சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 20 · 20 / 104
மக்களை வாட்டி வருத்தி வாங்குகின்ற வரிப்பொருள்தான் ஆட்சியின் குறியென்றால்
மதயானை புகுந்த வயல்போல யாருக்கும் நலமின்றி மண்மேடாகும் நாடு! அறிக!” என்றார்!
“விருந்தெனக் கவிபாடி எனை மேலும் கேளிக்கையில் வீழ்த்துகின்ற பரிசில் கவிஞர் சிலர் போலன்றி - நீவிர்
மருந்தெனக் கவிதந்து என் மனம் மாற்றிப் போட்டுவிட்டீர்! திருந்தினேன் இன்று முதல்; உமது திருவடிகள் அரண்மனையில் பட்டதாலே!”
என்றான் மன்னன்; வென்றார் புலவர்!
*
\* “காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே!”
*
(புறநானூறு : பாடல் : 184 பாடியவர் : பிசிராந்தையார்)
பொருள் விளக்கம் :
காய்நெல் = காய்த்த நெல். மா = நிலத்தின் அளவுகளில் ஒருவகை. செறு = கழனி. தமித்து = தனியாக. நந்தும் = தழைக்கும். மெல்லியன் கிழவனாகி = அறிவால் வேந்தன் மெலிந்து. வரிசை அறியாக் கல்லென் சுற்றம் = தரமறியாமல் (அரசன்) விரும்புவதையே தாமும் கூறுகிற ஆரவாரமிகுந்த சுற்றத்தார். பரிவுதப = அன்புகெட. பிண்டம் நச்சின் = பொருளை விரும்பினால். இறை = வரி.
*
பிசிராந்தையார் 2
பேசுமொழி தமிழ்மொழி என்றதாலும்; பேசியவர் பிசிராந்தைப் பெருமகனார் என்றதாலும்
மாசு மருவின்றி இனி ஆட்சி நடக்குமென மன்னன் உறுதிமொழி தந்ததோடு
தந்திட்ட மொழி தவறாது காத்திடவும் செய்தான் தரணியிலே தன்புகழ் பூத்திடவும் செய்தான்.
அறிவுடைநம்பிக்கோர் அறிவு விளக்காக அமைந்திட்ட தெளிவுடைச் செந்தமிழ்ப் பேரொளியாம் பிசிராந்தை;
சோழநாட்டு வேந்தன் கோப்பெருஞ்சோழன்பால் சொல்லாலே நெய்வதற்கு இயலாத அன்புதனைக் கொண்டிருந்தார்
கவிபுனையும் ஆற்றல், கற்றாரைப் போற்றுகின்ற பாங்கு, புவியெங்கும் மெச்சுகின்ற கொடைத் திறம்,
கண்ணிமை போல் நாட்டுக்குக் காவல், தண்ணிலவை மிஞ்சுகின்ற தகைசால் உள்ளம்;
கோப்பெருஞ்சோழனிடம் குடிகொண்ட இக்குணங்கள் குளிர்புனல் இதயக் கவிஞரை ஈர்த்தது மிகவே!
பிறந்த இடமாம் பிசிர் எனும் ஊரில் - நிழல் அடர்ந்த தோப்பில் நெறியுடைக் கவிஞர் ஒருநாள்;
ஆய்வுக்குரிய பல்பொருள் குறித்து - சிந்தனை அசைபோட்டவாறு, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அன்னச் சேவல் ஒன்று இறக்கைகள் விரித்து ஆகாயவெளியிற் பறந்து செல்வதைக் கண்டார் புலவர்!
ஆருயிர் நண்பன் சோழனைக்குறித்துப் பாடலொன்று; யாத்திடும் ஆசை நிறைவேற வேண்டுமென்று,
Illustration
Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.
அன்னச்சேவலை மையமாய் வைத்து - அழகுறப்பாடல் கன்னல் தமிழில் கற்பனையூற்றாய் எழுதியோர் புலவர்!
“அன்னச் சேவலே! அன்னச் சேவலே!” என அழைத்து இன்னலுற்றுள்ள தன் நெஞ்சைத் திறந்து காட்டி,
