குறளோவியம்
பகுதி 39 · 39 / 300
இப்படி ஏதோ ஒரு வகையில் அவன் தவறு செய்திருப்பான். எந்தத் தவற்றைக் கணவன் செய்திருந்தாலும் அவள் மன்னித்து விடுகிறாளாம்-இல்லை இல்லை-மறந்து விடுகிறாளாம் - அதுவுமில்லை - அந்தத் தவறு அவளுக்குக் காணப்படாமலே போய்விடுகிறதாம். எப்போது? கணவன் அருகே வந்து விட்டபோது! அதற்கு உதாரணம் தருகிறார் வள்ளுவப் பெருந்தகை:
கண்ணுக்கு மையெழுதுங்கோலைக் கையிலே வைத்திருக்கும்போது பார்க்க முடிகிறது. அதே கை அந்தக் கோலைக் கண்ணிடத்திலே கொண்டுபோய் மை எழுதும் நேரத்தில் கண்களுக்கு அந்த எழுதுகோல் தெரிவதில்லை.
அதேபோல, கணவன் எந்த வகையான தவறு செய்திருந்தாலும் - அவனைத் தன்னருகே கண்டதும் அந்தத் தவறுகள் எல்லாம் கண்ணருகே வந்துவிட்ட மையெழுதும் கோல்போல் மறைந்து விடுகின்றன.
“வரட்டும் சொல்லுகிறேன் - என்ன பாடுபடுத்துகிறேன்!”
“என்னை அழைக்காமல் விழாவுக்கு இவர் மட்டும் எப்படிப் போகலாமாம்?”
“என் மனம் நோக நடந்தவரை - நான் சும்மா விடப் போவதில்லை!”
இப்படியெல்லாம் கச்சை கட்டிக்கொண்டு நிற்கிறாள். அவன் வந்து விட்டதும், தன் கோபத்தையெல்லாம் மறந்து - அவன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நினைக்கவே முடியாமல் - வேறு ஒரு புது உலகத்துக்குப் போய் விடுகிறாள். மையெழுதுங்கோல் போலக் கணவன் தவறுகள் மறைந்து விடுகின்றன. வள்ளுவர் குறள் அதைத்தான் அழகாக விளக்குகிறது.
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.
அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1285
Small Thiruvalluvar statue illustration centred below the text and metadata near the foot of the page.
Large colour illustration showing three men conversing at the entrance/interior of an inn or rest-house.
கடல் கடந்து சென்று வெளி நாட்டு வாணிபத்தில் ஈடுபட்டிருந்தார் ஒருவர். அவருக்கு ஓர் உற்ற நண்பரும் உண்டு. இருவருமே பங்குதாரர்களாக இருந்து வாணிபத்தைச் சீர்பெற நடத்திப் பெரும் பொருளீட்டினர். இருவருக்கும் தாயகம் திரும்பிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஈட்டிய பொருளில் பெரும் பகுதியை எடுத்துக் கொண்டு நாவாய் ஏறி, நாட்டுக்குத் திரும்பினர். அவர்கள் தங்கள் நாட்டுக் கரைக்கு வந்து சேர்ந்த நேரம் நள்ளிரவு.
அவர்களிடமுள்ள பேழையிலோ ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட பொற்காசுகள் இருந்தன. எனவே, அந்தத் துறைமுகப்பட்டினத்திலேயே ஓர் ஓய்வு விடுதியில் இரவைக் கழித்துவிட்டுக் காலையில் தங்கள் ஊருக்குப் புறப்படுவது என முடிவு செய்தனர். அவ்வாறே ஓய்வு விடுதியை நாடிச் சென்றனர். விடுதியின் உரிமையாளன், யாரையும் கவரத்தக்க முறையில் பேசவும் நடக்கவும் கற்றவன். பொற்காசுப் பேழை, இரண்டு பங்குதாரர்களில் மூத்தவர் வசம்தான் இருக்கிறது என்பதை அவன் புரிந்து
கொண்டான். மூத்தவருக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தான். இளைய பங்குதாரருக்கு, அந்த மனிதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் தங்குவதற்கு ஒரு நல்ல அறையையும் ஒதுக்கிக் கொடுத்தான் உரிமையாளன். மூத்தவரைப் பார்த்து, உரிமையாளன் தன் நாவன்மையைக் காட்டத் தொடங்கினான்.
“இந்த ஓய்வு விடுதியில் நமது சிற்றரசர்கூட ஒருமுறை வந்து தங்கியிருந்தார். இன்னொரு முறை இளவரசியார் வந்து ஓய்வெடுத்துச் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நவரத்தினங்கள், மாலைகள் அனைத்தும் என் பாதுகாப்பிலேதான் இருந்தன. இந்தத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்காக வருகிற எல்லா வாணிப வேந்தர்களுமே என் பொறுப்பிலேதான் தங்கள் பொருள்களைவிட்டு வைப்பார்கள். நீங்கள் இங்கு எந்தவித அச்சமுமின்றி உறங்கலாம்.”
விடுதி உரிமையாளனின் பேச்சு மூத்தவருக்கு நம்பிக்கையை வலுப்படுத்தியது. மிக்க மகிழ்ச்சியுடன் உறங்குவதற்குப் படுக்கையிடம் சென்றார். உரிமையாளன் அவரை விடவில்லை.
“ஒரே ஒரு செய்தி! தனிமையாகப் பேசவேண்டும்” என்றான். அவரும் இணங்கி அவனுடன் வேறு பக்கம் தனியாகச் சென்றார்.
