உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 72 · 72 / 300

உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்

அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல் - 1316

Large colour flood/rescue illustration showing a man in floodwater carrying a calf while two men watch from the bank.

புயலும் மழையும் ஓய்ந்து, ஊர்மக்கள் வெளியில் தலைகாட்டத் தொடங்கினார்கள். ஆங்காங்கே பெருமரங்கள் அடியற்றுக் கிளைகளுடன் வீழ்ந்து கிடந்தன. காற்றுக்கு வளைந்து கொடுத்துத் தப்பித்துக் கொள்ளும் நாணலும் படுகை மண்ணோடு தூக்கிபெயரியப்பட்டுத் தலைகுப்புறச் சாய்ந்து கிடந்தது. ஊர்க் கோயிலின் கோபுரத்துக் கலசம், ஒரு கல் தொலைவுக்கப்பால் உருண்டு கிடந்தது. கால்நடைகள், ஒன்றிரண்டு தெருக்களில் மூச்சற்றுக் கிடந்தன.

கிழங்கள், நடுங்கும் மேனியைப் போர்த்துக்கொண்டு தங்கள் இல்லத்துத் திண்ணைகளில் படுத்திருந்தன. வீதிகளில் தேங்கியிருந்த மழைநீர்க்குட்டைகளில், குறும்பு செய்யும் இளைஞர்

கூட்டம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கழனிகளில் தலைசாய்ந்து மிதந்தவண்ணமிருந்த நெற்கதிர்களை, உழவர்கள் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். புயலுக்குப்பின் ஏற்பட்ட அந்த அமைதியில், பெரும்பாலும் சோகத்தின் பின்னணியே ஒலித்துக் கொண்டிருந்தது. ஊரின் நடுவே தலையில் வகுத்த நேர்வகிடு போல் அமைந்திருந்த ஆறு, நிம்மதியிழந்து வெறி பிடித்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கடுமழையும் புயலும்தான் ஆற்றின் ஆவேசத்துக்குக் காரணம்!

இலை தழைகள், கிளைகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டிகளின் சவங்கள் ஆற்றின் தோள்மீது சவாரி செய்து கொண்டிருந்தன.

ஊர் நாட்டாண்மைக்காரரும் அவருடைய உதவியாளரும் ஆற்றின் வேகத்தைக் கண்டவாறு ஆற்றங்கரை மீது நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்க்கரையில் ஒரு கட்டுடல் படைத்த வாலிபன், ஆற்றையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவன் பரபரப்பு அடைந்திருந்தான். அவனை நாட்டாண்மைக்காரர் பார்த்துவிட்டு, உதவியாளரிடம் கேட்டுச் சந்தேகத்தைப் போக்கிக் கொண்டார்.

“ஏய்! எதிர்க்கரையில் நிற்பவன் நம்ம ஊர் சிங்கன்தானே?”

“ஆமாங்க! அவனேதான்! உங்க பரம விரோதி சிங்கனேதான்!”

“என்ன அப்படி, ஆற்றையே பார்க்கிறான், வைத்த விழி வாங்காமல்?”

“சாமி! சாமி! அடேடே! ஒரு மான்குட்டி உயிருக்குத் தவிக்குதுங்க! அதோ பாருங்க ஆற்று நடுவினிலே!”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எதிர்க்கரையில் நின்ற சிங்கன், மான்குட்டியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துவிட்டான். குதித்தவனைச் சிறிது நேரம் காணவில்லை. நாட்டாண்மைக்காரருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

“பாரடா! பார்! என் பகைவன் ஆற்றோடு போய்விட்டான் அமிழ்ந்து!” என்று அவர் கூச்சல் போட்டார்!

“இருங்க சாமி! அவசரப்படாதீங்க! அவனுக்கு நீச்சல் தெரியும்” என்றார் உதவியாளர்.

அவர் சொன்னபடியே சிங்கன் நீச்சலடித்துக் கொண்டு மான்குட்டியைக் காப்பாற்ற முன்னேறிக் கொண்டிருந்தான். ஆற்றின் கடுமையான வேகத்தைச் சமாளிக்க முடியாமல் அவன் தத்தளித்தான்.

நாட்டாண்மைக்காரர், தன் உதவியாளரிடம் சொன்னார்:

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்