சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 16 · 16 / 104
இல்லாள் வெகுண்டெழுந்து இதைச் சொல்லி முடித்தவுடன் பொல்லாச் செயல் புரிந்த துணைவனவன் நடுங்கிப் போய்;
“நில்லாது இனி என் உயிர் கண்ணே!” என்று நெடுமரமாய் அவள் தோளில் சாய்ந்தபடி,
அணிந்துவந்த பாணன் வேடம் அரைநொடியில் கலைத்து விட்டான்.
துணிந்து சென்று தொகை வழங்கி இன்பம் பெற்று - இன்று பணிந்து வந்து பாணன் உருவில் கெஞ்சுகின்ற
வாணன் மீது வஞ்சம் தீர்க்க வழியே இன்றி, “வாழ்க” என்று திருமகளும் தழுவிக் கொண்டாள்.
குழந்தையொன்று குறுகுறுவெனப் பார்ப்பதையும் மறந்து - உடல்கள் அழுந்த அணைத்தனர் - அதைத் தொடர்ந்து அகல் விளக்கையும் அணைத்தனர்.
*
\* “நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; வாலிழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனம் அல்லேம்; அதனால் பொன்புரை நரம்பின் இன்குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; கொண்டுசெல் பாண! - நின் தண்துறை ஊரனை பாடுமனைப் பாடல்; கூடாது நீடுநிலைப் புரவியும் பூண்நிலை முனிகுவ, விரகுஇல மொழியல், யாம் வேட்டதில் வழியே.”
(நற்றிணை : பாடல் : 380; பாடியவர் : கூடலூர்ப் பல்கண்ணனார்)
*
பொருள் விளக்கம் :
குய் = புகை. கலிங்கம் = ஆடை. திதலை = தேமல். பிலிற்ற = சுரந்து பீச்சிட. புல்லிப் புனிறுநாறும் = (மகனை) அணைத்துப் பால் கொடுத்ததால் ஏற்படும் பால்வாடை. வாலிழை = ஒளிவிடும் அணி.
ஒரு பொது மகளின் புலம்பல்!
வயலின் ஓரம் வரப்புகள் மீது வளர்ந்து நிற்கும் மாமரக் கொப்பில்
உண்ணத் தெவிட்டா ஒட்டுமாங்கனிகள் வண்ண மாதர்கள் பெருந்தனம் போல
காய்த்துக் குலுங்கி கடைசியில் அவைகள் கயல்கள் ஆடும் கழனியின் பக்கம்
வாவியின் நீரில் வளைந்து துள்ளும் வாளைமீன் வாய்வீழ் வளநாடிதுவே!
வலுவில் விழுந்த மாங்கனிதன்னை வாளைமீன் விழுங்கி மகிழ்தல் இயல்பே!
அவ்வாறே,
வாணன் என்னும் இவ்வூர்த்தலைவன் - காம பாணம் தைத்தது என்று; உள்ளம்
கருகி வந்தான்! கருணை செய்க என்றே - என்முன் உருகி நின்றான்!
வாளைமீன் வாய்க்குள் மாம்பழமொன்று வலிய விழுந்தால் சும்மா விடுமா?
காளை அவன்; என் மடியில் வீழ்ந்த கதையும் இதுதான் தோழி!
பிறகென்ன; நான் அவனை உறவென்று உரைத்தேனா? அல்லால்
வரிசை வைத்து வா என்று அழைத்தேனா? - விழி வலையை வீசி வஞ்சித்துப் பிடித்தேனா? - என்
பொலிவைக் காட்டிப் பொடிபோட்டு இழுத்தேனா? ஒரு புன்னகை வீசி அந்தப் “புனிதனைக்” கவிழ்த்தேனா?
வசைபாடி எனைத்தூற்றும் வாணன் மனைவியிடம் கேள்! - இன்ப
இசைபாடிக் களிப்போம் என்று; இரவலன் போல் கெஞ்சியது யார்?
