உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 246
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 246 · 246 / 300

தூண்டில்காரச் சிறுவன் ஒருவன் அவற்றைத் தூக்கித் தன் குவளையில் போட்டுக்கொண்டு பறந்தேவிட்டான்!

என் அழகு விழிகளே! உங்கள் சதிராட்டங்களையும் துள்ளல்களையும் இன்றைக்குக் காணமுடியவில்லையே! அப்போது நீங்கள் புரிந்த ஆரவாரம் கொஞ்சமா?

மல்லிகைசூடிய கூந்தலுடன் நெற்றிக் குங்குமம் ஒளிவிட மாலைநேரத்தில் வீட்டு வாயிலில் கோலம் தீட்டிக்கொண்டிருப்பேன். அவர் தெருக்கோடியில் வருவார். என்னைத் தனியாக விட்டுவிட்டு; என் கண்களே! நீங்கள் இருவரும் அவரிடம் ஓடி விடுவீர்கள். அவரை எதிர்கொண்டழைத்து வீட்டுக்குள் அமரவைத்து, அவரது திண்தோள்களில் தொத்திக்கொள்வீர்கள். அசையும் அவர் இதழ்களின் அழகையே சுவைத்துக்கொண்டிருப்பீர்கள். உணவருந்த உட்காருவார்; சாப்பிடும் அழகையே அப்படியே பார்த்துக்கொண்டு மெய்ம்மறந்து போவீர்கள்.

படுக்கையில் சாய்ந்திருக்கும் அவர் கையில் உள்ள புத்தகத்தை என் மெல்லிய விரல்களால் வாங்கி வைத்துவிட்டுப் பால்கிண்ணத்தை அவர் உதட்டருகே கொண்டுபோவேன். அதற்குள் நீங்கள் அவரது விழிகளுடன் விரகதாப விளையாட்டுக்களில் ஈடுபட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு இப்போது கிடைத்துள்ள பரிசைப் பார்த்தீர்களா?

கொய்யாமரத்துச் சிட்டுக்குருவியைப் பூனை கொளவிக்கொண்டு போனது போல, என்னையும் அவரையும் “பிரிவு” தனிமைப்படுத்திவிட்டது. கரையில் குதித்த மீன்களைப்போலத் துடிக்கிறீர்கள்.

இப்போது கண்ணீர்! கண்ணீர்! உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

“விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்களே! இன்று உறங்க முடியாமல் தவித்துத் துன்பத்தால் வடிக்கின்ற கண்ணீரும் அற்றுப்போகட்டும்.”

இப்படியொரு பெண்மணி, தன் கண்களுக்கே சாபம் கொடுக்கிறாள், பிரிவு வேதனையைத் தாங்கமுடியாமல்!

“உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண்.”

அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1177

உழந்துழந்து = வருந்தி வருந்தி

“உயிர் நீப்பர் மானம்” எனத் திட்டவட்டமாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

உடலில் இருந்து மயிர் நீக்கப்பட்ட கவரிமான் எப்படி உயிர் வாழாதோ அதைப்போலக் கவரிமான் போன்றவர்கள், தங்களுடைய மானம் அழியக்கூடிய சூழ்நிலை உருவானால் உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அவரது கணிப்பு! மான உணர்வுக்கு அவ்வளவு சிறப்புத்தன்மை காட்டி எழுதப்பட்ட அறிவுரையாகும் அது!

‘குடியியல்’ என்ற தலைப்பில் மானத்தின் மாண்பு கூறும் வள்ளுவர்; அதே தலைப்பில் பிறிதொரு அதிகாரத்தில் குடிப்பெருமை காத்திடுவதற்கு எவ்வளவு பெரிய தியாகத்திற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார் தெரியுமா?

‘குடி’ என்ற சொல், குடும்பத்தையும் குறிக்கிறது! பிறந்த குலத்தையும் குறிப்பிடுகிறது! சார்ந்துள்ள இனத்தையும் குறித்து நிற்கிறது! குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது உயர்வாக வைத்து எண்ணப்படுகிற மானம்; குலப் பெருமைக்கு ஒளி தருகின்ற வகையில் போற்றப்பட வேண்டிய மானம்; இனத்தைக் காப்பாற்றுவதற்கும் இனத்தை முன்னேற்றுவதற்கும் ஒருவர் செயல்படும்போது எப்படி நோக்கப்படுகிறது என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் கவனிக்க வேண்டும்.

நிறைந்த செல்வக் குட்டையில் கிடந்து ஊறுவதற்காகச் சிலர் மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சேற்று நீரில் குதித்துவிடுகிறார்கள்.