உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 9
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 9 · 9 / 104

*

\* “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்

கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே.”

*

(புறநானூறு : பாடல் : 286 பாடியவர் : ஒளவையார்)

பொருள் விளக்கம் :

வெள்யாட்டுச் செச்சை = வெள்ளாட்டுக் கிடாய்.

மண்டை = தேறல் எனும் மது

கால்கழி கட்டில் = காலில்லாத கட்டிலெனப்படும் பாடை.

தூவெள் அறுவை = (உடலை மூடுகின்ற) தூய வெள்ளைத் துணி.

*

பாவை புகழ்ந்த பன்றி

தென்னை இளம்பாளைச் சிரிப்பழகி முன் எழிலைத் தென்றலுடன் வம்பு செய்து மூடிக்கொண்டே “அன்னை என்ன சொன்னாள்?” என்று தோழியிடம் அமுதூறும் வாய்திறந்து அவசரமாய்க் கேட்டாள்!

குறும்புக்காரத் தோழியவள் கோலவிழி காட்டி; “குன்றையும் குடையாக்கும் திறமை எனக்குண்டு! எறும்பு ஊரக் கல்லும் தேயுமன்றோ? அதுபோல என்பணியை முடித்துவிட்டேன் உன் அன்னையிடம்!”

- என்றாள்.

“எப்படித்தான் ஒப்பினாளோ என்தாய்? இப்படி உட்கார்! அந்த இனிமைச் செய்தியைக் கொஞ்சம் சொல்!” என்று - அந்தக் கோதை கெஞ்சினாள்! தோழியோ;

“நன்றி நீ எனக்கு ஆயிரம் சொல்ல வேண்டும்; நான் பட்டபாட்டுக்கு வெகுமதியே நாட்டில் இல்லை! குன்றிமணி அளவுகூடக் குறையில்லான் உன் காதலன் என்று பன்றி ஒன்றின் செயலுடன் அவனை ஒப்பிட்டு உரைத்தவுடன் கட்டிவெல்லம்போல் இனிக்கின்ற உவமை சொன்னாய்; இனி அட்டியில்லை என்மகளை அவன் மணப்பதற்கு என்று கூறித் தட்டிக் கொடுத்தாள் என் முதுகை! ஒரு சட்டிப் பலகாரத்தை என்வாயிலும் திணித்துவிட்டாள்

உன்தாய்” என்றாள்.

விளையாடுகின்றாயா தோழி? அவரைப் பிரிந்து; வளை கழலுமளவுக்கு மெலிந்துவிட்ட என் கைகள் கண்டும் விளையாடுகின்றாயா தோழி? தளையிட்டுத் தடுக்கின்ற தாயின் நெஞ்சை களையற்ற நஞ்சையாக மாற்றல் விடுத்து; அன்றில் பறவைகளாய் வாழ்வோமென்று அணைத்த

ஆண்சிங்கத்தைப்

பன்றியுடன் ஒப்பிட்டு என் ஆசைக்கனவுகளைக் கலைத்து

விட்டாயே; அடுக்குமா உனக்கு?

முழுங்குகின்ற முரசடித்துப் பகை முடக்கிப் போடுகின்ற குறிஞ்சிநிலத்து இளங்களிறு போன்றவரை - பூமியில் கிழங்கு தோண்டும் பன்றிக்கு ஒப்பிட்ட உன்வாயைக் கிழிக்கவேண்டும்! கெடுத்துவிட்டாய் காரியத்தை! - என் கிட்டநெருங்காதே! போய்விடு என்று - அவள் போட்ட

கூச்சலினால்,

கிறுகிறுத்துப்போன தோழி; “பரபரப்பு அடையாதே! பதட்டத்தை அகற்றிவிடு!” பன்றி என்றவுடன் பதறுவதால் பயனில்லை; முழுதும்கேள் கதையை! முடிவில் என்னைத் தொழுதுநீ போற்றிடுவாய்! பழுதொன்றுமில்லை நான் சொல்லும் பன்றிக்கு! உழுது, பயிர்காத்து அறுவடையும் செய்துவந்த எனைப் பார்த்து; கழனிதனைக் கெடுத்து வந்த கலகி எனக் கடுமையாகப் பேசிடுதல் முறையே அல்ல! உன் காதல் நாற்றுக்கு கரையெடுத்து நீர் பாய்ச்சி - இன்று; கதிர் சாயும் பக்குவத்தைக் கண்டு களிப்பவள் நான்!

அதனாலே

“பண்பார்ந்த உன்தாய்க்கு நான் புகன்ற பன்றிக் கதையைச் சற்றுப் பகுத்தறிவைத் துணைக்கழைத்துச் செவிமடுத்துப் பின்னர் - உன் தோழியினை எடைபோடு” எனக்கூறித் தொடங்கினாள் கதையை!

“கதையென்று கருதாதே; நேரில் கண்டகாட்சி! காடு சூழ் மலைமீது கடும் வேட்டையாடுதற்கு நாய்களை முன் ஓடவிட்டு நமது வேட்டுவர்கள் விரைந்தபோது;

பாய்ந்து பறந்து பன்றிக் கூட்டம் பல்வேறு திசைகளிலே சிதறியோட தாய்ப்பன்றியொன்று தன் குட்டிகளுடன் தவியாய்த் தவித்துத் தலைதெறிக்கத் தடுமாறியது! தன் துணைவிக்கும் குட்டிகட்கும் நேர்ந்தகதி தாங்காமல் ஆண்பன்றி அவ்வேடர்களைத் தடுத்தெதிர்த்து, தலைநிமிர்ந்து உறுமியது! தாவித்தாண்டி சீறியது! சற்றுத் தயங்கினார்கள் வேடுவர்கள் என உணர்ந்து, தளர்ந்து தொங்கும் மார்புடைய தாய்ப்பன்றியையும் குட்டிகளையும் - ஆங்கு தழைத்திருந்த புதரோரம் ஒளித்துவிட்டுத் தான்மட்டும்