குறளோவியம்
பகுதி 297 · 297 / 300
அதிகாரம் - 97 - மானம்; பாடல் - 965
இலக்கிய ஏடுகளைப் புரட்டுகின்றாள்; ஒவ்வொன்றும் அவள் உள்ளத்தில் காதலன் பிரிவை நினைவூட்டித் துவளச் செய்கின்றனவே தவிர, ஆறுதல் கரம் நீட்டிடவில்லை.
இதிகாசங்கள், புராணங்கள் எதை எடுத்துப் படித்தாலும் அவற்றில் வருகின்ற கோபாலன், கோபிகைகளுடன் கூடி மகிழ்வதும் சிவனார், மோகினியை அணைத்துச் சுகிப்பதும் காண்டபன், அல்லியை முகர்வதும் இப்படித்தான் சுவையான கட்டங்கள் அவள் முன்னால் தோன்றி அவளைத் தகிக்கச் செய்கின்றன. ஏடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கண்ணயர்ந்தாவது கவலையை மறப்போம் என்று விழிகளை இமைகளால் தாளிட்டுக் கொள்கிறாள்.
அந்தப் பொல்லாத விழிகள், இமைக் கதவுகளைத் தட்டிப் பார்த்துவிட்டு - நினைவுச் சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப் பார்க்கின்றன.
அந்தக் காலத்தில் அன்னங்களைத் தூது விட்டிருக்கிறார்களே! கிள்ளைகளைத் தூதாக அனுப்பியிருக்கிறார்களே! புறாக்கள்கூட செய்திகளை ஏந்திச் சென்று காதலர்களை மகிழ்வித்திருக்கின்றனவே! அதுபோல என்னைப் பிரிந்து சென்றுள்ள என்னுயிரனையக் காதலர், தூது ஒன்றை எனக்கு அனுப்பி என் சோகத்தில் ஒரு துளியளவாவது துடைத்திடக் கூடாதா? அவர் இருக்குமிடம் எனக்குத்
தெரிந்தாலாவது, ஏதாவது ஒரு தூதான தூதினை அவர்பால் அனுப்பி வைத்திருப்பேன்.
எத்தனை நாட்களாயின நான் உறங்கி! எதையாவது மறக்க முடிந்தால்தானே உறக்கம் வரும்!
எதை மறப்பேன் நான்? அவர் என்னைத் தொட்டதையா? அப்போது அங்கமெல்லாம் சுட்டதையா? அந்தக் கொதிப்பு அடங்கக் குளிர் முத்த மாரி பொழிந்ததையா? கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லையா என அவர் கேட்டதையா? அவர் கேட்டு வாய் மூடுவதற்குள் திரும்பப் பெற்றுக் கொண்டதையா? தொடர்ந்து நடந்த இன்பக் கதையையா?
இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தவள்; தன்னை மறந்து தூங்கி விடுகிறாள். பல நாள் தூங்காத களைப்பு! தூக்கத்தில் கனவு! அந்தக் கனவில் ஓர் அன்னம்! அது அவளிடம் பேசுகிறது! அவளுடைய காதலன் அனுப்பி வைத்தானாம்! இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து விடுவதாக உறுதியளித்தானாம். கவலைப்படாமல் இருக்கச் சொன்னானாம். பலாச்சுளையொன்றை அவள் பாதி கடித்துவிட்டு, மீதியை அவனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னானாம்.
அன்னத்தின் மொழி கேட்டு அவள் இன்பத்தில் மூழ்குகிறாள். பருவக்கிளியின் கரம், படுக்கையிலிருந்தவாறே பலாச்சுளைக் கிண்ணத்தைத் தேடுகிறது. விழித்துக் கொள்கிறாள். அன்னம் மறைந்து விடுகிறது. கனவு மறையாமல் நினைவில் நிற்கிறது.
“என் காதலர் தூதாக அனுப்பிய அன்னத்தை அழைத்து வந்த இந்த இன்பக் கனவுக்கு, நான் என்ன விருந்தளித்து உபசரிப்பது என்றே தெரியவில்லையே; அவ்வளவு மகிழ்ச்சியை அல்லவா இந்தக் கனவு எனக்கு வழங்கியுள்ளது!”
இப்படி ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள். அவளது தாபத்தைச் சித்திரிப்பதே; இதோ - இந்தக் குறள்!
“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து”
அதிகாரம் - 122 - கனவுநிலை உரைத்தல்; பாடல் - 1211
அதோ தெரிகிறதே ஊர்ப் பொது மன்றம் - அந்த மன்றத்திலேதான் குடவோலை முறைப்படி அந்த ஊர்ப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் மக்கள். அந்தத் தலைமைப் பணிக்கென முறைப்படுத்தப்பட்டுள்ள தகுதியுள்ளவர்கள்தான் பொறுப்புக்களுக்குப் போட்டியிட உரிமை படைத்தவர் களாவார்கள். அத்தகைய தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஓலைகள், ஒரு குடத்தினுள் போடப்படும். மன்றத்தினுள் கூடியுள்ள ஊர் மக்கள் நடுவே, அந்த ஓலைகள் குடத்துடன் குலுக்கப்பட்டு, போட்டியில் கலந்து கொள்ளாத ஒருவர் ஓலைகளை ஒவ்வொன்றாக எடுத்திடுவார்.
எடுக்கப்பெற்ற வரிசைக்கேற்ப அந்த ஊர்ப் பொறுப்பாளர்கள் அமைவர். இந்தக் குடவோலை முறைத் தேர்தல், தமிழகத்துப் பழங்காலக் கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அத்தகைய அமைந்த மன்றங்களில், அந்தப் பணி நடைபெறாத காலத்தில், ஊர்மக்களில் பலர் கூடிப் பொழுது போக்குவர். அவர்தம் உரையாடல்களில் எத்தனையோ கருத்துக்கள் மிளிரும்! நல்லோர் மட்டுமே பொது மன்றங்களில் கூடுவர் என்று கூறிட இயலாதன்றோ!
ஊரார், ஒருவருக்கொருவர் பகையுற்ற நிலையில் வாழ்ந்தனர் என்றும் கூறிவிட முடியாதன்றோ!
அந்த மன்றத்தில் அன்று கூடியிருந்தோர், ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள்.
