குறளோவியம்
பகுதி 40 · 40 / 300
“உங்களுடன் வந்திருப்பது யார் என நான் அறிந்து கொள்ளலாமா?”
“அவர் என் நண்பர். வாணிபத்தில் இருவரும் பங்குதாரர்கள்.”
“நம்பிக்கைக்கு உரியவர்தானா?”
“நிச்சயமாக! நீண்ட நாட்களாக நாங்கள் இணைந்தே வாணிபம் நடத்துகிறோம்.”
“என்மீது சினம் கொள்ளக் கூடாது! இதே ஓய்வு விடுதியில் முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது.”
“என்ன, அந்த நிகழ்ச்சி?”
“இப்படித்தான் பெரும் பொருளுடன் இரு நண்பர்கள் ஒரே அறையில் தங்கினார்கள். காலையில் எழுந்து பார்த்தால் இருவரில் ஒருவர் பிணமாய்க் கிடந்தார். மற்றவர் பேழையுடன் மாயமாய் மறைந்துவிட்டார்.”
“அப்படியா?”
“அதனால்தான் சொல்லுகிறேன். தாங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”
“அது எவ்வாறு?”
“தாங்கள் பேழையுடன் இந்த அறையில் உறங்குங்கள். தங்கள் நண்பர் மற்றொரு அறையில் உறங்கட்டும்.”
“அதுவும் நல்ல யோசனைதான்.” இந்த உரையாடல் முடிந்ததும் மூத்தவர், இளைய நண்பரைப் பார்த்து, “நீ பக்கத்து அறையில் படுத்துறங்கு. இருவருக்கும் வசதியாக இருக்கும்” என்று கூறினார்.
இளையவர் சற்றுத் திகைத்தார். எனினும் அவ்வாறே அடுத்த அறைக்குச் சென்று விட்டார்.
மூத்தவர், இளையவர் இருவருமே, தனித்தனி அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஓய்வு விடுதி உரிமையாளன், மெல்ல அந்த அறையின் பின்புறமாக வந்து மூத்தவருக்கு அருகே இருந்த பேழையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். அதற்குள் மூத்தவர் விழித்துக்கொண்டு, அவனைப் பிடித்துக் கொண்டார். பிடிபட்டவன் தன்னிடமுள்ள கொடுவாளால் அவர் நெஞ்சில் குத்திவிட்டான். இந்த அமளியில் இளையவர் எழுந்தோடி வந்து ஓய்வு விடுதி உரிமையாளனைத் தடுத்து நிறுத்தி, அங்குள்ள தூணில் கட்டிப் போட்டார்.
அவருக்கு எதிரே தன் நண்பர் உயிருக்கு மன்றாடுவதையும் கண்டு கண்ணீர் வடித்தார்.
“என் இனிய நண்பா! இளைய நண்பா! உன்னுடைய நட்பை ஆராய்ந்து தெளிவடைந்துதான் நான் பெற்றிருந்தேன். இருந்தாலும் தேவையில்லாமல் உன் மீது திடீரென்று சந்தேகம் கொண்டேன். இதோ, இந்த கொடியவன் என் மனத்தைக் கெடுத்துவிட்டான். அது மட்டுமல்ல; இவனைப் பற்றி ஆராயாமலே இவனை உடனடியாக நம்பியும் விட்டேன். அந்தத் துன்பத்தை இப்போது அனுபவிக்கிறேன். என்னை மன்னித்துவிடு.
