உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 230
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 230 · 230 / 300

பெரிய நதியொன்றில் பிரிந்து கழனிகளை வளமாக்கும் கால்வாய் ஒன்று! எப்போதும் நீர் நிறைந்திருக்கும். கடந்து செல்வதற்குப் பனைமரப் பாலம் ஒன்று உண்டு. இக்கரையில் இருந்து அவன் எண்ணினான், அவளே வருவாள் என்று! அக்கரையிலிருந்து அவள் நம்பினாள், அவனே வருவானென்று!

ஆனால், அவர்களைப் பிடித்திருந்த காமநோய், அவர்தம் திட உள்ளத்தைத் தீபோலக் கருக்கிவிட்டது. பாலத்திலே அவனும் நடக்கத் தொடங்கினான்; அவளும் நடக்கத் தொடங்கினாள். இருவரும் பாலத்தின் நடுவே ஒருவரையொருவர் வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றனர்.

சற்றுத் தொலைவில் யாரோ சிரிப்பது கேட்டது! உற்றுக் கவனித்தனர்! அவளது தோழிதான்!

“தம்மை வெறுத்துப் பிரிந்தவரின் பின்னால் செல்லாமல் இருப்போம் என்ற மான உணர்வு, இந்தக் காதல் நோய்க்காரர்களுக்கு மட்டும் கிடையாது.”

என்றாள் தோழி!

“என்னடி சொல்கிறாய்” எனச் சினந்தாள், சிவந்த முகத்துடன் அந்தச் சேயிழையாள்!

“குறளடி குறள்” எனக் கூறியவாறு, அந்த இடத்தைவிட்டுக் குதித்தோடினாள் தோழி.

“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று”

அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1255

செற்றார் = வெறுத்துவிட்டவர்

நீலவானும் நெடுந்திரைக் கடலும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டனவோ? வான் நிறமும் கடல் வண்ணமும் இருளைத் தோற்கடிக்கும் கரு வண்ணம் கொண்ட கொடுமைதான் என்னே! வான் வீசுகின்ற மழைச் சரங்களை கடலின் அலைகள், எத்துணை உயரம் எழும்பி எதிர்கொண்டு தாக்குகின்றன! புயலா? சூறாவளியா? தென்னைமரங்களும் பனைமரங்களும் தெருவில் கிளம்பும் தூசி களைப் போலப் பறக்கின்றனவே! ஆலமரங்களைப் பூச்செண்டுகளைப்போலக் காற்றின் கரங்கள், எத்தனை கல் தொலைவு தூக்கி எறிகின்றன!

அடடா! அதோ, அழகு நகரங்களின் மணிமாடங்கள், கூடங்கள் எல்லாமே அழிகின்றன.

“இவ்வளவு பெரிய அழிவா?” என்று நிலமகள் ஆச்சரியத்துடன் வாயைப் பிளக்கிறாள். அவளது அகண்ட வாய்க்குள்ளே நாடுகளும் காடுகளும் விழுகின்றன. அதைத் தாங்கமுடியாமல் அவள் வயிறு பாளம் பாளமாக வெடிக்கிறது. வலி தாங்காது துடிக்கிறாள். அந்தத் துடிப்பில் வையகமே துடிக்கிறது. அதுதான் பூகம்பம்! பூகம்பம், தான் உண்டு செரிக்க ஏற்பட்ட எரிமலைகளாகக் குமுறுகிறது. “நான் எரிப்பேன்” என்று நெருப்புக் குழம்பை ஆறுகளாகப் பெருக்கிவிடும் எரிமலைகளும்;

“நான் அணைப்பேன்” என்று பொங்கிக் கொந்தளித்துவரும் கடல் அலைகளும் ஒரே காரியத்தைத்தான் செய்கின்றன!

இயற்கையின் இந்தப் பயங்கரக்கூத்து அன்றாடம் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது நடைபெற்றுத்தான் செய்கிறது. ஊர்கள் அழிக்கப்படலாம் - நாடுகள் நாசமுறலாம் - ஏன்; உலகமே கடலால் பந்தாடப்பட்டு - கடும் புயல் சூறாவளியால் சுக்கி எறியப்பட்டு - நிலநடுக்கங்களால் நிலை குலைந்திட்டு - அழிவுக்குழ் அலங்கோல உருண்டையாக எறிந்துகொண்டிருக்கலாம்! அந்த அழிவைத்தான் ஊழி என்றனர் முன்னோர்!

அத்தகைய ஊழிபோன்ற துன்பங்கள், தொல்லைகள், துயரங்கள் மனிதனைத் துரத்துவதுண்டு. அப்படித் துரத்தும்போது அசையாமல், ஆடாமல், நிலை குலையாமல், நெஞ்சம் பதறாமல், கைபிசையாமல், கலங்கி அழாமல், எந்த வேறுபாடுகள் ஏற்பட்டிடினும், தான் எக்காரணம்கொண்டும் வேறுபடாமல் இருப்பவனை, வள்ளுவர் எவ்வாறு புகழ்கிறார் தெரியுமா?

அந்தச் செயலை வீரமென்றோ, துணிவு என்றோ பாராட்டி அத்துடன் முடித்து விடவில்லை, அவர்!