குறளோவியம்
பகுதி 224 · 224 / 300
நான் கேள்விகளைப் பரபரப்பாக அடுக்கினேன்; நண்பன் அமைதியாக விளக்கமளித்தான்.
“உலகிற் பலரைச் சந்தித்த வள்ளுவர், அந்த ஒரு மனிதனையும் சந்தித்திருக்கிறார். அவன், தன்னை மிகப்பெரிய அறிவாற்றல் படைத்தவனாகக் காட்டிக் கொண்டானாம்! எதுவும் தனக்குத் தெரியாது என்ற போதிலும் எல்லாம் தெரிந்தவனாகப் பெருமை பேசிக்கொண்டானாம்! ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டுமென்று அவனது உதடுகள் துடிதுடித்துக் கொண்டேயிருக்குமாம். எதையும் ஆழமாகச் சிந்தித்து, அமைதியாக எடுத்துரைக்கும் மனப்பக்குவமேயில்லாதவனாம்.
ஆனால், அவன் தன்னை அறிவாளியெனக் கருதிக்கொண்டு, வள்ளுவரிடமே வாதத்திற்கு வந்திருக்கிறான். வள்ளுவரையே எதிர்த்திடும் ஆற்றலாளன் என, வையம் புகழும் என எதிர்பார்த்திருக்கிறான். அவனைப் புரிந்துகொண்டார் வள்ளுவர். அறிவுச் சூன்யம் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இருந்தாலும், அந்த அறிவிலி எதையாவது உளறித் தன்னைப் பேரறிஞனாக அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றது, வள்ளுவருக்குப் பெருங் கோபத்தை ஏற்படுத்தியது.
அவனைப் பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா?”
“அடடா! தெரியாது! சொல்லப்பா சொல்!”
அந்த மனிதனைப் பார்த்து, “உன்னைப் போன்ற அறிவிலிகள், எல்லாம் அறிந்தவர்களைப்போலக் கூத்தடிப்பது எப்படியிருக்கிறதென்றால், இயல்பாகவே இரண்டு கொங்கைகளும் இல்லாத ஒருத்தி; பெண்தன்மையுடையவளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பியது போல இருக்கிறது” என்று வள்ளுவர் கூறினார்!”
“அப்படியா? அவ்வளவு சீற்றம் பிறந்துவிட்டதா அவருக்கு?”
“ஆமாம் - இதோ சொல்கிறேன் கேள் அந்தக் குறளை.”
நண்பன் குறிப்பிட்ட திருக்குறள் இதுதான்.
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று”
அதிகாரம் - 41 - கல்லாமை; பாடல் - 402
பாலூட்டி, மகனை வளர்த்துச் சீராட்டி மகிழ்ந்த பருவமுதல் - அவன் பள்ளிக்குச் செல்லும்போது வாயிற்புறம் நின்று வழியனுப்பிவிட்டுப் பின்னழகு கண்டு பூரித்த காலம் வரையில், அந்தத் தாய் பொழிந்த அன்பு மழையிலேதான் அவன் நனைந்துகிடந்தான்.
அரும்பனைய மீசை தோன்றி, ஆண்மகன் என ஊரார் - உற்றார் - மகிழ்ந்து போற்றி உறுதியும் வீரமும் ஒருங்கே பெற்றவன் என்று நல்லோர் எல்லாம் வாழ்த்துரைத்த பருவத்திலேதான், கொத்திக்கொண்டு அவன் தோளில் ஒரு பச்சைக்கிளி! அந்தச் சித்திரச் செந்தமிழ்ப் பாவையிடம் சிந்தை பறிகொடுத்தான்! ஆயினும் அன்னை தந்தையிடம் அவன் கொண்டிருந்த அன்புக்கு அணுவளவும் குறைவு நேர்ந்ததில்லை.
தகுதிக்கேற்றவாறு செல்வம் கொழிக்கும் மனையிற் பிறக்காத அந்த மங்கை நல்லாளைத் தன் மருமகளாக ஏற்றிட அவனது தந்தை தயாராக இல்லை. அதை அவனிடமே அவர் நேரடியாகக் கூறிவிட்டார். அவனோ, அவன் இதயத்தில் இடம் பிடித்துக்கொண்டவளை விட்டுத்தர விரும்பவில்லை! அதனால் தந்தையின் மிரட்டல்களும் எடுபடவில்லை! தாய் தவித்தாள்! செய்வதறியாது செயலற்று விழித்தாள்!
நம்பிவந்த நங்கையை நடு ஆற்றில் விடுவதற்கு அந்த நம்பியும் உடன் படவில்லை. பெற்றோரை எதிர்த்து வெற்றிகாண முடியாமல் வெளியூர் ஓடிவிட்டான், அந்த ஒளியுமிழ் தங்கச் சிலையுடன்!
மானம் போனதென்று குலப்பெருமையால் குமுறிக் கொந்தளித்துத் தந்தை நெஞ்சுடைத்து உயிர் விட்டார்.
தொலைவிலிருந்து செய்திகேட்டு அவன் துடித்தான்! தந்தையின் சாவுக்குக் காரணமானவன், தாயின் முகத்தைக் காண்பதுதான் எவ்வாறு என ஏங்கித் தவித்தான்!
ஆண்டுகள் சில உருண்டோடின! அவனும் அவளும் - தந்தையும் தாயுமாயினர்! கிள்ளைபோல் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தனர்!
