சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 10 · 10 / 104
Illustration
Full-page colour illustration preserved as its own physical-page record. No unprinted literary identity or narrative interpretation is inferred from the artwork.
ஆண்மையுடன் வழியில் ஒரு முடுக்கில் நின்று அடுத்துவரும் வேட்டுவரை அடித்துவீழ்த்த ஆயத்தமாய் அந்த ஆண்பன்றி; எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆவேசத்தை - ஒரு புதிர் போலக் கண்டவேடன் - புல்லரித்துப் போனான்!
போர் முகத்தில் படைவீரர் - எதிரியிடம் புறங்காட்ட நேர்ந்த போதும் தான்மட்டும் தலைதாழாச் சிங்கமாய் நின்று வான்முட்டும் புகழைச் சேர்த்த - இந்த மலைநாடன் போலன்றோ - இப்பன்றி மாவீரம் காட்டுதென்று மலைத்துப் போய் மனத்துக்குள் பாராட்டிப் போற்றி - அது வனத்துக்குள் நன்றாக வாழட்டுமென்று; வேலெறிந்து கொல்ல விரும்பாமல் - அந்த வேடன் வந்து சொன்ன கதையில்; வீழ்வதற்கும் அஞ்சாமல் வெகுண்டெழுந்த பன்றியின்
உறுதியுடன்
வீரநெஞ்சம் படைத்திட்ட நம் தலைவனின் உறுதியையும்
ஒப்பிட்டான்!
எழுச்சியுடன் இதைநான் எடுத்துச் சொல்லி - உன்தலைவன் எஃகு உள்ளம் எவருக்கு வருமென்று கேட்டவுடன்; மகிழ்ச்சியுடன் உன் அன்னை; என்னை, மார்புறத்தழுவி உச்சி மோந்து; “நல்லவளடி நீ” என்று நயந்துரைத்து வல்லவன் ஒருவனைத்தான் என் மகளுக்குத் தேர்ந்தெடுத்தாய் ‘வாழி நீ’ என்று வாழ்த்தளித்தாள் - அப்போது வந்து நின்றான் உனைக்கவர்ந்த மன்னன்!
- அந்தப் போர்மறவன் தோளில் சூடிய மாலையின் பூக்கள் புதர்களில்பட்டு உதிர்ந்திடும் நிலையில்; உன் இதழ்களில் ஊறும் தேனை நாடி - அவன் இளைப்பாற வருகின்றான்! இளையவளே நீ - அந்த இனியவன் களைப்பை உடனே ஆற்றிடுக! நன்றி உண்டா இல்லையா? நான் பன்றி கதை சொன்னதால் பழிவாங்கமாட்டாயே! வழி இதுதான் அவன் வருவதற்கு! இருவரும் விழிமூடாதீர் விடியுமட்டும்! நகருகின்றேன் நான்” என்றாள்! தலைவி; தோழிக்கு, நன்றிகூற நா அசைப்பதற்குள் ஓடிவிட்டாள்!
*
\* “நகைநீ கேளாய் - தோழி! அல்கல் வயநாய் எறிந்து, வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நான்முலைப் பிணவல் சொலியக் கான்ஒழிந்து அரும்புழை முடுக்கர் ஆள்குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின்தன் படைசெலச் செல்லாது, சுடுவழி விலக்கும் எம் பெருவிறல் போலும்’ என எய்யாது பெயரும் குன்றநாடன் செறு அரில் துடக்கலின் பரீஇப் புரியவிழ்ந்து ஏந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை ஏற்று இமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர இல் வந்து நின்றோற் கண்டனள் அன்னை வல்லே என்முகம் நோக்கி ‘நல்லைமன்’ என நகூஉப் பெயர்ந்தோளே!”
*
(அகநானூறு : பாடல் : 248 பாடியவர் : கபிலர்)
பொருள் விளக்கம் :
அல்கல் = நேற்று. வயநாய் = வலிமையுள்ள நாய்.
எறிந்து = எதிர்த்துத் துரத்தி. பறழ் = குட்டிகள்.
இளையர் = வேட்டுவர். நான்முலை = தளர்ந்த மார்பு.
பிணவல் = பெண்பன்றி. சொலிய = தப்பித்து ஓட.
அரும்புழை முடுக்கர் = அரியதாகவுள்ள முடுக்கான இடம்.
தறுகண் = அஞ்சாமை. மடைசெலல் = எதிர்த்துப் போரிடல்.
செறு அரில் = தழைத்துள்ள புதர்.
ஏந்து குவவு மொய்ம்பு = நிமிர்ந்து திரண்ட வலிமையான தோள்.
*
காக்கைக்கு நன்றி காட்ட...
போரில் கலந்திட பிரிந்து சென்றவன் தோளில் தவழ்ந்திட வரவில்லை யென்று
வேரில் பழுத்த பலாப் போன்ற பாவை விழிநீர் பெருக்கி வேதனை யுற்றாள்!
துன்பம் போக்கித் தலைவியைத் தேற்றிட தோழியும் முனைந்தாள்! முடியவே இல்லை!
வீட்டினில் அமர்ந்து காகம் கரைந்தால் விருந்து வருமெனும் நம்பிக்கை யொன்று
நாட்டினில் உண்டு அறிவீர் அன்றோ! நல்லவேளை; அப்படியொரு காகம் கரைந்திற்றாங்கே!
