உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 18
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 18 · 18 / 104

\* “கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித், தம்மில் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவைபோல, மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே!”

(குறுந்தொகை : பாடல் : 8; பாடியவர் : ஆலங்குடி வங்கனார்)

*

பொருள் விளக்கம் :

கழனிமா அத்து விளைந்து உகு தீம்பழம் = கழனியருகே உள்ள மாமரத்தில் பழுத்து விழுகின்ற இனிய பழம்.

பழனவாளை கதூஉம் = பக்கத்துப் பொய்கையில் உள்ள வாளைமீன் கவ்விக்கொள்ளும்.

ஆடிப்பாவை = கண்ணாடியில் தோன்றும் உருவம்.

*

பிசிராந்தையார் 1

குளத்து மீனைக் கொடிதனில் நீந்தச் செய்து களத்தினிலே வெற்றிகளைக் குவித்திட்ட பாண்டி நாட்டு மக்களுக்கு

உளத்திலொரு வருத்தமுண்டு; அஃதென்னவெனில் வளத்தைப் பெருக்காமல் வரி பெருக்கி வருமானம் பெருக்க முனையும்

வாள் மீசைக்காரன் அறிவுடை நம்பிப் பாண்டியனின் வளைந்திட்ட ஆட்சிக்கோலை நிமிர்த்திட வேண்டுமென்பதேயாகும்!

நாட்டு நிலையை எடுத்துரைத்துப் பாண்டிமன்னன் திருந்திடவே நீட்டோலை கொண்டு பலர் அவனைச் சந்திக்கச் சென்று கால் வலித்துத் திரும்பிவிட்டார்!

ஆடலரங்கம், இசையரங்கம்; அத்தாணிமண்டபத்தில்! அரசியுடன் ஊடலரங்கம், கூடலரங்கம்; அனிச்சமலர் மஞ்சத்தில்!

ஏடு கொள்ளா இன்பத்தில் திளைத்திடலே நாடு காக்கும் முறையென்று; நாலைந்து பேர்வழிகள்

அரசுத்துறையோர் அமர்ந்து கொண்டு அறிவுடைநம்பியினை அடுத்தடுத்துக் கெடுக்கலானார்!

அரசன் எதைச்சொன்னாலும் ஆமாம் என்று அவசரமாய்த் தலையாட்டி; அடடா! அருமை அருமையென

பாராட்டிப் போற்றிப்புகழ்ந்து அவனை இன்பச்சேற்றில் தேரோட்ட வைத்து ஆட்சியினை வசமாய்ச் சிக்கவைத்தார்!

அற்ற குளத்து அறுநீர்ப்பறவை போன்றார் - சில உற்றார் உறவினரும் அதுதான் சமயமென்று; தாம்

கற்ற வித்தை அனைத்தும் காட்டி நாட்டோரை வஞ்சிக்கும் குற்றங்கள் கணக்கின்றிப் பெருக்கலானார்!

சோலைவனப் பாண்டிநாடு சொந்த நலம் நாடுவோரால் பாலைவனப் பூமியாகும் எனப்பயந்த சான்றோர் பலர்;

Illustration

Full-page colour illustration. No source-visible literary text or printed page number is visible on this scan.

காலைக்கதிர் உதித்தெழுந்து காரிருளும் தொலைவதற்கே கடமையாற்ற முனைந்திடுவீர் எனக் கவிஞர் ஒருவரிடம் வேண்டி நின்றார்!

பிசிர் எனும் பாண்டிநாட்டுச் சிற்றூரில் பிறந்திட்ட ஆந்தை எனும் பெயருடையார் அக்கவிஞர்!

பிசிராந்தையார் என்று பெருமைமிகு வரலாற்றேட்டில் பீடுநடைபோட்டு நட்புக்கோர் இலக்கணமாய் வாய்த்தவராம்!

கோப்பெருஞ்சோழன் எனும் மன்னனை நேரில் பாராமலே அவன் மாப்புகழ் கேள்வியுற்றுத் தன்னையவனுக்கு நண்பராய் வரித்துக் கொண்டவராம்!

சொந்தநாடாம் பாண்டியநாட்டில் சோர்வுற்று மக்கள் எலாம் நொந்துமிக இன்னலுற்றுத் தள்ளாடும் நிலைமாற்றத்