குறளோவியம்
பகுதி 3 · 3 / 300
காலைப் பொழுதிலே அரும்பாய்த் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாகத் தழைத்து, மாலையில் மலராக மாறுகிறது இந்தக் காம நோய்; அதற்கு இதோ குறள்:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்
அந்நோய் மலருகிற மாலை நேரம் எப்படி இருக்கிறது தெரியுமா மங்கைக்கு? அவளைக் கொல்ல வருகிற சேனையானது, நெருப்புப்போல் உள்ள மாலை நேரத்திற்குத் தூதாக வருகிறது.
“கொல்லும்படி; அழல்போலும் மாலைக்குத் தூதாகி” என்கிறார். அது மட்டுமா?
மாலை நேரத்திலே ஆயன் குழலூதிக் கொண்டிருக்கிறான். குழலிலேயிருந்து இனிமை அருவியெனக் கொட்டுகிறது, தென்றலுக்கே இன்பம் சேர்க்கிறது, அந்த இசை! அசைந்தாடும் மலர்க் கொத்துக்கள், குழலிசைக்கு அபிநயம் காட்டுவதுபோல் காட்சி தருகின்றன. குழலோசை, நாகத்தையும் மயங்க வைக்கும் என்பார். அந்தக் குழலோசையைப் பற்றிக் காதலனைக் காணாக் கட்டழகி என்ன கூறுகிறாள் தெரியுமா? “என்னை வருத்தும் சேனை, மாலைக்குத் தூதாக மட்டுமல்ல - ஆயன் குழலாகவும் வருகிறது போலும்!”
என்று புலம்புகிறாள்.
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை
அதிகாரம் 123 - பொழுதுகண்டு இரங்கல்; பாடல்கள் 1227, 1228
Small Thiruvalluvar statue illustration centred in the lower portion of the page.
Colour illustration of a smiling woman and man with a child between them; a large yaazh and bow-like playing implement occupy the foreground.
“என் வாழ்க்கைத் துணைவி, வார்த்தெடுத்த தங்கப்பதுமை. இல்லறத்து முல்லைக்கொடி. தாமரை மலர்மீது இரு வண்டு அமர்ந்தாற்போல் அவள் விழிகள். கோத்துவைத்த முத்துமாலை அவள் சிரிப்பு. இத்தனை உயர்வுடையாள் யாழெடுத்து மீட்டிவிட்டால் இத்தரையினிலே யாருமில்லை என்பேன்.
“தெங்கின் இளம்பாளை சுவைத்துவரும் தென்றல் உடலில் மோதும். அதை அந்த யாழ் வெல்லும் - என் துணைவி மீட்டுகின்ற யாழ் வெல்ல, இவ்வுலகில் யாருண்டு? எங்குமில்லை?
“குயிலோசை கேட்டதுண்டு. கோதை நான் மீட்டுகின்ற யாழோசை எனக்கே தெவிட்டியதுண்டு; என் கொழுநன் வழங்குகின்ற அந்தக் குழலோசை சேர்த்த இன்பம் பேரின்பம் என்பேன்! கூதிர் காலம் கொட்டுகின்ற பனிக் காற்றில் குளிரில்லை; என் கோமான் ஊதுகின்ற குழலோசை குளிர் வெள்ளம்!”
“சத்துள்ள முத்தமிழ்க் குவிகின்ற இதழ்பொருத்திக் குழலூதும் அவரை வெல்லக் கத்துகடல் சூழ்கின்ற இப்புவியில் யாருமில்லை - எங்குமில்லை!
யாழ் மீட்டும் துணைவி - குழலூதும் துணைவன் - ஒருவரையொருவர் புகழ்ந்தனர். வாழ்த்தினர். குழலையும், யாழையும் வெல்லக் குவலயத்தில் எதுவுமில்லையென்ற நினைப்போடு இருவரும் தழுவினர். பின் தம்மை மறந்தனர்.
குழல் இனிதா? யாழ் இனிதா? இரண்டையும்விட இனியது ஒன்றிருக்கிறது எனக் கண்டனர். அப்போதே அல்ல; ஓரிரு ஆண்டுகள் ஓடியபின்!
இரு மலர் - ஒரு மொட்டு என்று ஆகிவிட்டது குடும்பம்-
