குறளோவியம்
பகுதி 253 · 253 / 300
மக்களால் அரசுகள் தேர்வு செய்யப்படவேண்டுமென்ற மக்களாட்சியின் மாண்பினைப் போற்றும் காலம் இது!
எனினும், அரசுக்குரிய கடமை எதுவென வலியுறுத்தப்படுகிறது!
பொருட்பாலில் கூறப்படும் இந்தப் பொறுப்புணர்வுக்கு மேலும் வலிசேர்க்கும் வண்ணம் அறத்துப்பால் - துறவறவியலில், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஒரு பாடல்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
ஓர் உயிரைக்கூட கொல்லாததுதான் அறம் என்று திட்டவட்டமாகக் கூறும் வள்ளுவர், கொல்லாமைக்குத் தனிச் சிறப்பையே அளிக்கிறார்.
ஆட்சி நடத்துவோரின் கொள்கை காரணமாக - செல்வமும் செழிப்பும் ஓரிடத்தில் குவிந்து சிலர் வாழவும் - பலர் வாடவுமான நிலை அமைந்திடின், வறுமையால் செத்திடும் மக்கள், மறைமுகமாகக் கொல்லப்படுகிறார்கள் என்று தானே பொருள்!
அந்தக் கொலைச்செயல் நிறுத்தப்பட வேண்டுமானால், கோவேந்திகளின் கொள்கை, பொதுவுடைமை மணங்கமழ்வதாகவும், அவர்களால் அமையும் அரசே சிறந்ததெனப் போற்றப்படுவதாகவும் இருத்தல் வேண்டும்!
அத்தகைய அரசை உருவாக்கும் மக்கள், வலியுறுத்த வேண்டியது என்ன?
“எத்தனையோ அறநூல்கள் அறநெறிகளைத் தொகுத்தளித் திருக்கின்றன! ஆனால், அந்த நூல்களில் காணப்படும் அறநெறிகள் அனைத்துக்கும் தலையானது ஒன்று உண்டு! அதுதான், உள்ளவன் இல்லாதவன் என்ற நிலையை மாற்றி, இருப்பதை அனைவர்க்குமே பகுத்துக்கொள்ளக் கூடிய கொள்கையை வகுத்து, எல்லா உயிர்களையும் வாழ வைப்பது என்பதாகும்.”
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் தோன்றிய புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரன், பொதுவுடைமைக் கொள்கையின் வழிகாட்டி - வள்ளுவன் என நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் இனிக்கின்றதன்றோ!
அதிகாரம் - 39 - இறைமாட்சி; பாடல் - 385 அதிகாரம் - 33 - கொல்லாமை; பாடல் - 322
பிள்ளையார் கோயில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர், அவர் கையில் இருக்கிற தேங்காய் குறைத் தேங்காய் என்பதைப் புரிந்து கொண்டு!
பக்தர், பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து, சிதறிய தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்குத் தேங்காய்த் துண்டுகள்! ஓரிருவருக்கு உடைந்துபோன ஓடுகள்! ஓர் இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி ஒன்று சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான்.
ஒரு சிறு துண்டுத் தேங்காய்கூடக் கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான்; வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு, எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்துப் பழிப்புக் காட்டிக்கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்.
“தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?” என்று பரிவுடன் கேட்டார்.
“என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாத்தனத்திற்கு நானா பொறுப்பு?”
என்று அந்த இளைஞன் பதில் சொன்னான். அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில், நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுப் போனாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை, பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த விநாடியே அது “கா! கா!”
என்று கத்தத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்து காக்கைகள் அங்கு வந்து சேர்ந்தன. அவை, ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாட்டாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.
