குறளோவியம்
பகுதி 272 · 272 / 300
இளந்துறவி, என்ன கூறுகிறார் என்று புரியவில்லை அழகர் குடியினருக்கு!
“செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமையானும் கெட்டுவிடும்! அழகர்குடி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தக் கொடியவன் செவத்தானை எதிர்த்துத் துரத்தியிருக்கலாம் அல்லவா; அதைச் செய்யாததால்தான் இவ்வளவு கேடுகளும்” என்று இளந்துறவி விளக்கினார்.
“ஆமாம்! அப்படியே செய்கிறோம்” என்று அழகர்குடி மக்கள் ஆர்த்தெழுந்தனர். செவத்தான் வீட்டை நோக்கித் திரண்டு வந்தனர். அப்போது செவத்தானுக்கு இருதய நோய் ஏற்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். உயிர் போகும் தருவாயில் அவன் ஊர்மக்களிடம் பேசினான்.
“எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்! நான் உங்களுக்குப் பல தீமைகள் செய்துவிட்டேன். நான் இறந்தபிறகு என் பிணத்தைக்கூட இந்த ஊர் இடுகாட்டில் புதைக்காதீர்கள்! இந்தப் பாவியின் பிணத்தை பக்கத்து ஊர் இடுகாட்டில் புதைத்து விடுங்கள்”
செவத்தானின் இறுதி வேண்டுகோளை அழகர்குடியினர் ஏற்றுக் கொண்டனர். அவன் கண் மூடியதும் அவன் பிணத்தைத் தூக்கிச்சென்று பக்கத்து ஊர் இடுகாட்டில் புதைத்தனர். செய்தியறிந்த பக்கத்து ஊரார் ஆத்திரப்பட்டு இடுகாட்டுக்குத் திரண்டு வந்தனர்.
“வெளியூர்ப் பிணத்தை எம் ஊரில் புதைப்பதா?” என வெகுண்டனர்! விளைவு? இருதரப்பாரும் மோதிக்கொண்டனர். இடுகாட்டில் இரு ஊராரப் பிணங்களும் இருபது வீழ்ந்தன! நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இச்செய்தி கேள்வியுற்ற இளந்துறவி, அங்கு ஓடிவந்து அமைதி உருவாக்கினார்!
“செய்ய வேண்டிய காரியத்தை முதலில் செய்யாமல் கெட்டீர்கள்! இப்போது செவத்தான் பேச்சைக் கேட்டு செய்யக்கூடாத காரியத்தைச் செய்தும் கெட்டீர்கள்!”
எனச் சொல்லி வருந்தினார். அழகர்குடி மக்கள் தலைகுனிந்து மெய்சோர்ந்து நின்றனர்.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”
அதிகாரம் - 47 - தெரிந்து செயல்வகை; பாடல் - 466
சிவகங்கைச் சீமையெனப் புகழப்படும் வீரம் மணந்திடும் மண்ணில் மருது பாண்டியர்களின் நினைவுச் சின்னங்களாக அவர்களது சிலைகள் மாத்திரமன்றி காளையார் கோயிலும் விளங்குகின்ற காட்சியை இன்றைக்கும் காணலாம். பெரிய மருது, சின்ன மருது என்ற அந்த மாவீரர்களின் சிலைகளுக்கிடையே கோயிலின் முகப்பின் வலதுபுறத்தில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற சிலையும் உள்ளது. அந்தச் சிலையுடன் ஒரு கரடியும் சிலையாக நிற்கிறது.
மருது பாண்டியர்களில் இளையவனான சின்ன மருதுவுக்கு உற்ற தோழனாக விளங்கிய கருத்தான் என்பவனின் சிலையே அது! வேட்டையாடுவதில் மிகத் திறமை படைத்த கருத்தானை, விலங்குகளை அவன் தனது வலைக்குள் வீழ்த்துகிற காரணத்தால் ‘வலையன்’ என்றும் அழைத்தார்கள் போலும்.
ஒரு சமயம் மருதிருவர், காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது அவர்களைக் கரடி ஒன்றின் தாக்குதலில் இருந்து காப்பாற்றி அந்தக் கரடியையும் சுட்டு வீழ்த்தினான் கருத்தான்! அவனது வீரத்தையும் துணிவையும் திறனையும் மெச்சிய மருது பாண்டியர், தங்களது சிலைகள் அமைக்கப்பட்டபோது கருத்தானுக்கும் ஒரு சிலை அமைத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் தக்க துணைவனாகவும் உற்ற நண்பனாகவும் மருது சகோதரர்களிடம் பழகிய அந்தக் கருத்தான், தனக்குப் பெருந்துன்பம் நேரப் போகி
றது என்று உணர்ந்தோ - அல்லது நேரிடக்கூடும் என்று ஐயமுற்றோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் தன்னல நோக்குடன் இழிசெயல் ஒன்றினைப் புரிந்திட்டான்.
வாணிபத்திற்கென வந்து இந்தியத்துணைக் கண்டத்தின் பல்வேறு நாடுகளை வளைத்துக்கொண்ட ஆங்கிலேயர், தென்னகத்தையும் - குறிப்பாகத் தமிழ் நாட்டையும் தங்கள் ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவர அரும்பாடுபட்டனர். மரணத்தை, மங்கையுடன் கொஞ்சும் மஞ்சமெனக் கருதிய உறுதிவாய்ந்த தமிழ் வீரர்களை, அவர்கள் எதிர்த்து அடிமைப்படுத்துவது அவ்வளவு எளிதாக இருந்திடவில்லை. அந்த வீரத்தலைவர்களின் வரிசையிலேதான் சிவகங்கை மன்னர்களான மருதுபாண்டியர்கள் இருந்தார்கள்.
அவர்களைத் தோற்கடிக்க ஆங்கிலேயர் அங்குலம் அங்குலமாகத்தான் முன்னேற வேண்டியிருந்தது. மருதிருவரின் படைகளுக்கு முன்னால் பல இடங்களில் ஆங்கிலேயர் படை சிதறி ஓடிற்று! எனினும் புதியமுறைப் போர்த் தளவாடங்களையும் தமிழினத்திலேயே துரோகம் புரியத் தயாராக இருந்த பாளையக்காரர்களையும் குறுநில மன்னர்களையும் துணையாய்க் கொண்டு ஆங்கிலேயர் வெற்றியின் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தனர். அதன் விளைவாகப் பதுங்கிப் பாய்வதற்கு பெரிய மருது, காட்டுக்குள் தனது படைகளுடன் செல்ல நேர்ந்தது.
இனி ஆங்கிலேயரை வெல்லமுடியாது எனக் கண்டுகொண்ட கருத்தான் எனும் அந்த உயிர்த்தோழன்; தன்னைக்காத்துக் கொண்டால் போதும் என்ற கருத்து உள்ளத்துடன், சின்ன மருதுவை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுத்து விட்டான்.
