குறளோவியம்
பகுதி 274 · 274 / 300
எனக் கூறிவிட்டுச் சுவடிக்கட்டில் தலைவைத்துப் படுத்துக்கொண்டார். இளைஞன் சிந்திக்கத் தொடங்கினான். அடிகளாருக்கு நல்ல உறக்கம்.
“ஏ, அப்பா! எத்தனை நாட்கள் இங்கு தங்கிப் பாடம் கற்பது! இந்தச் சுவடியே நம் கையில் கிடைத்துவிட்டால்? இதைப் படித்து நாமே நமது வாழ்க்கையைச் சீராக அமைத்துக்கொள்ளலாமே!”
சிந்தனைக்கு, சிறகுகளும் முளைத்தன! அடிகளாரை நோக்கினான்! அவர் ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தார்! அவர் தலை, சுவடிக் கட்டிலிருந்து கீழே இறங்கியிருந்தது! இதுதான் சமயம் - இந்தச் சுவடியை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டால்! யாருடைய துணையுமின்றி, பிறர் இகழாத வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளலாமல்லவா?
மெல்லச் சென்றான்! சுவடிக் கட்டைத் தூக்கிக்கொண்டான்! அங்கிருந்து பூனைபோல் வெளியேற முனைந்தபோது,
கலகலவெனச் சிரிப்பு! அடிகளாரின் சிரிப்புதான்! அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே எழுந்தார்!
“தம்பீ, உனக்குத் தேவையானதைத்தான் எடுத்துக் கொண்டாய்! நல்ல காரியத்திற்காகத்தான் இதைப் பயன் படுத்த எடுத்துக்கொண்டாய்! ஆனால் ஒன்று - சுவடியின் முதல் கருத்தாக நான் என்ன எழுதியிருக்கிறேன் தெரியுமா? இதோ; படித்துப்பார்! திருக்குறள் கருத்தொன்றைத் தீட்டியிருக்கிறேன்!”
அடிகளாரே அதைப் படித்துக் காட்டினார்.
“மற்றவர்களால் இகழப்படாமல் வாழ்ந்திட விரும்புகிறவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் களவாட எண்ணாதபடி தனது நெஞ்சத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.”
இளைஞன், தலைகுனிந்து விழிநீர் வழிய நின்றான்! எத்தன்மையான பொருளாக இருந்தாலும் அதனைப் பிறரை வஞ்சித்துப் பெற முனைதல் இகழ்ச்சிக்கு உரியது என்பதை உணர்ந்து, அடிகளார் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பின்னர் அவரது மாணவனாக ஏற்றுக்கொள்ளப் பட்டான்.
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு”
அதிகாரம் - 29 - கள்ளாமை; பாடல் - 281
எள்ளாமை = இகழப்படாமை; கள்ளாமை = களவு செய்யாமை
ஒரு வீட்டு அடுக்கலையில் சமையலுக்கும் உணவு பரிமாறுவதற்கும் ஏற்ற பாத்திரங்கள் இருந்தன! இல்லத்தரசி இரங்கை என்பவள் ஒருநாள் வீட்டு வேலைகளை ஓய்வின்றிக் கவனித்துவிட்டுக் களைப்பு மிகுதியால் அடுக்கலையிலேயே பாயும் தலையணையும்கூட இல்லாமல் படுத்துறங்கி விட்டாள். உறங்குவதற்கு முன்பு அவளுக்கு அவளது குடும்பத்தைப் பற்றிய ஒரு கவலை!
இரங்கையின் கணவன் எழிற்கோ, இனிய இதயமுடையவன். இரங்கும் இயல்புடையவன். எவரையும் மனம் நோகப் பேசுவதுகூட அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு ஒரு தம்பி - பெயர் கோவேந்தகோ! நல்ல ஆற்றலாளன். இருப்பினும் அண்ணனுக்கும் அவனுக்கும் ஒத்துவராத ஒரு சூழ்நிலை! இயற்கையிலேயே சினத்தை அடக்கிக்கொள்ளத் தெரியாத கோவேந்தகோ, அண்ணன் எழிற்கோவிடம் எப்படியோ பகைமை பாராட்டுகிறவனாக மாறிவிட்டான். இந்த நிலைமை, இரங்கையை வாட்டிக்கொண்டேயிருந்தது.
ஒற்றுமையாக இருந்த குடும்பத்திற்குள் இப்படியொரு உட்பகையா என்ற கவலையுடன் அடுக்கலையில் படுத்த அவள், சிந்தித்துக் கொண்டேயிருந்தாள்.
அன்று காலையில் கோவேந்தகோ அவளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “அண்ணீ! கவலை கொள்ளாதீர்கள்! எனக்கும் அண்ணனுக்கும் எந்தப் பகையும் இல்லை! இதோ; நீங்கள் பயன்படுத்துகிறீர்களே; இந்தச் செப்புதான் அண்ணன்! இந்தச் செப்பின் மூடியாக இருப்பதுதான் நான்!”
என்று உவமை கூறி விளக்கமளித்தான்.
