குறளோவியம்
பகுதி 271 · 271 / 300
அமைச்சரவை ஆணைப்படியே, தன்மானச் சிங்கத்தைக் கோவேந்தன் கொலுமுகப்பில் விலங்கிட்டு நிறுத்திவைத்தனர்!
“எனடா - புலவரே! இந்நாட்டை ஆளும் வேந்தன் நான்! நீயோ என் பிடிக்குள் இருக்கின்ற எத்தனையோ இல்லறத்துக் குடிகளில் ஒரு மனிதன்! நின் இல்வாழ்வு நல்வாழ்வாய்த் திகழ்வதற்கு நாட்டமின்றி எதற்காக நாக்குத் தடிப்பேறி அலைகின்றாய்? எத்தனையோ பேர் எனைப்பாடி நத்திக்கிடக்கும் போது, நீ மட்டும் என் காலைத் தொத்திக் கிடக்க எதற்காகத் தயங்குகின்றாய்? விடையளித்திடுக! இல்லையேல் தலை நொறுக்கும் தண்டனைக்கு, நீ ஆளாவாய்!”
மமதையால் மன்னன் மிரட்டிய போதும் தன்மானச் சிங்கம் தலை தாழாமல் சொன்னான்.
“உன் கரம் வழங்குகின்ற பரிசுகள்; கனகமணிக்குவியல்களாய் என் கால்களை முத்தமிடினும் - அந்தக் கரைபட்ட பொருளை நான் தொடமாட்டேன். பழிக்கு அஞ்சாமல் நீ சேர்த்த பொருட்கணக்குப் பலகோடி என நான் அறிவேன்! ‘பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப்பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கை நெறி குறையாத சிறப்பு உண்டு’ என்று வள்ளுவர் கூறியதை மறவாத இல்லறத்தான் நான்!
நீ இந்நிலத்தை ஆண்டாலும் - உன் முன்னே இறங்காது என் மானம்! பாடமாட்டேன்; உன்னைப் பாடமாட்டேன், பழிக்கஞ்சாமல் பொருள் சேர்க்கும் உன்னைப் பாடமாட்டேன்”
காவலன் வெகுண்டான்! கடும்புலியின் உறுமலுடன் “கழுவிலேற்றுக இந்தக் கவிஞனை!” என்றான்.
“கரைபடிந்த உன் கரங்களாலே பொருள் பெறுவதைக் காட்டிலும் கழுமரத்தின் கூர்முனையே இன்பம்.”
எனச் சொல்லித் தண்டனைக்கு அஞ்சாமல் அங்கிருந்து நடந்திட்டான்! அவைக்களம் அசைவற்று அதிசயத்தால் திறந்த விழி மூடாமல் அப்படியே இருந்தது!
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்”
அதிகாரம் - 5 - இல்வாழ்வியல்; பாடல் - 44
பாத்தூண் = பகுத்து உண்ணுதல்
அழகர்குடி ஒரு சிற்றூர்! அந்தச் சிற்றூருக்கே ஒரு சிங்கம்போல செவத்தான் என்பவன் இருந்தான். காட்டில் எல்லா மிருகங்களும் சிங்கத்தைத்தானே அரசனாக ஏற்றுக்கொண்டு அஞ்சி நடுங்கிடும் என்பார்கள். அதைப்போல அழகர்குடி மக்கள் செவத்தானுக்குப் பயந்துகொண்டு பணிவிடை புரிந்து வாழ்ந்தனர். செவத்தான் செய்யாத கொடுமைகள் இல்லை. அந்த ஊர்த் தோட்டத்தில் அழகிய மலர் ஒன்று பூத்துச் சிரித்தால், அதை முகர்ந்து பார்த்து அதன் இதழ்களைக் கடித்துத் துப்பினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும்.
இப்படி எத்தனையோ பருவமலர்கள் அவன் படுக்கையில் காம்பொடிந்து நசுங்கிப்போய்விட்டன. உழைத்திடும் கூட்டம் சேர்த்திடும் பொருள் அனைத்துக்கும் அவனே உரிமை கொண்டாடுவான்.
அவன் நுழைந்தால், யார் வீட்டுக் கதவானாலும் தானே திறந்துகொள்ள வேண்டும்! அவன் எதிரில் எவராயினும் காலணி அணிந்து நடப்பதுகூட அவனை அவமதிப்பதாகக் கருதப்பட்டு, அக்குற்றம் புரிந்தோருக்கு ஆயிரம் சவுக்கடிகள் தண்டனையாகத் தரப்படும்.
நீர் வீழ்ச்சியில் குளித்திடும் பெண்கள் - தடாகத்தில் நீராடும் பெண்கள் - அவன் கண்களில் பட்டுவிட்டால் உடனடியாக நிர்வாணமாகக் காட்சி தர வேண்டும். அவர் தம் ஆடை அணிகலன்களை அவன் அபகரித்துக்கொண்டு மரக்கிளையில் அமர்ந்து “கலியுகக் கண்ணன்” என்று தன்னை வர்ணித்துக்கொள்வான்.
இவன் சேட்டைகளைத் தடுத்து அழகர்குடியில் தன்மான உணர்வு தலைதூக்கச் செய்ய, யாருமே முன்வரவில்லை!
அழகர்குடிக்குப் பல கல் தொலைவில் மலைப்பாறையொன்றில் குகைகுடைந்து வாழ்ந்துகொண்டிருந்த இளந் துறவியொருவர் - குறள் நெறி நெஞ்சினர் - இச்செய்தி கேள்வியுற்றுப் பெரிதும் வருந்தினார். அவரைச் சந்தித்த அழகர்குடி மக்கள் சிலரிடம், “செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்று கடிந்துகொண்டு கூறினார்.
