உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 17
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 17 · 17 / 104

வந்த வாணன் எனைநோக்கி நொந்த மனத்துடன் சொன்னது என்ன?

“கட்டிலுக்குத் துணையாய் வாய்த்த மங்கை - பிள்ளைத் தொட்டிலுக்கு முழுநேரக் காவல் ஆனாள்!

தொடர்ந்து பலநாட்கள் பட்டினியால் வாடி - இன்று துணிந்து உனைத்தேடி இன்பம் பருகவந்தேன்!

கட்டியணைத்துக் காய்ச்சல் போக்கி - மார்புக் கச்சை அவிழ்த்துக் காமநோய் தீர்த்திடு” என்றான்.

ஒப்பினேன் நானும் - பொன்னால் உப்பிய பையை உதறினான் என்மேல்!

பரத்தை நான் எனினும் உன்பால் பற்றுவைத்த பின்னர் - என் தரத்தை உணர்வாய்; தாகம் தணிக முதலில் - என்றேன்!

தட்டிலே உள்ள சோற்றைப் பசியால் உண்ணப் பறந்து கொட்டிக் கவிழ்த்த ஒரு குழந்தையைப் போலே

பரபரப்புணர்வுடன் பாய்ந்தான் என்மேல் - நான் பயத்தால் நடுநடுங்கிப் போனேன் எனினும் - எனக்குப்

பழகிய கலைதான் என்ற துணிவில் படுக்கைப் போட்டியில் சமமாய் நின்றேன்!

பலாச்சுளை - தேன்கதலி - தினைமா - என்று பலநாள் இன்பம் பகிர்ந்து மகிழ்ந்தோம்!

**திடீரென்று ஒருநாள்**

தெவிட்டியதாலோ அல்லது அவன் தேவியாம் திருமகள் தேடி அலைகிறாள் என்ற செய்தி தெரிந்ததனாலோ;

தேரேறிப் போன வாணன், திரும்பவே இல்லையடி!

பொருள் மட்டும் தரவில்லை; என்னைப் பொதுமகள் என்னும் இருள் விரட்டும் ஒளிப்பிழம்பாய் அருகிருந்தான்.

உருள்கின்ற காலத்தின் கோலம் பார் - சுருள்கின்ற கத்திபோல நாக்குச் சுழலும்

Illustration

Full-page colour illustration. No printed caption is visible on the source page.

The illustration is preserved as a separate physical-page record and no literary identity is inferred from the image alone.

ஆடவனின் பாராட்டெல்லாம் - பஞ்சணையில் கூடுகின்ற நேரத்தில்தான்!

அதன்பின்னர்ப் புதன் வருவேன்; வியாழன், வெள்ளி வருவேன் என்று அடுக்கடுக்காய் நாள்குறித்து ‘சனி’ காணாமற்போய் விடுவான்.

குறைசொல்லி அவனைநான் குமுறுவதால் பயனில்லை தோழி!

பறைமுழக்கி ஊர்கூட்டி என்மீது பழியுரைக்கும் கல்நெஞ்சக்காரி இருக்கின்றாளே; அவன்துணைவி கண்ணீரையே கயிறாய்த் திரித்து அவனைக் கட்டிப்போடுகின்றாளாம்!

கண்ணாடி முன்நின்று ஒருவர் கண்டபடி அங்கங்கள் அசைத்திட்டால் கண்ணாடியில் தோன்றும் உருவும் கச்சிதமாய் அவ்வாறே அசைத்திடுமே!

**அதுபோலத்தான்**

அவளோ கண்ணாடிக்குமுன் அசைகின்ற அம்மை! அவனோ அந்த அசைவுஅனைத்தையும் பிரதிபலிக்கும் பொம்மை!

காத்திருந்து இனி என்ன பயன்? பூத்திருக்கும் முல்லை நான் - இதழ் மதுவுண்டு செல்வதற்குப் புதுவண்டு வராமலா இருந்து விடும்!

கலைமகளாய் மாற்றம் பெறக் கனவுகண்டேன்; ஆனால் விலைமகளாகவே வாழ்க என்று வாணன் வாழ்த்திவிட்டான்; அந்த வீணன் வாழ்க நன்று!”

இவ்விதம் ஒரு காதல் பரத்தை இதயத்துயர் எடுத்துச் சொல்லி ஆருயிர்த் தோழியிடம் அலறிப் புலம்பியதை ஆலங்குடி வங்கனார் எனும் புலவர் தங்கத் தமிழ் உவமை கூறி சங்கக் கவியாய்த் தருகிறார் இங்கே!

*