உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 38 · 38 / 300

வள்ளுவர் அமைதியாகச் சொன்னார்: “மானா? இந்தப் பக்கம் வரவில்லையே! அதோ, அந்தப்பக்கம் அல்லவா சற்று நேரத்துக்குமுன் ஒரு மான் துள்ளியோடியது.”

இந்தப் பதிலைக் கேட்டதும் வேடன், “அப்படியா?” என்று கூவியவாறு அவர் காட்டிய திக்குநோக்கி ஓடத் தொடங்கினான்.

மாணாக்கன் மிக்க பணிவுடன் வள்ளுவரைப் பார்த்துக் கேட்டான்.

“பெருந்தகையீர்! பொய் கூடாது - அது பெருந் தீது என்று பலமுறை விளக்கியிருக்கிறீரே; இன்று தாங்களே அந்த வேடனிடம் ஒரு பொய் கூறினீர்களே, சரிதானா?”

வள்ளுவர், புன்னகை புரிந்தவாறு விடையளித்தார்.

“கேடு இல்லாத நன்மையை விளைவிக்கக்கூடிய பொய்யான சொல், வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். நான் வேடனிடம் உண்மையைச் சொல்லியிருந்தால், அந்தப் புள்ளிமான் உயிர் போயிருக்குமல்லவா? நான் கூறியது பொய்யானது எனினும் அது ஒரு நன்மையைச் செய்த காரணத்தால் வாய்மையாகவே கருதப்படும்.”

வள்ளுவர் இந்த விளக்கத்தைச் சொல்லி முடித்துவிட்டு, எதிரேயிருந்த ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார். குறள் உருவாயிற்று.

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

அதனைத் தொடர்ந்து மாணாக்கனிடம் கூறினார்.

“இளைஞனே! இந்த விளக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பொய் சொல்லுவதே வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டு விடக்கூடாது! ஒருவன் தன் நெஞ்சம் அறிந்த உண்மையை மறைத்துவிட்டு, தன்னைக் காத்துக் கொள்ளவோ அல்லது பிறருக்குக் கேடுசூழவோ பொய் கூறுவானேயானால், அப்படிப் பொய் கூறியவனுடைய நெஞ்சமே அவனைச் சுட்டுப் பொசுக்கிவிடும். அதனைக் குறிப்பிட்டே இந்தக் குறளையும் எழுதியிருக்கிறேன்.”

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

வள்ளுவரின் அருமைமிகு கருத்துக்களைக் கேட்டு மகிழ்ந்த மாணாக்கன், அவர் கால் மலர் தொழுது நின்று, “வாழ்க வள்ளுவம்” என்று முழங்கினான்.

அதிகாரம் - 30 - வாய்மை; பாடல்கள் - 292, 293

Large colour illustration dominated by a woman's face, with a smaller man-and-woman scene below and a makeup/eyeliner motif linking the image to the prose.

கணவன், தன் மனைவிக்குத் தவறிழைத்து விடுகிறான். பெரிய தவறு எதுவாயிருக்கும்? நாளைக்கு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டுப் போனவன் சொன்னபடி வந்திருக்கமாட்டான். கொடுத்த முத்தம் காய்வதற்குள் அடுத்த முத்தம் அளித்திருக்கமாட்டான். நிலவின் அழகில் ஈடுபட்டிருந்திருப்பான். ‘என்னைவிட நிலவு அழகோ?’

என அங்கிருக்கும் ஆரணங்கு கேட்டிருப்பாள்- “ஆமாம்-உனக்கு ஒரு

குறையுண்டு” என்று கூறுவான்-நிலவைப் போலக் களங்கம் காதலியின் முகத்தில் இல்லை என்ற எண்ணத்தை மறைத்துக் கொண்டு, “குறையுண்டு” எனக் குறும்பு மொழிந்ததை அவளால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும்.