உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 19
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 19 · 19 / 104

தன்னால் முடியுமென நம்பிக்கை தெரிவித்துத் துணிந்து மண்ணாளும் அறிவுடைநம்பியினைச் சந்திக்கப் புறப்பட்டார்!

பார்வேந்தனாம்நம்பி; பாவாணர் பிசிராந்தை வரும் செய்தி கேட்டு

பாவேந்தரை மனம் கோணச் செய்தல் பெருங்கேடாய் முடியுமென அஞ்சி,

தமிழுக்கு மரியாதை செய்கின்ற பண்பாடு குன்றாத காரணத்தால் தமிழ்க்கவியைத் தகுதியுடன் வரவேற்றுத் தலைதாழ்த்தி வணக்கம் செய்தான்!

“செந்தமிழுக்கு நீ செய்கின்ற சிறப்புக்கு மகிழ்ச்சியெனினும் செங்கோலைக் கொடுங்கோலாய் மாற்றுதல் நன்றோ மன்னா?

பந்தங்கள், சொந்தங்கள் எனச் சொல்லிக்கொண்டு - தீப் பந்தங்களாய்ச் சுடுகின்றார் உன்பக்கமிருப்போர்; நாட்டோரை! நல்லோரை!

அரசனை அன்றாடம் இன்பப்பொழுது கழிக்கச் செய்துவிட்டு அரசியலைத் தமதாக்கி விளையாடும் அரசுத்துறையோர் தம்மை;

அடையாளம் தெரிந்துகொளல் வேண்டும் வேந்தே! உன் அழிவுதனைத் தடுத்திடவும் அதனினும் மேலாக

அழியாமல் என்றும் நமதுநாட்டு நற்பெயரைக் காத்திடவும் அறிவுரை சில கூறிடவே வந்துள்ளேன்; ஏற்பாயோ?”

எனக்கேட்டு,

“காற்றடிக்கும் திசையினிலே கவிப்பாய் விரித்துப் படகோட்டி போற்றிப் புகழ்ந்துகொண்டே தீங்குகளை மறைத்துச் சிலர்

போதுமான பரிசுகளைப் புவியாள்வோர்பால் பெற்றுச்செல்வர்! - நானோ; உன்பால் வாதுசெய்து நின்னாட்சிதனை வகைப்படுத்த வந்துள்ளேன்; சீறிடாதே!” என்றுரைத்தார்.

“கல்லும் கசிந்துருகத் தமிழ்பாடும் கவியரசே! அல்லும் பகலும் எனைச் சூழ்ந்திருப்போர்;

அறிவுரை எதுவும் கூறித் திருத்துவதற்குத் தகுதியின்றி ‘ஆம்’ என்றே அனைத்துக்கும் தலையசைத்துத் தரமிழந்து போனார்!

செறிவுநிறைத் திறம் வாய்ந்த பெரியீர் நீவிர்; இந்தச் செந்தமிழ்ப் பாண்டிநாட்டின் செம்மைகாக்க வந்துள்ளீர்!

அறிவுடைநம்பியென எனக்குப் பெயர்மட்டும் இருந்தென்ன பயன்!

அரசுக்குத் தேவை; இயற்றலும் ஈட்டலும் காத்து வகுத்தலுமன்றோ?

இதனை மறந்து நடக்கின்ற ஆட்சிதனைக் கடிந்து இடிப்பாரையில்லாத ஏமரா மன்னனாக இருந்துவிட்டேன்!

எடுத்துரைப்பீர்; என்ன செய்யவேண்டும் நான்? நீவிர் தொடுத்துவைக்கும் அறிவுரையைத் தொழுதேற்றுச் சூடிக்கொள்வேன்” என்றான்.

“மன்னா கேள்! ஒரு மாவுக்குக் குறைந்த நிலமாயினும் மகசூல் கண்டு நெல்லை அறுவடை செய்து வந்து; அதனைக்

கவளம் கவளமாக யானைக்கே தருவதாயினும்; நல்ல கவனமுடன் செயல்பட்டால் அவ்வுணவு பலநாளைக்கு ஆகிவரும்!

அஃதன்றி; நிலத்துக்குள் நீயே சென்று மேய்ந்துகொள்க என நீள் துதிக்கை யானைக்கு உரிமை தந்தால் - பெருங்

கழனியின் நெல்மணிகள் யானையின் வாய்க்கு மட்டுமன்றி காலுக்கும் தலைநாணி; மிதிபட்டுக் கழனியே படுபாழாகும்!

இரை கொள்ளும் யானைக்கே இவ்விலக்கணம் பொருந்துமென்றால் இறை கொள்ளும் அரசுக்கும் இதுவே பொருத்தமன்றோ?

தரையிலும் மீன் வாழுமென்று தண்ணீரை விட்டு நீ எடுக்கச் சொன்னால்;

தடுத்துரைக்க வலுவின்றித் தலையாட்டும் பதுமைகளாய்;

அமைச்சர்களும், அரசுத்துறைப் பொறுப்பாளர்களும் அமைந்துவிட்ட காரணத்தால் - அறிவில் நீ மெலிந்துவிட்டாய்

தொடர்கதையாய் இக்கதையே நீண்டுவிட்டால் - துன்பம் படர்கதையாகித் தொன்மைமிகு சீர்வாய்ந்த சங்கத்திருநாடு மன்னா! தாழ்ந்துபோகும்!