்பின் ஆரமாய்த் திகழ
தமிழே மணியாய் - தமிழ் உணர்வே இழையாய் ஆனதுவாம்! தடந்தோள் சோழனின் கொடையும் அன்பும் பாட்டின் கருவாய் அமைந்ததுவாம்!
“அன்னச்சேவலே! அன்னச்சேவலே! நீயோ கன்னிக் குமரியின் முனையிலேயிருந்து அயிரைமீனைக் கொத்திய அலகுடன் - வெகு உயரம் விண்ணில் பறந்தவாறு, பனிமலை நிறைந்த வடக்கு திசைக்குப் பயணம் செய்கிறாய்; நின் பயணம் வெல்க! கடக்கும் வழியில் என் கண்மணிச்சேவலே! - பகை அடக்கும் சோழன் தலைநகர் உளது! கோழியூர் எனப்படும் உறையூர் நகரே - எனது கோப்பெருஞ்சோழனுக்குரிய தலைநகர்! மேழிச்செல்வம் கோழைபடாது எனும் கொள்கையுடனே மேன்மையாய் நாட்டைக் காக்கும் மன்னவன்!
வலக்கரம் வழங்குவது இடக்கரம் அறியாமல் வழங்கிடும் தென்னவன்! வழியில் நீயும் நின் பெடையுடன் சென்றால் - சோழன் விழியில் அன்பின் ஒளியினைக் காண்பாய்! இடையில் எவரும் தடுத்து நிறுத்தினால் பெடையுடன் நீயும் திரும்பிடல் வேண்டாம்! இறைவனாம் சோழன் செவியில் விழுமாறு உறையூர்க் காவலர்பால் உரக்கக் கூறிடு!
ஆந்தையார் எனும் புலவர் வாழ் பிசிர் எனும் ஊரைச் சார்ந்தோர் நாங்கள் எனச் சாற்றுவாயாகில்;
அரசனே ஓடிவந்துமை வரவேற்று வாழ்த்தி அணிமணி பலவும் நின் பேடைக் களிப்பான்!
ஏனெனில் அத்துணை நட்பு அவனுக்கென்னிடம் உண்டு தேன் எனில் தெவிட்டிவிடும்; இதுவோ எம் இருவரிடை என்றுமே தெவிட்டாத நட்பு.”
*
\* “அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக், குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழநன் னாட்டுப் படினே, கோழி உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கு, எம் பெருங்கோக்கிள்ளி கேட்க, ‘இரும்பிசிர் ஆந்தை அடியுறை’ எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத், தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே -”
*
(புறநானூறு : பாடல் : 67 பாடியவர் : பிசிராந்தையார்)
பொருள் விளக்கம் :
ஆடுகொள் வென்றி அடுபோர் = கொன்று குவிக்கும் போர்க் களத்தில் வெற்றிவாகை சூடுகிற. கையறுபு இனைய = செயலற்று வருந்திட. அயிரை = ஒருவகை மீன். குறும்பறை = பேடையெனப்படும் பெண்பறவை. மாண்ட = மாட்சிமையுடைய. நன்கலம் = அணிகலன்.
*
பிசிராந்தையார் 3
ஆந்தையார் சொற்கேட்டு அன்னச் சேவலார் - சோழ வேந்தனிருக்குமிடம் சென்றாரோ இல்லையோ;
ஆருயிர் நண்பன் சிறப்பைச் செதுக்கிய மனநிறைவுடன் அன்பு மனைவியிடம் புலவர் அதனைப் பாடிக்காட்டி மகிழ்ந்தார்!
“அன்னச் சேவல் கற்பனை மிக அருமை” என்றுரைத்தவாறு அன்னம் படைத்திட்டாள் துணைவி; அவருக்கும் பேரக்குழந்தைகட்கும்!
“முல்லை வரிசை இரண்டிங்கே சிரிக்கின்ற காட்சி பாராய்” என்றார்!
வில்லையொத்த புருவம் விரித்து “எங்கே?” எனக் கேட்டாள் துணைவி!
“பாவையுந்தன் பாளைச் சிரிப்போடு - இதோ பச்சரிசிச் சோற்றின் சிரிப்பையுந்தான் முல்லையென்றேன்” என்றார்!
“பார்த்துப் பேசுங்கள் கொஞ்சம்; பக்கத்தில் பேரக் குழந்தைகள்” என்றாள்! “நமது மகன்;
வார்த்தெடுத்த வைரச்சிலைகளுக்கு இம்மொழி புரிய வயது போதாது!
வளர்ந்த மகன், மனைவியுடன் வயலுக்குச் சென்றுளான்
- அவர்கள்
வருவதற்கு நேரமாகும்; அஞ்சாதே!” என்றார்.
“வந்துவிடுவார் இப்போது கொஞ்சாதீர்” என எச்சரித்தாள்! - உடன் வாய் மூடிக்கொண்டார் புலவர்; அவள் வடித்திட்ட சோற்றாலே! - அது
போய்த் தொண்டையிலே அடைத்ததாலே புரையேறிப் புலவர் தவித்தார்!
