குறளோவியம்
பகுதி 298 · 298 / 300
ஊரிலுள்ள எல்லோரையும் பற்றி ஆய்வு நடத்தி வீண்காலம் கழிக்கும் இயல்புடையவர்கள். அன்றும் அவ்வாறே ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். யாரையாவது இகழ்ந்து பேசுவது என்பது, அவர்களுக்கு இனிமையான பொழுது போக்கு. பகை புகுந்தது எனக் கண்டு, ஊரில் படைதிரண்டால், இந்தக் கூட்டத்தினர் ஓடிப் பதுங்கிக் கொள்வர். பகை முடித்து ஊர்ப்படையினர் வெற்றிக்கு விழா எடுத்திடும்போது, ஒளிந்தோர் திரும்பி வந்து, எப்படிக் கிடைத்தது வெற்றியென வீண் உரையாடல் நிகழ்த்துவர்.
ஊர்ப்பணிகளிலும் ஈடுபடும் ஊக்கமில்லை. ஊரைக் காத்திடும் வீரச் செயல்களிலும் நாட்டமில்லை. வக்கணை பேசிப் பொழுதைக் கழிப்பதிலே மட்டும் பேரார்வம்!
தங்கள் பணியின் நிமித்தம் அந்த மன்றத்தைக் கடந்து செல்வோர், அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. வணிகர்கள் அவ்வழி செல்வர். வீரர்கள் அவ்வழி நடந்திடுவர். அழகு மங்கையர் அவ்வழி எதிர்வர். அவர்கள் யாரும் அந்தக் குழுவினரைக் கண்டு மதிப்புத் தந்ததில்லை. தங்கள் பணியுண்டு, தாங்களுண்டு என்றே சென்றிடுவர்.
அன்று மட்டும் ஏனோ, ஒரு வீரன் அந்த மன்றத்தைக் கடந்திடும்போது தலையைக் கவிழ்த்துக் கொண்டான்!
அவன் கால்கள் தள்ளாடின. முதுமை அவனை வருத்திடவில்லை. காரணம், அது அவன்மீது ஆட்சி நடத்தவே தொடங்கிடவில்லை. நோய் அவனை அணுகிட வில்லை. மலைத் தோள் கொண்டவன்தான். கதிர் ஒளிபரப்பும் கண்கள்தான் அவனுக்கு. இரும்புச் சிலையொன்று நடப்பதுபோல் நடப்பவன்தான். போர்க் களத்தில் பகைக் குலத்தின் இடுப்பு முறிப்பதில் புலிப் போத்துத்தான் அவன்.
அந்த ஆற்றல் மறவன், அந்த மன்றத்தைக் கடந்திடும்போது, புழுவாக நெளிவானேன்? புயல்காற்றைத் துரும்பாக அவன் உள்ளம் இருப்பதால்தானே பூனைபோல் பதுங்கிச் செல்கிறான்!
எல்லோரையும் இகழ்ந்து பேசுவதையே தொழிலாக்கிக் கொண்ட அந்தக் குழுவினரை அவன் அகன்ற விழியின் நோக்கே, அவரிப் புடைத்து ஓடச் செய்துவிடும்.
ஆனால், அந்தப் பெருமித நோக்கு எங்கே?
அந்தப் பீடு நடை எங்கே? யாரும் பதில் கூறவில்லை. மன்றத்தில் குழுமியிருந்த இகழ்ச் சொல்லாளர்களும் அந்த வீரனின் தளர்ந்த நடைக்குக் காரணம் அறியாது பல கதைகளைப் படைத்தனர்.
உண்மையான காரணத்தை, அவன் உளச்சான்று உரைத்திடுகின்றது.
எல்லாப் புகழும் அவனுக்கு இருந்தும்கூட, அந்தப் புகழைக் காக்க விரும்பும் மனைவி அவனுக்கு வாய்க்கவில்லை. அதனால்தான், இழித்துப் பேசுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் முன்னால் செல்லும்போது, அவன் உள்ளம், அவனைத் துளைத்தெடுக்கிறது. நடை தளருகிறது. தலை கவிழ்கிறது.
“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை”
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்; பாடல் - 59
“பிரிந்திருந்தமைக்காகப் பெரிதும் கலங்கினாயோ கண்ணே! ‘இருக்கின்றேன் சாகவில்லை’யென்று பாவேந்தர் கவிதை வரியினைத் தீட்டிக் காட்ட உனக்கு மட்டும்தான் தெரியுமோ? ‘இங்கென்ன வாழ்கிறது!’ எனப் பதில்மடல் எழுதி அல்லவோ தவிர, என் இதயத்தைப் பிழிந்தெடுத்த பிரிவுத் துன்பத்தை நீயென்ன கண்டாய்! அடடா! அப்படியேன் பார்க்கிறாய்? சிறார்கள் தெருவினில் விளையாடும் கோலிக் குண்டுகளைப்போல், உன் விழிகள் என்மீது விர்ரென்று பாய்கின்றனவே!
பசலை படர்ந்திருக்கும் - பைந்தொடிகள் கழன்று இருக்கும் - ‘இனிப் பார்ப்பதேயில்லை இந்த இரக்கமற்றவனை’ என்றெல்லாம் கூடச் கூறினாய்; உன்னைச் சினக்காட்டின் மத்தியிலே நிறுத்தியிருக்கும் - எல்லாம் அறிவேன் அன்பே!
அழகே! அமுதமே! சத்து நிறைப் பலாச்சுளை முத்தங்களைக் கத்தும் கடல் ஓரத்தில் பரிமாறிக்கொண்டதையும் முத்து மொழிக் கொஞ்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கட்டிலறைக் காவியத்தின் உச்சக்கட்டக் கவிதையினை மெளனமாய் இசைத்ததையும் எப்படித்தான் மறந்திட இயலும் பெண்ணே! அந்த நினைவுகளின் தித்திப்பால்தான் விநாடி யுகங்களை விரட்டிட முடிகிறது என்பது உனக்கும் பொருந்துகிற உண்மைதானே கண்ணே! சரிதானே! வா! ஆறிடாது அல்லும் பகலும் வருந்துகின்ற காதல் அணையைக் கட்டித் தழுவிச் சுற்றக் குளிரவைப்போம் வா!
தழுவிடும்போது ஏற்படும் தகிப்பு; தண்ணிலவின் குளிர் மழைபோல் இருக்குமென அறிவோம் நாம்!”
அதனாலே ஊடல் விடுத்துக் கூடல் கோபுரத்துக் கலசத்தில் என்னை உலவவிடு; நீயும் கைகோத்து இன்பப் பூங்காவில் நடை பயிலத் தொடங்கு! பிரிவுக்குப்பின் விளைகின்ற சந்திப்பு, பேரின்பப் பெருக்கன்றோ! அந்தக் காதல் இன்பத்திற்கு வழிவிட்டுக் கதவைத் திறந்திடு!
காதலன், காதலியிடம் தன் நெஞ்சத்தை வளைய வைத்து முறையிட்டு அளித்தவுடன், அவளும் மஞ்சத்துக் கதவுதனை மூடி - மகிழ்வால் பூத்த உதடுகளைத் திறந்து, நாணமணக்க - நல்ல தேன் மணக்க - “அத்தான்” என்றாள்!
