உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 252
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 252 · 252 / 300

குறட்பாக்களை அறம், பொருள், இன்பம் எனும் முப்பால்களாக வள்ளுவர் வடித்துத் தந்திருக்கக்கூடும். ஆனால், அதிகாரத் தலைப்புகள் கட்டி ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறள்களை வரிசைப்படுத்தி அவரே வழங்கியிருக்க முடியுமா? இது ஐயத்திற்குரியதே! அவருக்குப் பின் வந்தோர் இயல்களையும் அதிகாரங்களையும் பிரித்துத் தொகுத்திருப்பர் என்றே தெளிந்திட வேண்டியிருக்கிறது. துறவறத்திற்குரிய பல அறிவுரைகள் இல்லறத்தாரும் ஏற்று நடந்திட வேண்டிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.

பொருட்பாலில் சொல்லப்படும் கருத்துக்கள், நெறிமுறைகள், மக்களைப் பேணிக்காக்கும் அரசின் பொறுப்புமிக்க கடமைகள் சிலவற்றை அறத்துப்பாலிலும் காணமுடிகிறது! பொருட்பாலுக்கே உரியதாகத் தோன்றும் கருத்துக்களை, அறத்துப்பாலில் இணைத்திருக்கின்றனரே என்ற வியப்பும்கூட எழுகிறது!

அனைத்துக்கும் அறவழியே அடிப்படை என்பதால், பொருட்பாலுக்குரியது போலத் தோன்றும் கருத்துக்களை அறத்துப்பாலில் காண்பதும் இயற்கைதானே!

நிலமும் கடலும் அறமெனக் கொண்டால் - அவற்றில் விளையும் அனைத்தும் பொருட்பால் எனக் கொள்வதே சிறப்பு!

ஆரணங்கின் கழுத்தில் அணி சேர்ப்பது முத்தாரம்!

அந்த ஆரத்திற்குரிய முத்துக்கள் கிடைக்குமிடம் ஆழ்கடலின் அடியில்தானே!

பொன் அணி பூண்டு புன்னகை சிந்துகிறாள் பெண்ணழகு!

அந்தப் பொன்னைத் தன் மடியில் சுமப்பது பூமித் தாய்தானே!

முத்தாரமும் பொன்னணியும் பொருட்பாலில் ஒளிவிடுகின்றன எனினும் முத்தும் பொன்னும் விளைவது அறம் எனும் கடலிலும் நிலத்திலும் அல்லவா?

இப்படித்தான் பொருட்பாலில் பொருத்தமுடையதென எண்ணிடும் சில புதிய சிந்தனைகளை - இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு திருவள்ளுவரின் எண்ணச் சோலையில் மலர்ந்த புரட்சிக் கருத்துக்களை - அறத்துப்பாலில் தொகுத்தளித்தனர் போலும்!

முடியாட்சி இருந்த காலத்தில் அந்த முதுபெரும் அறிஞர் திருமகனார்; வள்ளுவத்தை உலகிற்கு வழங்கினார்.

இப்போதும் குடியாட்சி என்ற பெயரால், பல நாடுகளில் வல்லார் வகுத்த தடியாட்சிகள் நடைபெறுகின்றன.

குடியாட்சி, குடிமக்களால் தங்களை ஆளத் தகுந்தவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்ட ஆட்சி!

முடியாட்சி புரிந்தோர்க்குச் சொன்ன அறிவுரைகள், இன்று குடியாட்சி நடத்துவோருக்கும் பொருந்தும்!

மக்களால் அரசு மட்டும் அமைக்கப்படுதல் போதாது! அந்த மக்கள் அரசே மக் களுக்குத் தேவையானவற்றை விளைவித்து - தருவித்து - அவற்றைக் காப்பாற்றி - அப்படி பாதுகாக்கப்பட்டதை மக்கள் அனைவர்க்கும் வகுத்தளித்திடல் வேண்டும்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.”

இந்தக் குறள், பொருட்பாலின் தொடக்கத்தில் அரசியலில் - இறை மாட்சியெனும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது! அது மணிமகுடம் இருந்த காலம்! அதனால், இறை என்று மன்னவனின் கடமையைச் சுட்டிக் காட்டினார்.