உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 11
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 11 · 11 / 104

“கவலை விடுக கண்ணே; காகம் கரைந்ததாலே, - உன் பவள இதழ் சுவைக்கப் பருவக் காளை பாய்ந்து வருவான்”

என்று

பகர்ந்தாள் தோழி; தலைவியின் துயரமும் நகர்ந்தது சிறிதே!

திரும்பிய காதலன் மேனி தழுவிட கரும்பின் சுவையை இருவரும் பருகினர்!

“பிரிந்திருந்த நாளெல்லாம் தலைவியின் பெரும் இன்னல் தீர்ப்பதற்குத் துணையிருந்தாய் தோழி! நீ வாழியவே; வாழி!” என்றுரைத்த தலைவனிடம்; நெடும் புருவத் தோழிப் பெண் கூறிடுவாள் -

“தாகத்தால் தவித்திட்ட தலைவிக்கு ஆறுதலைக் காகம் தான் வழங்கிற்று! அதனாலே;

வள்ளல் நள்ளியின் வளநாட்டு ஆயர் அள்ளி வழங்கும் நெய்யுடன்

Illustration

Full-page colour illustration preserved as its own physical-page record. No unprinted literary identity, dialogue, narrative interpretation, or inferred printed pagination is added from the artwork.

தொண்டி மூதூர் நெல்லரிசிச் சோறு பிசைந்து குண்டுப் பாத்திரம் ஏழில் நிறைத்துத் தரினும்

ஒளியழகுத் தலைவி துயர் போக்கிய காக்கைக்குத் துளியளவே ஆகுமென்றுணர்க!” என்றாள்.

ஏழு பாத்திரம் நெய்ச்சோறு தரினும் இணையில்லை காகம் செய்த உதவிக்கு -

என்பது இதன் பொருளாம்; இதனை எடுத்தோதுவது எழிலார் தமிழ்க் குறுந்தொகையாம்!

*

\* “திண்டோர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணல் வெஞ்சோ றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”

*

(குறுந்தொகை : பாடல் : 210 பாடியவர் : காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்)

பொருள் விளக்கம் :

நள்ளி = ஏழுவள்ளல்களில் ஒருவன். அண்டர் = ஆயர்.

பல்லா = பல பசுக்கள். தொண்டி = தொண்டியெனும் ஊர்.

எழுகலம் = ஏழு பாத்திரங்கள். கரைதல் = காக்கை கத்துதல்.

பலி = இரையாகத் தருதல்.

*

மாவீரன் கண்ட மலர்கள்

பூக்காட்டின் சிறப்பு குறித்துப் பாராட்டு மொழியொன்று கூறுதற்கு - ஒரு பொற்கொல்லன் முன்வந்தால்; பொன்னிறப் பூக்கள் நிறை சோலையென்று பொதுவாகக் கூறிவிட்டு முத்துமாலை கோத்தது போல் முல்லையரும்பு வரிசை என்பான்! செம்பருத்திப் பூக்கள் கண்டால் சிவப்புக்கல் தொங்கல் என்பான்! மாணிக்கம் நிகர் பூக்கள் பல மலர்த் தோட்டத்தின் மகிமைதனை உயர்த்தல் காண்பீர் என்பான்!

இதனையே ஓர் உழவன் சிறப்பித்தால் ஏர் இழுக்கும் மாடுகளின் வால்நுனி போல் அல்லித் தண்டுகளின் மொட்டுக்கள் அழகுற விளங்குகின்ற அரியதோர் காட்சியென்பான்; அங்கிருக்கும் தடாகத்தைச் சுட்டிக்காட்டி! தும்பைப்பூ, மகிழமலர், நீலோற்பலமென தூரிகை கொண்டு பற்பல நிறங்களைத் திரைச்சீலையிலே அள்ளி அள்ளித் தெளித்தது போல் அமைந்ததிந்தப் பூங்கா என்று, ஓவியனாயின் அவன் நோக்கில், உவமையொன்று உரைத்திடுவான்!

ஒரு கவிஞனிடம் சிக்கிவிட்டால் மலர்க்கூட்டம்; அப்பப்பா! ஒவ்வொன்றாய் எடுத்து வைத்து; மகளிர் உடலின் அங்கமெல்லாம் ஒப்பிட்டுத் தீர்த்தால்தான் உறக்கம் வரும் அவனுக்கு! தாழை மலர் நிறமன்றோ தளிர் மேனியென்பான் தாமரைதான் முகம் என்பான். மல்லிகை, செண்பகம், சாமந்தி கொண்டு மலர்ச் செண்டமைத்து - அதன் முனையில்

மனோரஞ்சிதத்தைக் கவிழ்த்து வைத்தது போல் மார்பகம் கொண்ட மாதர்க்கரசி யென்பான்! கையின் விரல்களது மென்மைக்கு காந்தள் மலரை உவமை காட்டிடுவான்! மகிழம்பூதான் அவள் தொப்புள் என்பான்; மஞ்சத்தில் ஊடும்போது அனிச்சமலர் ஆவாள் என்பான்! பஞ்சு மலர்ப் பாதமென்பான் - அந்த வஞ்சிக்கு இடை, அத்திப்பூ என்பான்!

பாவு போட்டுத் தறி நெய்யும் பாட்டாளியாம் நெசவாளி, பாராட்ட முற்பட்டால்; பட்டுப்போல் இருக்குதம்மா பூவின் இதழ் என்றும், பளபளக்கும் சரிகைப் பூக்கள் கொண்ட முன்றானையால் தளதளக்கும் தையலர் தம் அழகென்பான்!