குறளோவியம்
பகுதி 231 · 231 / 300
சிறு துன்பங்களையே தாங்கமுடியாமல் வேறுபட்டுப் போய்விடும் கோழை மனிதர்களின் மேலுள்ள கோபத்தை; மிகப்பெரும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, வேறுபடாமல் உறுதியாக நிற்கின்ற கொள்கையுடையவர்களை மனந் திறந்து போற்றுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்! அது எவ்வாறு? அதை ஒரு பண்பு என்றே சிறப்பிக்கிறார். அதுவும் எத்தகைய பண்பாம்? பண்புக் கடலாம்!
“ஊழிக்காலத்து மாற்றங்களே நேர்ந்தபோதிலும்கூட, ஒருவர் - தாம் கொண்ட கொள்கையில் மாற்றமில்லாது அந்தத் துன்பங்களை எதிர்கொண்டு, உறுதியாக நின்றால், அவர் பண்பெனும் கடல் எனப் புகழப்படுவாராம்!”
அந்தக் கருத்தை உள்ளடக்கியதே இந்தக் குறள்:
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.”
அதிகாரம் - 99 - சான்றாண்மை; பாடல் - 989
சான்றாண்மை = சால்பு எனும் தன்மை
சால்பு = பண்பு
எந்திழை, தூரிகை கொண்டு எழுதாத ஓவியம்! எழுதுகோல் படைத்திடாத காவியம்! சில நாழிகைச் சுகத்தில், அவள் பெற்றோர் வடித்தெடுத்து பத்துத் திங்கள் மெருகேற்றி, இருபது ஆண்டுகளாய் இயற்கைப் பொலிவேற்றி நடமாட விட்டுள்ள பொற்றாமரை! வாகான வடிவும் தேன்பாகான மொழியும் அவளைத் துணைவியாய் அடைந்தவனுக்குத் தொடர் இன்பமாய்ப் பொழியும்! அவ்வாறே அடைந்திட்டான் அவளை ஆடற்கோ எனும் ஆணழகன்! முடைந்திட்ட ஓலைகள் போல் முழுநாளும் இணைந்திருந்தார்!
ஒருநாள் வந்து தொலைந்தது பிரிவு எனும் பெரும்புயல்! “சில நாள்தான், சென்று வருகிறேன் என் செல்வமே!” என்று, அந்நாள்வரை அவள் சிந்தாத கண்ணீரைச் சிந்தச் செய்து அவன் பயணப்பட்டான், வெளியூர் நோக்கி!
அவன் அன்புப் பணியில் அன்றாடம் நனைந்து பூத்துக் குலுங்கும் அந்த மலர், தனிமையில் வாடியது! வழி நோக்கி விழி தேயியது! அருவியின் ஓரம் நின்று அவனைக் கண்டிட அலைந்தது உள்ளம்! ஆற்றங்கரையில் சென்று, அவன் எங்குளான் என ஏங்கினாள் எந்திழை! அப்போது ஆட்டுக்குட்டியொன்றைத் தோளில் போட்டுக்கொண்டு ஆயர்குல இளைஞன் ஒருவன், அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடியவன், அவளைக் கண்டவுடன் “அக்காள்! அக்காள்! அலையாய் அலைகிறேன், என்
ஆட்டுக்குட்டியைக் காணவில்லை! தேடித் தவிக்கிறேன்! நீ கண்டாயா?” எனக் கேட்டான்!
துன்பத்திலும் எந்திழைக்குச் சிரிப்புத் தாங்கவில்லை!
“ஏடா தம்பி, ஆட்டுக்குட்டியை உன் தோளிலேயே போட்டுக்கொண்டு தேடுகிறாயே!” எனக் கேலி செய்தாள்.
இளைஞன், நினைவு வந்தவனாக, “அடேடே! ஆமாம்!” என்று கூறிவிட்டு அவளுக்கு நன்றி சொல்லிச் சென்றுவிட்டான்.
எந்திழையின் தோழியொருத்தி, அவளைக் குறும்பு செய்வதற்கென்றே திட்டமிட்டபடி அங்கு வந்தாள்! “எங்கேடி இந்தப்பக்கம்?” என்றாள் எந்திழை! “ஒன்றுமில்லையடி! எனக்கு அவசரமாக நெய் வேண்டும்; அதற்காக ஆயர்பாடிக்குப் புறப்பட்டேன்” என்றாள் தோழி!
“கையில் என்ன வைத்திருக்கிறாய் குடுவையில்?” என்று அவளைப்பார்த்து எந்திழை கேட்டாள்!
