உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 273
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 273 · 273 / 300

பிடிபட்ட சின்ன மருதுவையும், தோல்வியுற்ற பெரிய மருதுவையும் ஆங்கிலேயர் தூக்கிலே தொங்கவிட்டனர். காட்டிக்கொடுத்த அந்தக் கருத்தானாவது தப்பினானா என்றால்; அதுவுமில்லை! அவனையும் ஆங்கிலேய அதிகாரிகள் தூக்கில் மாட்டிக்கொன்று போட்டனர்.

என் செய்வது; அந்தக் கருத்தானின் சிலையும் இன்னமும் காளையார் கோயிலில் அவன் செய்த துரோகத்தின் அடையாளமாக நின்றுகொண்டு தானிருக்கிறது! தோழமையின் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய சிலை, துரோகத்தின் சின்னமாகத் திகழ்கிறது!

இதைத்தான் அன்றைக்கே அழகாகச் சுட்டிக்காட்டி இழித்துரைக்கிறது குறள்!

“மனங்குலையாத அறிவுத் தெளிவுடைய உறுதி படைத்தவர்கள்; துன்பத்திலிருந்து மீள முடியாத நெருக்கடி நிலையில் சிக்கிக்கொண்ட நேரத்திலும் இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.”

இந்தப் பொருளுக்குரிய குறள்தான் இது!

“இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்”

அதிகாரம் - 66 - வினைத்தூய்மை; பாடல் - 654

இளிவந்த = இழிவான; காட்சி = அறிவு

பேரனைப் பார்த்துப் பாட்டனார் கேட்டார், “உன்வாழ்க்கையின் குறிக் கோளாக எதைக் கொண்டிருக்கிறாய்?” என்று!

“தாத்தா! எனக்கு வயது பதினாறு ஆகிறது! இதுவரையில் யாராலும் இழப்படாமல் நல்லபெயர் எடுத்துவிட்டேன்! இன்னும் நான் வாழவேண்டிய பெரும்பகுதி நாட்களிலும் பிறரால் இழப்படாமல் வாழவே விரும்புகிறேன். அதுவே என் குறிக்கோள்! அதற்கு ஏற்ற நல்வழியைத் தாங்கள் எனக்குக் கூறவேண்டும்.”

“குழந்தாய்! இங்கிருந்து இருபது கல் தொலைவில் உள்ள அருவூரில் அன்பின் அடிகளார் என்ற பெரியவர் ஒருவர் வாழ்கிறார். வாழ்க்கையின் கடமைகளை உணர்த்தி அவர் ஒரு பெரும் நூல் எழுதிக்கொண்டிருக்கிறார். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதும் அந்த நூலுக்கு “நல்வாழ்க்கை” என்றே பெயர்! அவரைச் சூழ்ந்துள்ள நூற்றுக்கணக்கான மாணவர்க்கு அடிகளார், அவரது நூலில் இருந்தே கருத்துரைகளை எடுத்துக்கூறி, கனித்தமிழில் விளக்கங்கள் அளிக்கிறாராம்!

நீயும் விரும்பினால், அங்கு சென்று பயின்று வருதல் சிறப்புடையதாக அமையும்.”

பாட்டனின் சொற்கேட்டுப் பேரன், அருவூரை நோக்கி விரைந்தான். அடிகளார், “நல்வாழ்க்கை” எனும் சுவடியை எழுதி முடித்துவிட்டார் என்றும் புதிய மாணவர்களைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறார் என்றும் ஊரார் கூறிடக் கேட்டு, அடிகளார் மனை நோக்கிச் சென்றான்.

அடிகளார் மனையில் பயிற்சி முடித்த மாணவர்கள், பல்வேறு பொதுப் பணிகளுக்குச் சென்றிருந்தனர். அடிகளார் மட்டுமே தனித்திருந்தார். அவர் எழுதிய “நல்வாழ்க்கை” எனும் சுவடியைத் தலையணைபோல் தலைக்கு வைத்துக் கொண்டு சிந்தனைத் துயில் கொண்டிருந்தார்.

இளைஞன், “வணக்கம்” என்றுரைத்த ஒலி கேட்டுக் கண்விழித்து, “யார்?....என்ன வேண்டும்?” என்ற விளக்கம் கேட்டார்.

அவன் வந்துள்ள விபரமறிந்து மகிழ்ச்சியடைந்தார். ஆயினும் மாணவர் குழுவில் இணைத்துக்கொள்வதற்கு முன்பு வழக்கமாக ஏதாவது ஒரு சோதனை செய்வது உண்டு! அதை அவனிடமும் நடத்திப் பார்க்க விரும்பினார்!

“தம்பீ! இதோ என் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறேனே; இதுதான் எனது அரிய உழைப்பின் விளைவாக உருவாகியுள்ள ‘நல்வாழ்க்கை’ எனும் சுவடி! இதனை ஒருவன் படித்து முடித்துவிட்டால், அவன் வாழ்க்கை முழுதும் புகழ்மணம் கமழும்! யாரும் அவனை இகழ்ந்திடா வண்ணம் வாழ்ந்திடும் வகையைச் சொல்லும் இந்தச் சுவடி! இதிலிருந்தே நான் நாள்தோறும் மாணவர்களுக்குக் கருத்துக்களை வழங்குகிறேன்! நீயும் காத்திரு; நாளை முதல் நீயும் அவற்றைக் கேட்டு தெளியலாம்.”