குறளோவியம்
பகுதி 232 · 232 / 300
“வெண்ணெய்” என்றாள் தோழி.
“ஓர் இளைஞன் இப்போதுதான் ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு தேடினான்! நீயோ கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறாய்! நல்ல வேடிக்கைகள்!” என்று எந்திழை சிரித்துக்கொண்டே இருந்தாள்.
“சரி, சரி! சிரிப்பை நிறுத்து! நீ மட்டும் என்னவாம்? உன்காதலனை உன் உள்ளத்திலேயே வைத்துக்கொண்டு, அவனை வேறு எங்கேயோ எவிடமோ தேடிச் செல்கிறாயே! அதை உனக்கு உணர்த்திடத்தான், ஆட்டுக்குட்டி தேடும் இளைஞனை அனுப்பினேன்! பிறகு நானே இங்கு வந்தேன்! நான் மாத்திரம் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது வேடிக்கை; அந்த இளைஞன் தோளில் ஆட்டைப் போட்டுக்கொண்டு அதைத் தேடுவது மாத்திரம் வேடிக்கை; நீ காதலனை நெஞ்சில் வைத்துக்கொண்டு, அவனைத் தேடியலைவது மாத்திரம் வேடிக்கை இல்லையாகும்?”
எந்திழை, தோழியின் குறும்பில் பொதிந்து கிடக்கும் உண்மையைப் புரிந்துகொண்டு, நாணத்தால் முகம் சிவந்தாள்.
“உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு”
அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1249
உழை = இடம்
சேறி = செல்கின்றாய்
கற்கள் அவன் காலைக்குத்தின! இரத்தினங்கள் பதித்தவை போல் இரு பாதங்களும் காட்சி தந்தன! கோடை வெயில் கொளுத்திற்று- குடை பிடிக்க வழியில் ஒரு மரமும் தயாராக இல்லை! தலை வெடித்தாலும் பரவாயில்லையென்று கால்களை முடுக்கி விட்டான்; கடும்பயணத்தை நிறுத்தாமல்! நாக்கைச் சுருட்டியது தாகம்- பாக்கை வெட்டும் கருவிபோலப் பசி, குடலை வெட்டியது! இன்னும் பாதித் தொலைவு இருக்கிறது இன்னலை வென்று நடந்திடுக என்று இதயத்தில் வேண்டுகோள் பிறந்தது-
அந்தியும் வந்தது, அக்கினிப்பகல் நீங்கி! மந்தியாம் இருட்டும் வேகமாய் வந்து குந்திக்கொண்டது! கோட்டான் கீதம் - கொடும்புலி உறுமல் காட்டானைப் பிளிறல் - நரிகளின் ஊளை! வழக்கமாய் நடக்கும் வனமகோற்சவம் அது! பார்த்தும் கேட்டும் பழக்கமில்லாதவன் பயந்தே மடிவான்! இவனோ; காப்பப்படையில் ஊறியபோதே அச்சம் என்பதைத் தவிர்த்த மறவன் அதனால் நடந்தான் - நடந்தான் - நடந்துகொண்டே இருந்தான்! பாம்பொன்று சுற்றியது காலில்- பசலைக்கொடி போல எடுத்துப் போட்டுப் பாதை மாறாமல் பார்த்தபடி பாழ் காட்டில் பயணம் செய்தான்!
தூற்றலும் போட்டது வானம்- கூற்றமாய்ச் சிரித்தது மின்னல்- மூட்டமாய்ச் சேர்ந்த முகில்கள் முழங்கின இடிகளாய்ப் பின்னே! வரவேற்பையேற்று வந்தன மழையும் புயலும்! வாடவுமில்லை - வருந்தவுமில்லை அவன் வழியில், வைத்த விழி தவறவுமில்லை! நடந்தான் - நடந்தான் - நடந்துகொண்டே இருந்தான்! நஞ்செனத் தோன்றிய துன்பங்கள் அனைத்தும் பஞ்செனப் பறந்தன - பயணமும் முடிந்தது!... நாடிய இலட்சியக் காதலி காத்திருந்தாள் - பிறர் கோடியைக் கொட்டினும் தொடாமலே
குடிசையில் ஒண்டி அவனைப் பார்த்திருந்தாள்! வந்தவன் அவளை வாரி அணைத்தான் - அந்த நந்தவன மலரும், வண்டின் முத்தம் மொண்டு குடித்தாள்! இதனைத்தான் வள்ளுவ அறிஞன் துணிவுடன் துன்பத்தைக் கடந்தால் பணிவுடன் இன்பம் வந்து கைகட்டி நிற்குமென்றான்.
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.”
அதிகாரம் - 67 - வினைத்திட்பம்; பாடல் - 669
இந்த நூற்றாண்டின் காந்திய வழித்தோன்றல் வினோபா எனில், இரு கருத்துக்கு இடமேயில்லை. அவரது கருத்துக்களில் வேறுபாடு கொண்டோர் பலர் உண்டெனினும் அவரது உள்ள உறுதிக்கு, அவரெல்லாம் மதிப்பளிக்கவே செய்வர். சமுதாயத்தைச் சூழ்ந்துள்ள இருள் அகற்ற, அவர் கைகளில் ஏந்தியது அகல் விளக்குதான் எனினும் அவரது உள்ளத்தின் உறுதியொளியை உலகு தொழுது எனலாம்.
ஓய்வின்றி மக்களுக்காக உழைத்துக்கொண்டேயிருந்த அந்த முதியவரை, மாரடைப்பு நோய், திடீரெனத் தாக்கியது. சற்று நலம் பெற்றார் எனினும் இனி உடல் பலம் பெற்று உழைத்திட இயலாது என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் நடைப்பிண வாழ்வை வெறுத்திட்டார். சிறந்த மருந்துகள் அருந்துக என்றும் மருத்துவ மேதைகளின் சிகிச்சைகளை ஏற்றிடுக என்றும் அவரது மாணவ மணிகளும் உற்றார் உறவினரும் ஏன்; நாடாள்பவர்களுங்கூட மனமுருகி வேண்டினர்.
அவரோ, மெல்ல மெல்லத் தன் உயிரை விழுங்கும் சாவுக்கே இடமளிப்பேன் எனக் கூறிவிட்டார். பால்பொழியும் பசுவொன்றை வாயில் கொளவிக் கொண்ட மலைப்பாம்பு, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குதல் போல், அந்த உறுதி மிக்க
