குறளோவியம்
பகுதி 254 · 254 / 300
பக்தர், அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார்:
“தம்பி! பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, தான் மட்டுமே அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல், தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பைப் பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்துகொள்க தம்பி!”
இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும், அந்த இளைஞன் தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.
“தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்.”
என்கிறது குறள்!
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீர் ஆர்க்கே உள.”
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்; பாடல் - 527
ஆக்கம் = உயர்வு அன்ன = போன்ற நீரார் = இயல்புடையவர்
கோத்த மணிகளையும் கோத்திடாத மணிகளையும் விற்பனை செய்யும் தொழில் மேற்கொண்டு, காலை முதல் மாலை வரையில் ஊர் ஊராக அலைபவன் அழகன். அந்தப் பெயர், அவனுக்குக் காரணப் பெயராகக்கூட அமைந்துவிட்டது எனலாம். மீன்குஞ்சுகளைப் போன்ற மீசை! தேக்குமரம் கடைந்து செய்யப்பட்டது போன்ற தேகம்! அகன்ற - கூரிய - ஆனால், குளிர்ச்சி பொருந்திய கண்கள்!
ஊரெல்லாம் அலைந்து திரிந்து மணி வியாபாரம் நடத்தும் அவன், நாலு நாட்களுக்கு ஒரு முறை எப்படியும் திங்களூர் வீதிகளுக்கு வந்துவிடுவான். அவன் வருகையை அந்த ஊரில் எல்லோரையும்விட, அவள் ஒருத்தி மட்டும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். அவளுக்கும்கூடப் பெயர் பொருத்தம்தான். அழகி, அவளது பெயர்.
வழக்கம்போல் அழகன் அன்று திங்களூர் வந்தான். மாலை நேரம்; வியாபாரம் அப்படியொன்றும் அவனுக்கு மன நிறைவாக இல்லை. அதனால் பரவாயில்லை; அவளைச் சந்திப்பதுதானே அந்த ஊர் வருகையின் தலையாய நோக்கம்!
ஏமாற்றமே அவனுக்குக் காத்திருந்தது. ஒவ்வொரு வீடாகச் சென்று மணி விற்பனையை நடத்திவிட்டு, வேக வேகமாக அவள் வீட்டுப் பக்கம் வந்தான்.
ஒவ்வொரு தடவையும் அவள், வாயிற்புறம் நின்று அவன் கொண்டு வரும் மணிமாலைகளையும் மணிகளையும் பார்த்துவிட்டு அவனையும் விழிகளால் ஆசை தீரப் பருகிவிட்டு - ஏதாவது ஒன்றிரண்டு மணிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவாள். அதற்கு மேல் வீதிப்பக்கம் நின்றால் - அதுவும் ஓர் ஆடவன் முன் நின்றால், அவளது தாயின் கடுமையான குரல், வீட்டுக்கூடத்திலிருந்து கிளம்பிவிடும். அழகன் - அழகி இருவரிடையே அதன் காரணமாகவோ என்னவோ வேறு எந்தப் பேச்சும் இருந்ததில்லை.
மணி வாங்குதல், காசு கொடுத்தல், விழிகள் நான்கும் ஒன்றோடொன்று மோதுதல், பிரிந்து விடுதல் - அழகனுக்கு அதிலே ஒரு இன்பம். அதற்காகவே, நாலு நாட்களுக்கு ஒருமுறை திங்களூரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான்.
அன்றும் அந்த வீட்டுக்கு வந்தான். அழைத்துப் பார்த்தான்; கூவினான், மணி வியாபாரி வந்திருப்பதாக! யாரும் வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
கதவோரம் சென்று பார்த்தான். பூட்டப்பட்டிருந்தது. பூட்டை இழுத்துப் பார்த்தான். கெட்டியாகப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.
