குறளோவியம்
பகுதி 255 · 255 / 300
“என்னா மணி வியாபாரம்! பூட்டை இழுத்துப் பார்க்கிறே! வீட்டிலே யாருமில்லேன்னா, தேட்டை போடலாமேன்னு நினைப்பா?”
எதிர்த்த வீட்டு மூதாட்டியொருத்தி, கனத்த குரலில் கடுமையாகவும் கேலியாகவும் கேட்டுக்கொண்டே வந்தாள்!
“சே! சே! இல்லை பாட்டி! வழக்கமாக இங்கேயொரு பெண்மணி, என்னிடம் மணியோ, மணிமாலையோ வாங்குவாள். இந்தத் தடவை நல்ல மாலைகள் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டில் யாரையும் காணவில்லையே என்று பார்க்கிறேன்”
என்றான் அழகன், சோர்ந்த முகத்துடன்!
“மாலை கொண்டு வந்தாயா? அந்தப் பெண்ணுக்குக் காலையில்தான் ஒருத்தன் மணமாலை சூட்டியிருக்கான். பக்கத்து ஊர்லேதான் திருமணம். நாங்கள்லாம் அங்கே போயிட்டுதான் வார்றோம்.”
எதிர்வீட்டு மூதாட்டி, இதைச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். அழகனால் நிற்க முடியவில்லை. அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். தலை சுற்றியது. அப்படியே சாய்ந்துவிட்டான். உலகமே இருண்டுவிட்டது போன்ற ஓர் உணர்ச்சி. அழகி! அழகி! என அவன் உதடுகள் உச்சரித்துக்கொண்டே அடங்கிவிட்டன.
முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மெல்லிய கரமொன்று அவன் முகத்தை வருடியது. கண் விழித்தான். மலர்த் தலையணை மீது அவன் தலையிருப்பது போல ஓர் உணர்வு. விழிகளை அகலவிரித்துப் பார்த்தான். அழகியின் மடிமீது தான் படுத்திருந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிரித்தாள். “நன்றாக ஏமாந்தீர்களா?”
என்று கேட்டாள்.
மீண்டும் ஏமாற்றமா? அழகன், அழகியின் கழுத்தைப் பார்த்தான். தாலியில்லை! ஆறுதல்! அப்பாடா என்ற பெருமூச்சு!
“இதெல்லாம் என்ன நாடகம் அழகி?”
“நாடகமில்லை! நீங்கள் உண்மையிலேயே என் மீது அன்பு கொண்டிருக்கிறீர்களா என அறிந்துகொள்ள, என் தாயும் எதிர்வீட்டுப் பாட்டியும் நடத்திய சோதனை!”
“அதுதானே பார்த்தேன்! நீ என்னை விடுத்து யாரையும் மணக்க மாட்டாய் என்று எனக்கு முன்னமேயே தெரியும்.”
“எப்படித் தெரியும்?”
துள்ளிடும் புள்ளிமானாம் இந்தத் துடியிடையாள் மீது இயற்கை அள்ளிக் கொட்டியிருக்கும் அழகுக்குள்ளே; இதோ இந்த மணிமாலைக்குள்ளே ஊடுருவுகின்ற நூலைப்போல, நமது காதலைப் பற்றிய குறிப்பு ஒன்று இருப்பதை நான் உணர்ந்திருந்தேன் கண்மணி!”
அழகன், மணிமாலையையும் அதனுள் கோத்துள்ள நூலையும் காட்டினான். அழகி! இது அறுந்திடாத உறுதியான நூல்! இல்லையா என் இன்பமே!” என்றான்.
அவள் முந்திக்கொள்வதற்குள், அவன் முந்திக்கொண்டு தழுவிக் கொண்டான்.
“தெருத் திண்ணையிது!”
